ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 
வன்முறைகள் அதிகரிப்பதாகக்காட்டி குடாநாட்டில் சிலர் தேர்தல் பிரசாரம்

யாழ். குடாநாட்டில் உறுதியான பாதுகாப்பு:

வன்முறைகள் அதிகரிப்பதாகக்காட்டி குடாநாட்டில் சிலர் தேர்தல் பிரசாரம்

யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் இலாபம் தேடும் வகையில் சிலர் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக சிலர் திரிபுபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று பொறுப்புடன் கூறிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் இது போன்ற செயற்பாடுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட சில தீய சக்திகள் ஈடுபடுவது வழக்கம். எனவே இது அரசியல் இலாபத்தை கருதியே செய்யப்படுகின்றது என்றார்.

தென்பகுதி உட்பட ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் மிகவும் குறைவான சம்பவங்களே பதிவாகுவதாக திட்டவட்டமாக தெரிவித்த அவர் சில தனிப்பட்ட சம்பவங்களையும், சிலர் அரசியல் மயப்படுத்த முயற்சிப்ப தாகவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் அரசாங்கம் பாரிய உட்கட்ட மைப்பு வசதிகளுடன் பொருளாதார வாழ்வாதார, விவசாய, மீன்பிடி, சுகாதார மேம்பாட்டுத்திட்டங்களை பாரிய அளவில் மேற்கொண்டு வருகின்றது. மக்கள் எந்தவித கெடுபிடிகளும், துன்பங்களும் இன்றி நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் இந்த செயற்பாடுகளை விரும்பாத சிலர் வடக்கில் மாத்திரமின்றி தென்பகுதிகளிலும் இது போன்ற உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை மேற்கொண்டும் திரிபுபடுத்தியும் வருகின்றனர் என்றார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடாநாட்டிலுள்ள மக்களின் நலனை கருதி அவர்களது வேண்டுகோளுக்கிணங்க திட்டமிடப்பட்ட வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த கட்டளைத் தளபதி, விசேட ரோந்து குழுக்கள், இராணுவம், பொலிஸ் விசேட குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக சகல பிரதேசங்களிலும் சமூகக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் ஊடாக இராணுவத்தினர், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கில் எந்தவித பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்றார்.

வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சில தீயசக்திகள் அரசியல் இலாபத்திற்காக அசம்பாவிதங்களை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று தெரிவித்த அவர், சகல சவால்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் திட்டமிடப்பட்ட அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் மக்களுடன் சினேக பூர்வமாக பழகிவருவதாக தெரிவித்த அவர், மக்களுக்குத் தேவையான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

சுமுகமான நிலைமை தொடர்வதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்புக்கள் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி