ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் சாதனை

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் சாதனை

ஆரம்பப் பாடசாலை, வித்தியாலயம், மகா வித்தியாலயம், மத்திய கல்லூரி, நவோதய பாடசாலை தேசி யப் பாடசாலை என்பவை இந்நாட் டிலுள்ள மத்திய அரச, மாகாண நிருவாக பாடசாலைகளின் வகைகள் ஆகும். இங்கெல்லாம் முதலாம் தரம் முதல் 12 ஆம் தரம் வரையில் மாணவர்கள் இலங்கையின் கல்வித் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் கற்பார்கள்.

க. பொ. த. சாதாரண தர எல்லைக் கோட்டை அடையும் வரையில் பெற் றோர்களுக்கோ அவர்களின் பிள்ளை களுக்கோ எந்தப் பிரச்சினையும் இந் தப் பாடசாலைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி க. பொ. த. உயர் தரத்துக்குக் காலடி எடுத்து வைக்கும் போதுதான் இவர்கள் தமக்கு முன்னால் உள்ள தடைக் கற்கள் பற்றி முதன் முறையாக உணர்வதுடன் பேசவும் தொடங்குகிறார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட பாட விதான வரிசையில் சில பாடசாலைகளில் சில பாடங்களைப் படிக்கக் கூடியதாக இருக்கும் வேளையில் மற்றும் சில பாடசாலைகளில் அவ்வாறான பாடங் களைப் போதிக்க வசதி இல்லாதிருக்கும். இக் காரணத்தால் மாணவர்கள் அத்தகைய பாடங்கள் கிடைக்கத்தக்க தான வேறு பாடசாலைகளுக்கு அனு மதி கோருவது வழக்கம். தீவிரமான கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக புத்தளம் போன்ற பிர தேசங்களில் க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு கணித, விஞ்ஞானப் பாடங்களை படிப்பதென்பது மிகத் திறமையான மாணவர்களுக்குக் கூட சிம்ம சொப்பனம்தான்.

இந்த நிலை காரணமாக தலைமுறை தலைமுறையாக புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ள புத்தளம் தேர்தல் தொகுதியின் பாடசாலைகளி லிருந்து மாணவர்கள் தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு படையெடுப்பது புத்தளத்துக்குப் பழக்கப்பட்டுப் போன விவகாரம்.

மாதம்பை, அக்குறனை, கல்முனை இப்படி அந்தப் பாடசாலைகளின் பட்டியல் விரிகிறது. அதுவும் வசதியுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்குத் தான் இயலுமாக இருந்தது. இதனால் தம் பிள்ளைகளை வைத்தியர்களாக பொறியியலாளர்களாக இன்னோரன்ன பிற துறைகளின் உயர் நிலையில் பார்க்கத் துடிக்கும் பெற்றோர்கள் தாங்க முடியாத செலவுச் சுமையைத் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தார்கள். செலவுத் தொகையை தாக்குப் பிடிக்க மாட்டாத குடும்பங்களின் பிள்ளைகள் வேறு வழியின்றி கிடைக்கத் தக்கதான பாடங்களை ஊர்ப் பாட சாலைகளில் விருப்பமின்றியேனும் கற்பதுடன் திருப்தி கொள்ள வேண்டிய நிலை அல்லது குடும்பத்துக்கே உரிய ஒரே சொத்தான சிறு நிலத் துண்டு களையும் விற்க வேண்டிய நிலை காலாகாலமாக இங்கு நிலவி வந்தது.

இப் பரிதாப நிலை காரணமாக மருத்துவ, பொறியியல் பீடங்களில் புத்தளம் தொகுதி மாணவர்களுக்குக் கிடைத்த ஆசனங்கள் அற்பமும் சொற் பமுமே ஆகும். புத்தளம் மாவட்டத்தின் தெதுரு ஓயா நதிக்குத் தென்புறமாக உள்ள பாடசாலைகளுக்கு இந்தப் பிரச்சினைகள் இருக்கவில்லை. அந்நதிக்கு வடக்கே உள்ள புத்தளம் தேர்தற் தொகுதியில்தான் இத்தனை பிரச்சினைகளுமாகும்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பது பற்றி பல காலமாக புத்தளத்து கல்விமான்கள் மத்தியில் பேசப்பட்டு அவ்வப்போது கூட்டங்களில் ஆரா யப்பட்டு வந்தாலும் தீர்வு கைக்கெட்டிய தூரத்தில் இருக்கவில்லை. ஆனாலும் அது தீர்வே இல்லாத பிரச்சினையாகவும் போய்விடவில்லை.

புத்தளம் நகர பிதா கே. ஏ. பாயிஸ் 2008 இல் பிரதி அமைச்சரான கையோடு பிரதேசத்தின் கற்றவர்களைக் கொண்ட கல்வி மேம்பாட்டுக் குழு அமைக்கப் பட்டது.

பாத்திமாவிலிருந்து பிரிக்கப்பட்ட பாடசாலைககு 'செய்னப்' எனப் பெயரிட்டும் சாஹிராவிலிருந்து பிரி க்கப்பட்ட பாடசாலைக்கு சாஹிராவின் பெயரையே கொடுத்தும் இரண்டு ஆரம்பப் பாடசாலைகளை பலத்த சவால்களுக்கு மத்தியில் அமைத்ததன் மூலம் கல்வி அபிவிருத்திக்கு அத்தி வாரமிடப்பட்டது.

இலங்கை திறந்த பல்லைக்கழகத்தின் புத்தளம் மாவட்ட கற்கை நிலையம் புத்தளம் நகரில் அமைக்கப்பட்டது அப்பயணத்தின் அடுத்தமைல் கல் ஆகும். அதற்கும் அடுத்த மைல் கல்லை 'புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானப் பாடசாலையாக' புத்தளம் நகர் கண்டது.

அது க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு விஞ்ஞானப் பாடங்களை மாத்திரம் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் போதிக்கும் ஒரு தனித்துவமான மாகாண பாடசாலையாக விளங்குகிறது. க. பொ. த. உயர்தர விஞ்ஞான வகுப்புக்களை மாத்திரம் கொண்டிருப்பதால் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி உண்மையிலேயே ஒரு தனி ரகம்தான்.

2009 நவம்பர் 21 ஆம் திகதி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் மாவட்ட கற்கை நிலையத்தைத் திறந்து வைக்க வருகை தந்தபோது விழா மேடையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானப் பாடசாலையை திறக்கும் பிரகடனத்தை வெளியிட்டார். அப்படித்தான் இந்த தனி ரக கல்லூரி ஜனனமானது.

80 மாணவர்களுடன் தனது முதலாவது கல்விப் பயணத்தை இப்பாடசாலை ஆரம்பித்தது. அது ஆரம்பிக்கப்படும்போது ஏற்கனவே ஒரு வருடத்தை வேறு பாடசலைகளில் கற்ற விஞ்ஞானத் துறை மாணவர்கள் ஜனாதிபதி விஞ்ஞானப் பாடசாலையில் ஓராண்டு கற்ற நிலையில்தான் 2010ல் பரீட்சைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

ஆயினும் இரண்டு ஆண்டுகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்த புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானப் பாடசாலையின் முதற் தொகுதி மாணவர்கள் 2011 ஆம் ஆண்டில் முதன் முறையாக பரீட்சைக்கு அமர்ந்து மூவர் மருத்துவத் துறைக்கும், ஒருவர் பொறியியல் துறைக்குமாக மொத்தம் 30 பேர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றனர். 2012 ஆம் ஆண்டில் இப்பாடசாலையிலிருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் 100 பேர். இவர்களில் 50 பேர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளதோடு இருவர் மருத்துவத் துறைக்கும். மூவர் பொறியியற் துறைக்கும் தெரிவு செய்யப்படும் தகுதியைப் பெற்றுள்ளனர். மொத்தமாக உயர்தர பரீட்சை சித்தியடைந்தோர் தொகை 65 என அதிபர் ஐ. எல். சிராஜுத்தீன் தெரிவிக்கின்றார். விஞ்ஞான, கணித ஆசிரியர் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து வந்த புத்தளத்தைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுச் சாதனை என இதனைச் சொல்லலாம்.

க. பொ. த. உயர் தரப் பரீட்சைக்கான மும்மொழி விஞ்ஞான பாடசாலையாக இருந்தாலும் சிங்கள மொழியில் விஞ்ஞானப் பாடங்களை கற்க சிங்களப் பாடசாலைகளின் மாணவர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தால் முஸ்லிம், தமிழ் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இப்பாடசாலை தனது கல்விச் சேவையை தொடர்கிறது.

வேறு பாடசாலைகளிலிருந்து விஞ்ஞான ஆசிரியர்களை தற்காலிக இணைப்புச் செய்யும் அடிப்படையில் இயங்கிய இப்பாடசாலைகூட கடுமையான வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் ஒரு வரலாற்றைப் படைக்க முடிந்ததென்றால் அதிபரும் அவரது உதவி ஆசிரியர் குழாமும் பெற்றோரின் ஒத்துழைப்பும்தான் காரணமாகும்.

புத்தளத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி விஞ்ஞான பாடசாலையும், அது ஈட்டிவரும் சாதனைகளும் அர்ப்பணிப்பின் அறுவடைதான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி