ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 
அபிவிருத்தி வாரம் நாளை மறுதினம் ஆரம்பம்

அநுராதபுரத்தில் தேசத்துக்கு மகுடம்

அபிவிருத்தி வாரம் நாளை மறுதினம் ஆரம்பம்

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களின் முதற்கட்ட நடவடிக்கை நாளை மறுதினம் 11ஆம் திகதி பதவிய பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளன.

2012ஆம் ஆண்டுக்கான தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அநுராதபுர மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் கடந்த வியாழக்கிழமை அநுராதபுரம் ஓயா மடுவயில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

ஸ்ரீமகாபோதியில் நடைபெற்ற மதவழிபாடுகளைத் தொடர்ந்து 9.42 சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே, முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, டபிள்யூ. ஏகநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பதவிய பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களில் நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக பதவிய பிரதேச செயலாளர் ஆர். ஜி. பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அனைத்து அமைச்சுக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது. இதன்போது அடையாளம் காணப்படும் குறைபாடுகள் தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு முன்னர் நிவர்த்தி செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரத்திலுள்ள 22 பிரதேச சபைகள் மற்றும் 702 கிராமசேவையாளர்கள் பிரிவில் 200 கோடி ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி