ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 
பார்வை இழந்தோர், உடல் பலவீனமானோருக்கு இன்னொருவர் வாக்களிக்க ஏற்பாடு

பார்வை இழந்தோர், உடல் பலவீனமானோருக்கு இன்னொருவர் வாக்களிக்க ஏற்பாடு

வாக்காளர் இடாப்பு மீள்பதிவுக்கு ஒத்துழைக்க கோருகிறார் தேர்தல்கள் ஆணையர்

பார்வை இழந்தோர் மற்றும் கை நடுக்கம் உடையோர்க்கு பதிலாக விசேட நிபந்தனையின் அடிப்படையில் இன்னொருவர் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதுவரை காலமும் மேற்குறிப்பிட்டோர் வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தந்து அவர்கள் தெரிவிக்கும் கட்சிக்கும் இலக்கத்திற்கும் கடமையிலிருப்போர் இன்னுமொரு உத்தியோகத்தரின் முன்னிலையில் வாக்களித்து வந்தனர்.

தற்போது 2011 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் பார்வையிழந்தோர் மற்றும் கைநடுக்கம் உடையோர் தமது உடல் நிலை குறித்து வைத்தியரிடமும் கிராம சேவையாளரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை எடுத்து வருவார்களாயின் அவர்களுடன் வருபவர்களே இவர்களுக்கு பதிலாக வாக்களிக்க முடியுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

வாக்காளர் இடாப்பு மீளாய்வு

இதேவேளை வாக்காளர் இடாப்பு பதிவு மீளாய்வு தற்போது நடைபெற்று வருவதனால் அனைவரும் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இதற்கான மீளாய்வு நடைபெற்று வருகின்றது. கிராம சேவையாளர்கள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை வீடுகள் தோறும் விநியோகித்து வருகின்றனர். இவை கிடைக்கப் பெறாதவர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக தமது இருப்பிடத்துக்குச் சொந்தமான கிராம சேவையாளர்களிடம் அவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும். கொழும்பைச் சேர்ந்தவர்கள் ராஜகிரியவிலுள்ள தேர்தல் அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டியது அவசியமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

கிராம சேவையாளர் நிரப்பப்பட்ட படிவங்களை மீள பெற்றுக்கொள்ளுமிடத்து அதற்கான பற்றுச்சீட்டை அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

விநியோகிக்கப்பட்ட வாக்காளர் மீளாய்வு விண்ணப்பபடிவங்கள் நிரப்பப்பட்ட பின்னர் மீண்டும் சேகரிக்கப்படாத விடத்து அவற்றை தற்போதே தபால் மூலம் தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டாமெனவும் ஆகஸ்ட் 30 வரையில் அவற்றை சேகரிக்கப்பதற்கு அவகாசம் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்க ளுக்கான வாக்காளர் இடாப்பு பதிவு மீளாய்வு ஓகஸ்ட் மாதமளவில் நடத்தப்படும்.

இதேவேளை, கடந்த காலங்களில் மன்னாரிலிருந்து புத்தளத்துக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் வடக்கிலிருந்து இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்திருக்கும் எமது இலங்கைப் பிரஜைகள் தொடர்பான மீளாய்வினை பின்னர் நடத்த தீர்மானித்திருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.

இடம்பெயர்ந்தவர்களென்ற ரீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று இலட்சம் பேரும் மன்னாரிலிருந்து 20 ஆயிரம் பேரும் வாக்காளர் இடாப்பு பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளரெனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்துடன் இடாப்பில் பெயரில்லாதவர்களின் பெயர்களை மீள சேர்த்துக்கொள்வதற்காக எதிர்வரும் நவம்பரில் உரிமைக் கோரிக்கைகளும் ஆட்சேபனையும் நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். தமது பெயர் வாக்காளர் இடாப்பில் இல்லாதவர்களும் 18 வயதை பூர்த்தியடைந்தவர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி