ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
மாணவர்களிடம் பணம் திரட்டும் சுற்று நிருபங்களை திருத்த மேல் மாகாண சபை தீர்மானம்

ஹொரணை பாடசாலை மாணவி விவகாரம்:

மாணவர்களிடம் பணம் திரட்டும் சுற்று நிருபங்களை திருத்த மேல் மாகாண சபை தீர்மானம்

முதல்வர் பிரசன்ன

*அதிபர், ஆசிரியர்களில் தவறில்லை

* பணம் செலுத்துவதற்காக மாணவி திருடவில்லை

ஹொரணை பாடசாலை மாணவியிடம் பணம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதையடுத்து மாணவர்களிடம் பணம் திரட்டுவது தொடர்பான சுற்று நிருபங்களை திருத்த மேல் மாகாண சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் மேல் மாகாண சபையில் யோசனையொன்றை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.மேற்படி சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து பாடசாலை அதிபரும் ஆசிரியையும் விடுவிக்கப்பட் டுள்ள அதேவேளை தேங்காய் திருடியது தொடர்பான வழக்கை தென்னந்தோட்ட உரிமையாளர் வாபஸ் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாடசாலைக்கு சாயம் பூசுவதற்கு பணம் திரட்டுவதற்காக தேங்காய்களை திருடியதாக மாணவி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், வகுப்பறைக்கு அலுமாரி வாங்கவும் கதிரை, மேசைகளை திருத்தி சாயம் பூசவுமே மாணவர்களிடம் பணம் திரட்டப்பட் டுள்ளது. குறித்த மாணவி பாடசாலைக்கு ஜனவரி மாத இறுதியில் ஓரிரு நாட்கள் மட்டுமே வந்துள்ளதோடு பாடசாலை அபிவிருத்திக் கூட்டங்களுக்கும் அவர்களின் பெற்றோர் வந்தது கிடையாது.

வசதி இல்லாததால் குறித்த வகுப்பில் உள்ள இரு மாணவிகளிடம் பணம் பெறப்படவில்லை. வகுப்பறையை திருத்தும் பணிகள் ஜனவரி 12ம் திகதி யாகும் போது பூர்த்தியடைந்துள்ள நிலையிலே இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்பிரதேச ஐ.தே.க. அமைப்பாளர் ஒருவரே இதனை பூதாகரமாக்கி அரசியல் லாபம் பெற முயன்றுள்ளார்.

குறித்த மாணவி வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் இருந்து பாடசாலை கட்டணங்கள் எதுவும் அறவிடப்படுவதில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் அதிபரோ, ஆசிரியையோ எதுவித தவறும் செய்யவில்லை என்பது மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான குழுவின் அறிக்கை மூலம் புலனாகியுள் ளது. மாணவியின் எதிர்காலம் குறித்து கருத்திற்கொண்டு அவர் தொடர்பான சில விடயங்களை வெளி யிட முடியாது. அவருக்கு தேவையான உளவள ஆலோ சனை மருத்துவ உதவி என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி தொடர்பில் தேவை யான நடவடிக்கைகள் எடுக்குமாறு நாடு திரும்பிய உடன் ஜனாதிபதி எனக்கு பணித்தார்.

இந்த ஒரு சம்பவத்தினால் முழுப் பாடசாலை கட்டமைப்பிற்கும் சிக்கல் எழுந்துள்ளது. பாடசாலை அபிவிருத்திக்காக மாதமொன்றிற்கு 200 முதல் 250 ரூபாவே அறவிட முடியும்எனவும் மாணவர்களுக்கு பாதிப்பு எழாதவாறு பணம் அறவிடப்பட வேண்டும் எனவும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளோம். இதனை திருத்த அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் வரையறை விதிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.

பாடசாலைகளுக்கும் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடப்படுவது தொடர்பில் பொதுவான தேசிய கொள்ளை தயா ரிப்பது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் பேச உள்ளோம். ஏனென்றால் மாகாணத் துக்கு மாகாணம் அறவிடப்படும் தொகை வித்தியாசப்படுகிறது.

மேல் மாகாணத்தில் உள்ள 1268 பாடசாலைகளுக்கும் சாயம் பூசுவதற்காக கடந்த 2 வருடங்களில் ரூபா 195 மில்லியன் வழங்கப்பட்டது. குறித்த பாடசாலைக்கு 2 வருடங்களிலும் தலா 1 1/2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. பாடசாலைகளின் சகல தேவைகளையும் அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது. அதனாலே பெற்றோரிடம் பணம் சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? மாணவிக்காக ஆஜரான சட்டத்தரணி யார் என்பன குறித்தும் இதிலுள்ள அரசியல் பின்னணி பற்றியும் அறிந்தால் இந்தப் பிரச்சினையின் உண்மையான காரணத்தை அறியலாம்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அறிக்கையொன்றை வழங்க உள்ளோம் என்றார்.

இந்த ஊடக மாநாட்டில் மாகாண கல்விப் பணிப்பாளர் பி. என். ஐலப்பெரும, மேல் மாகாண பிரதி பிரதம செயலாளர் ஈ.ஜே.பி. கருணாதாஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி