ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

ஐந்து தொன் வெடி மருந்து தமிழக - கேரள எல்லையில் சிக்கியது

ஐந்து தொன் வெடி மருந்து தமிழக - கேரள எல்லையில் சிக்கியது

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் முழு இந்தியாவையே உலுக்கியது. இக் குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவை- கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் சுங்கத்துறை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த மினி லொரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த லொரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் (5 ஆயிரம் கிலோ) அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருள் இருப்பது தெரிய வந்தது. அந்த லொரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லொரியை ஓட்டி வந்த அப்துல் கரீம் (27) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்தவர். கைதான சாரதி பாலக்காடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வெடி மருந்து பொருள் எடுத்து செல்ல உரிய அனுமதி இல்லாததால் லொரி சாரதியிடம் பொலிஸார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

மினி லொரியில் ஏற்றி வந்த வெடி பொருள் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து அங்குள்ள ஓலப்பகுதிக்கு கடத்தப்படுவது தெரிய வந்தது. ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இந்த நேரத்தில் வெடி பொருளை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை- கேரளாவை தகர்க்க மினி லொரியில் வெடிபொருளை ஏற்றி வந்தார்களா? என்பது குறித்தும் மற்றொரு கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. கோவை- கேரள எல்லையில் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையை சுற்றிலும் உள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி