ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
கொழும்பு மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்ற தீர்மானம்

கொழும்பு மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்ற தீர்மானம்

25 ஏக்கரில் நிர்மாணம் 1357 மில். ரூபா செலவு

கொழும்பு மெனிங்க் காய்கறி மற்றும் பழவகை மொத்த விற் பனைச் சந்தையை சகல வசதிகளையும் கொண்ட சந்தையாக பேலியாகொட பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பேலியாகொட மீன் சந்தைக்கு அருகிலுள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இச் சந்தை நிர்மாணிக்கப்படவிருக்கின்றது.

விவசாயிகள், நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் நன்மை பெறக் கூடியவகையில் இச்சந்தை அமைக் கப்படவுள்ளது.

பேலியாகொடையில் நிர்மாணிக்கப்ப டும் இப்புதிய காய்கறி மற்றும் பழவகை மொத்த விற்பனை சந்தை இரு மாடிகளைக் கொண்டதாக இருக்கும். இங்கு 120 சதுர அடிகளை கொண்ட 400 கடை அறைகள் அமைக்கப்படும்.

அதே நேரம் காய்கறி வகைகளைச் சில்லறை விலையில் விற்பனை செய்யக் கூடிய 662 கடைகளையும், காய்கறி மற்றும் பழ வகைகளை பதப்படுத்தக் கூடிய நிலையம், ஊழியர்கள் ஓய்வெடுக்கும் கூடம், சிற்றுண்டிச்சாலை சேவை வழங்கல் கட்டிடம் 135 லொறி களும், 200 கார்களும் தரித்து வைக்கக் கூடிய தரிப்பிட வசதி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இச்சந்தை விளங்கும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

இச் சந்தை நிர்மாணம் காய்கறி மொத்த விற்பனைச் சந்தை, சில்லறை சந்தை மற்றும் பூமி மேம்பாடு என மூன்று பகுதிகளாக மேற்கொள்ளப்படும். இதற் கென 1357 மில்லியன் ரூபாவைச் செல வைச் செலவிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்து இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற உயர் மட்ட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இப் பேச்சுவார்த்தையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சு, நெடுஞ்சாலைகள் அமைச்சு, மேல் மாகாண சபை, கொழும்பு மாநகர சபை, பேலியாகொட நகர சபை, மார்பெட் பொது வர்த்தக சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொழும்பு மெனிங்க் காய்கறி மற்றும் பழவகை சந்தை தற்போது சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பிலேயே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி