ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 
பொருளாதார வளர்ச்சியை எட்ட இந்தியாவின் பங்களிப்பு அவசியம்

பொருளாதார வளர்ச்சியை எட்ட இந்தியாவின் பங்களிப்பு அவசியம்

* இந்தியா எம்மீது ஆதிக்கம் செலுத்தவில்லை
* கூட்டறிக்கையே வெளியிடப்பட்டது; ஒப்பந்தமல்ல
* அரசு - கூட்டமைப்பு இணக்கப்பாடு
 

இந்தியா எம்மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. எம்மை கட்டுப்படுத்தவுமில்லை. நாம் எதிர்பார்க்கின்ற பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியா எமக்கு உதவி செய்வதற்கே முன்வந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியாவுடன் இணைந்து கூட்டறிக்கையே வெளியிடப்பட்டது. இது ஒப்பந்தம் அல்ல. எமது அயல் நாடான இந்தியாவை குரோத மனப்பான்மையுடன் நோக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து பேசினார். இலங்கையின் பிரச்சினைக்கு உதவவும் இந்தியா விரும்புகிறது. தேசிய ரீதியான ஒரு தீர்வையே நாம் விரும்புகிறோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளிலும் இரு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கும் வந்திருக்கிறோம். இதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். பாராளுமன்ற தெரிவுக்குழு காலத்தையும் நேரத்தையும் இழுத்தடிக்கும் வேலை என சிலர் எண்ணலாம். ஆனால் உண்மையில் காலத்தையும் நேரத்தையும் இழுத்தடிக்கும் வேலையல்ல. விரைவான ஒரு தீர்வை மிக விரைவாக பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

செனல் 4 வீடியோ தொடர்பாக இப்போது புதிய ஒளிநாடாவுக்கும் ஒலி நாடாவுக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை உண்மையானவையா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெறுகின்றன.

இந்த வீடியோ ஜெனீவாவில் காண் பிக்கப்பட்டதற்காக உண்மையாகி விடமுடியாது.

மூன்று தசாப்தங்களின் பின்னர் இப்போது நிலைமை மாறியிருக்கின்றது. நிம்மதியாக நாம் சென்றுவரக்கூடியதாக உள்ளது. இந்த சபையிலுள்ள உறுப்பினர்கள் கூட எவ்வளவு அச்சத்துடன் சென்றார்கள். இப்போது புலிகளின் இராணுவ ரீதியான தாக்குதல்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வேறுவிதமான தாக்குதல்களை தொடர்ந்துள்ளனர். பொருளாதார ரீதியாக எம்மை பலமிழக்கச் செய்ய முற்படுகிறார்கள். இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை இல்லாமல் செய்ய, தடுக்க முற்படுகின்றனர்.

சூடானுடன் இலங்கையை ஒப்பிட சிலர் முற்படுகிறார்கள். சூடானுடன் இலங்கையை ஒப்பிடமுடியாது.

நாடு கடந்த அரசு என்ற எதுவும் கிடையாது. இவ்வாறான ஒன்றை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. சட்டவிரோத செயல்களை எமது அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.

எமது நாட்டில் வாழ்கின்ற மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதே எமக்குரிய பாரிய சவால். இதனையே இன்று செய்துகொண்டிருக்கிறோம். எமது ஏற்றுமதிகள் சுமார் 50 வீதத்துக்கும் அதிகமானவை ஐரோப்பிய நாடுகளுக்கே செல்லுகின்றன. எனவே பொருளாதார ரீதியில், உலகமயமாக்கல் ரீதியில் இந்த நாடுகளுடன் இணைந்து எமது பொரு ளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனூடாக அந்த நாடுகளுக்கு நாம் அடிபணிகிறோம் என்று பொருளல்ல.

இந்த ரீதியில்தான் நாம் இந்தியாவுடனும் எமது உறவைப் பேணிவருகின்றோம். இந்தியாவுடன் எமக்கு நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சகல துறைகளிலும் தொடர்புகள் உள்ளன.

இந்தியா இன்று இலங்கையின் நெருங்கிய பாரிய வர்த்தக நண்பராக மாறியுள்ளது. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதால் இலங்கைக்கே பாரிய நன்மைகள் உள்ளன.

இந்தியாவுடன் வர்த்தகரீதியாகக் கொண்டுள்ள உடன்படிக்கைகளின் படி பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை இலங்கை அடையவுள்ளது. இலங்கையிலிருந்து இந்தியா ஏதோவொன்றை அள்ளிக்கொண்டு போகப்போகின்றது என நினைப்பது தவறு.

இந்தியா தொடர்பாக குரோத மனப்பான்மையுடன் பார்க்கவேண்டாம்.

இந்தியாவை ஒதுக்கிவிட்டு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்குக்கு செல்ல முடியுமா? ஒருபோதும் முடியாது. இந்தியாவூடாகத்தான் எமது இலக்கை எட்டமுடியும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி