ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 
78 இலங்கை மீனவர்களும் மூன்று மாதத்தில் விடுதலை

78 இலங்கை மீனவர்களும் மூன்று மாதத்தில் விடுதலை

இந்திய மாநில அரசுகள் நடவடிக்கை
 

இந்தியக் கடற்பரப்பில் வைத்து கடந்த மூன்று வருட காலங்களில் கைது செய்யப்பட்டுள்ள 78 இலங்கை மீன வர்களையும், 16 படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இவர்களில் 16 பேரை கடந்த இரு வார காலங்களில் விடுதலை செய்ய முடிந்ததாக புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரக உயரதிகாரியொருவர் தெரிவித்தார். அதேவேளை ஏனையோரை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் தமது மீன் பிடிப் படகுகள் சேதமடைந்ததால் இந்தியக் கடற்பரப்பில் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களையும் இந்திய கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால் அதனைத் திருத்தியவுடன் அவர்களை அதே படகுடன் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

அவ்வதிகாரி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது 62 இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்படவில்லை.

ஆந்திரா, கேரளா, அந்தமான் தீவு, நிக்கோபா தீவு, மினிக்கோய் தீவுகளிலும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பிராந்திய அரசுக்கள் மேற்கொண்ட போதிலும் அவர்களுக்கு எதிராக வழங்குகளத் தொடராமல் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கம் பிராந்திய அரசுக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவர்கள் தொடர்பில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எதிர்வரும் மூன்று மாதத்திற்குள் நிறைவடைந்ததும் உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவர் எனவும் அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நீதியில் செயற்படுவதென இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதேவேளை, அவர்களை மனிதாபிமான ரீதியில் நடத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக எத்தகைய துன்புறுத்தல்களையோ துப்பாக்கி வேட்டுக்களையோ மேற்கொள்ளக் கூடாது என்ன இரு அரசாங்கங்களும் கடற் படைகளுக்கு அறிவித்துள்ளன. வறியவர்களாகிய மீனவர்கள் தமது ஜீவனோபாயத்திற்காகவே கடல் எல்லைகளைத் தாண்டி தெரிந்தோ தெரியாமலோ தொழில் செய்கின்றனர் என அரசுகள் குறிப்பிட்டுள்ளன.

இத்தகைய தீர்மானங்கள் மீனவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவது திண்ணம். (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி