ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
பரிசுத்த பாப்பரசர் திடீர் இராஜினாமா

பரிசுத்த பாப்பரசர் திடீர் இராஜினாமா

பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் இம்மாத இறுதியில் இராஜினாமா செய்வ தாக நேற்று திடீரென அறிவித்துள்ளார். 85 வயதில் தொடர்ந்து பணியில் நீடிக்க முடி யாது என அவர் அறி வித்துள்ளார்.

பாப்பரசர் இரண்டா வது ஜோன் போல் மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 2005 ஆம்ஆண்டில் அவர் பாப்பரசராக பொறுப் பேற்றார். இந்நிலையில் பாப்பரசர் ஒருவர் பதவி விலகியது குறித்து நவீன வரலாற்றில் பதியப்படவில்லை. இதனால் வரலாற்றில் இது முதல் தடவையாக பதிவாகவுள்ளது. பாப்பரசர் ஒருவர் இறந்த பின்னரே ஆட்சி பீடத்திற்கு நியமிக்கப்படுவது சம்பிரதாயமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

எனினும் பரிசுத்த பாப்பரசர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜி. எம். டி. நேரப்படி 19.00 மணிக்கு தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வார்

என வத்திக்கான் பேச்சாளர் பெட்ரிகோ மலம்பார்டி நேற்று அறிவித்தார்.

ஜோசப் அலோசியஸ்ரட்சிங்கன் என்ற பெயருடைய தற்போதைய பாப்பரசர் தனது 78 ஆவது வயதிலேயே பாப்பரசராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், அவர் அதிகூடிய வயதில் பாப் பரசராக நியமிக்கப்பட்டோர் வரிசையிலும் இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் பாப்பரசர் பதவி விலகி யதும் சம்பிரதாய பூர்வமாக புதிய பாப்பரசர் நியமிக்கப்படுவார் என வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.

எனினும் புதிய பாப்பரசரை தேர்வுசெய்வ தற்கான கர்தினால்களின் கூட்டம் குறித்து இன்னும் உறுதி செய்யப்பட வில்லை. புனித பாப்பரசர் பதவி விலகியதும் வத்திக்கானின் சிரேஷ்ட கரிதினால் அவரது பதவிகளை பொறுப்பேற்பார்.

புனித பாப்பரசர் சமீப காலமாக அவரால் பாப்பரசருக்கான பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ரோம் நகரில் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் அவர் கையில் வைத்திருந்த உரையை படிக்க முடியாமல் சிரமப்பட்டார்.

இந்நிலையில் தனது ராஜினாமா குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மனச்சாட்சியை முன்வைத்து கடவுளிடம் கேட்ட பின்னரே நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். முதுமை காரணமாக இனி பாப்பரசர் பணிகளை செம்மையாக நிறைவேற்ற எனது உடல் நிலை இடம் தரவில்லை. இன்றைய உலகில் அவசரமான மாறுதல்களுக்கு இடையே நற்செய்தியை அறிவிக்கவும் இந்தத் தொண்டை செம்மனே செய்யவும் மனம் மற்றும் உடல் இரண்டின் வலிமையும் அவசியமாகும். கடந்த சில மாதங்களாக எனது உடல் வலிமை குன்றிவிட்டது. இதனால் என்னால் இந்த பணியை சரியாக செய்ய முடியாது என்பதை உணர்ந்ததால் தான் பதவி விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கி. பி. 1415 ஆம் ஆண்டில் 7 ஆவது க்ரகோரி பாப்பரசர் பதவி விலகியதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி