ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

மேற்குக் கரை எங்கும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

பலஸ்தீன கைதி மரணம்:

மேற்குக் கரை எங்கும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் சிறையில் மரணமடைந்த பலஸ்தீன இளைஞனின் இறுதி கிரியை மேற்குக் கரையில் நேற்று இடம்பெற்ற நிலையில் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

மரணமடைந்த 30 வயதான அரபாத் ஜரதத் ஹெப்ரொன் நகரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் துன்புறுத்தல் காரணமாக கொல்லப்பட்டதாக பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளதோடு பிரேத பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இந்த மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்குக் கரையெங்கும் கலவரங்கள் இடம்பெற்ற தோடு இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குக் கரையின் சயீட் கிராமத்தைச் சேர்ந்த ஜரதத், கல்லெறிந்து இஸ்ரேலிய குடிமகன் ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பின்னர் 6 தினங்கள் கழித்து இரு குழந்தைகளின் தந்தையான ஜரதத் இஸ்ரேலின் மெக்கிடோ சிறைச்சாலையில் மரணமடைந்தார். மாரடைப்புக் காரணமாகவே இவர் மரணமடைந்ததாக இஸ்ரேல் கைதிகள் சேவை திணைக்களம் குறிப்பிட்டது.

ஆனால் இஸ்ரேல் பிரேத பரிசோதனையில், விலா எலும்பு முறிவு மற்றும் உராய்வுக்கு உள்ளாகி இருப்பது தெளிவாக தென்படுவதாக பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த காயம் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் மேற்குக் கரை நகரங்களான ரமல்லா, நப்லுஸ், ஜெனின் உட்பட பல பகுதிகளிலும் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதோடு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க இஸ்ரேல் வீரர்கள் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குறிப்பிட் டுள்ளார்.

ஹமாஸ் ஆளுகைக்கு உட்பட்ட காசாவில் பெண்கள் ஒன்றிணைந்து இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பதற்றத்தை தணிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பலஸ்தீன நிர்வாகத்தை கோரியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி