வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010


உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டமளிக்கும் சூரியநமஸ்காரம்

உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டமளிக்கும் சூரியநமஸ்காரம்

ஸ்ரீராமனும் இராவணேஸ்வரனும் போர் புரிவதைப் பார்ப்பதற்காக அகத்திய முனிவர் தேவதைகள் சகிதம் போர்க்களம் வந்தார். இராம - இராவண யுத்தம் ஓய்ந்த இடைவேளையில், இராவணனை எப்படி வெல்லுவது என்ற சிந்தனையில் இராம பிரான் ஆழ்ந்தார். இந்த நிலையில் அகத்தியர் இராமபிரானை அணுகிக் கூறியதுதான் ஆதித்ய ஹ்ருதயம் தோத்திரம்.

நீண்ட புஜங்களை உடைய குழந்தாய்! ராமா! யுத்தத்தில் உனது விரோதிகளை எளிதாக ஜெய்க்கக்கூடிய ஒரு பழைமையான இரகசியத்தைச் சொல்கிறேன். கேட்பாயாக’ என்று கூறி அதன் பெருமையை விளக்குகிறார்.

‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்ற ஸ்தோத்திரம் புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது. விரோதிகள் அனைவரையும் சின்னாபின்னப்படுத்தி வெற்றியை அளிக்க வல்லது. மங்களகரமாக உள்ள எல்லாவற்றுக்கும் மங்களகரத்தை அளிக்க வல்லது. சகல விதமான பாவங்களையும் தொலைக்கக் கூடியது. மனோவியாகூலத்தை அகற்றி வாழ்நாளை அதிகப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

ஆதித்ய ஹ்ருதயஸ்தோத்திரம் என்பது சூரிய மண்டலத்தில் நடுவில் உள்ள சூரியனின் இதயத்தை ஆனந்தத்தில் அழுத்தக் கூடியது.

சதுர்வேதங்களாகவும், யாகங்களாகவும் அவற்றின் பக்க பலமாகவும் அவர் உள்ளார். சர்வ லோகங்களிலும் உள்ள அனைத்துக் காரியங்களையும் இயக்கும் சர்வாத்மாவாக இந்த சூரிய பகவானே விளங்குகிறார். ஏ. ராமா! எவனொருவன் தனக்கு ஆபத்து ஏற்படும் போதும், கஷ்டம் உண்டாகும் போதும் வனாந்திரங்களில் போகும் போதும், இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை ஜபிக்கிறானோ, அவன் அந்த உபாதைகளுக்கு ஆளாகமாட்டான்.

இணையிலாத ஒளியைத் தந்தருளும் உனது சிந்தனைக்கும் ஒளி தருவான். சலன புத்தியின்றி ஒரே சிந்தனையுடன், தேவாதி தேவனாகவும், சகல லோகத்திற்கும் நாதனாகவும் உள்ள இந்தச் சூரிய பகவானை ஆராதிப்பாயாக! இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை மும்முறை ஜயித்துப் போரில் நீ வெற்றி அடையப் போகிறாய்’ என்று கூறி ஆசீர்வதித்து விட்டுச் செல்லுகிறார் அகத்தியர்.

அதன் பிறகு இராமர் சூரிய பகவானை ஜயித்து மனோபலமும், சரீர பலமும் பெற்று இராவணனுடன் போரிட்டு வெற்றிபெற்றார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கவலையும், மனச்சோர்வும், தோல்வி பற்றிய கலக்கமும் உள்ளவர்கள் இந்த ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரத்தை தினந்தோறும் ஜபித்தால் அந்தச் சங்கடங்கள் நீங்கி வாழ்க்கையில் வெற்றியை அடைவார்கள் என்பது தத்துவம்.

காசினியிருளை நீக்கிக் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப் பொரு சுகத்தை நல்கும்
வாசியே ழுடையதேர்மேல் மாகிரிவலமாய் வந்த
தேசிகாயெனை ரகறிப்பாய் செங்கதிரவனே போற்றி!

என்று நவக்கிரக ஸ்தோத்திரங்களில் சூரியனை வழிபடும் ஸ்தோத்திரம் வருகிறது. இருளை நீக்கி ஒளியைத் தருபவன் சூரியன். கண்ணிற்கு ஒளியையும் உடம்புக்குப் பிரகாசத்தையும், மனதுக்கு வலிமையையும் நல்குபவன் ஆதித்யன். அவனுக்கு வழிபாட்டைக் காலை நேரத்தில் கதிரொளி முதலில் படரும் வேளையில் கிழக்கு முகமாக நின்று வணங்கிச் செல்வதுதான் சூரியநமஸ்காரம்.

அதில் வேறு யோகாப்பியாசங்களை இணைப்பது, அளவாக மூச்சுவிடப் பயிலுவது உடம்பின் பகுதிகளை இயங்கிச் சுறுசுறுப்படையச் செய்வது, சூரிய ஒளியில் குளிப்பது, பிரார்த்தனையின் மூலம் பகலவன் அருளைப் பெற்று மனத்தைப் பிரகாசம் அடையச் செய்வது ஆகிய யாவுமே இதன் மூலம் ஈடேறுகிறது.

சூரிய நமஸ்காரம் முக்கியமாகக் கண்களுக்கும் முதுகெலும்பிற்கும் சக்தியை அருளவல்லது. இதில் பன்னிரண்டு யோகப் பயிற்சிகள் உண்டு. ஒவ்வொன்றையும் செய்யும் போது மனதில் அதன் பிரதிபலிப்பாகப் பிரகாசமும், அமைதியும், ஆனந்தமும் உருவேறுகிறது. உடலுக்கும் உள்ளத்துக்கும் இணைந்த பயிற்சி என்பதே சூரிய நமஸ்காரத்தின் தனிப் பெருமை.

சூரிய நமஸ்காரம் செய்யும் முறை:

1. நிமிர்ந்து நில். இரு கைகளையும் நமஸ்காரம் செய்வதைப் போலக் குவித்து மார்பின் மீது வைத்துக்கொள். மூச்சை வெளியிடு.

2. மூச்சை இழுத்து, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி, இடைக்கு மேற்பட்ட பகுதியை மெதுவாக வளைத்து முதுகெலும்பை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் பின்னால் கொண்டு செல்.

3. மேலே உயர்த்தி, முதுகெலும்பை முன்புறமாக வளையச் செய்து மூச்சைவெளியிடு. முழங்காலை வளைக்காமல் அங்கங்களைத் தரையில் பதித்துவை. கைவிரல்கள், கால் விரல்களுக்கு இடையாக இருக்கட்டும். முகம் முழங்கால்களுக்கு நடுவே குனியட்டும்.

4. வலது காலைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு போ, மூச்சை உள்ளிழு, இடதுகாலை முழங்கால் மடிப்பில் வைத்துக் கொள், தொண்டை புட்டப் பகுதியுடன் ஒட்டி இணையட்டும். முகத்தை நிமிர்த்தி மூச்சை உள்ளிழு.

5. இடதுகாலையும் பின்னுக்குத் தள்ளு: முதுகையும் கைகளையும் நிமிர்த்திக் கொள். மூச்சை வெளியிடு.

6. மூச்சை வெளியிடும் போது முழங்கைகளை வளைத்துக்கொள். உடம்பை முன்புறமாக குனிய வைத்து நிலத்தை நெற்றி, மார்பு அங்கை, முழங்கால், குதிகால் ஆகியவற்றால் தொடு, உடம்பின் மற்றப் பகுதிகள் பூமியில் பட வேண்டாம். இடையின் முற்பகுதியில் வளைத்துப் பின்புறம் உயரச்செய்.

7. தலையை உயர்த்திப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டுபோ. புஜங்களை நீட்டி விரியச் செய். முதுகெலும்பைப் பின்புறமாக வளையச் செய். முடிந்தவரை வளைத்து மூச்சை உள்ளுக்குள் இழு.

8. மூச்சை வெளியிடும் போது, இடையை ஊசலாட்டி, மேலேயும் பின்னுக்கும் கொண்டு செல். (என்ற அடையாளத்தை பின்புறமாக வரச் செய்து கைககளையும், பாதங்களையும் பூமியில் ஊன்றிக் கொள்).

9. வலது காலை முன்னால் கொண்டு வந்து பாதங்களை ஊன்றி கைகளுக்கு இடையில் கொண்டு செல். மூச்சை உள்ளுக்கு இழு. (4வது நிலையையே)

10. அதேபோல் இடதுகாலை முன்னுக்குக் கொண்டு வந்து, முழங்காலை நீட்டி, தலையைக் குனியவை (3வது நிலையைப் போல) மூச்சை வெளியிடு.

11. மூச்சை உள்ளே இழுத்து, உடம்பை நீட்டி, நிமிர்ந்து, கைகள் இரண்டையும் புஜத்துடன் தலைக்கு மேலே கொண்டுபோய், எவ்வளவு தூரம் முடியுமோ அந்த அளவுக்குப் பின்னால் கொண்டு செல். (இரண்டாவது நிலையைப் போல)

12. நிமிர்ந்து நில்லுங்கள் (முதல் நிலையைப் போல) வழக்கமாக நிமிர்ந்து நிற்கும் நிலையை மேற்கொள். காலை நேரத்தில் பன்னிரண்டு தடவைகள் இந்த நிலைகளைத் திரும்பத் திரும்பச் செய். இதுவே சூரிய நமஸ்காரம்.

பன்னிரண்டு தடவைகள் நமஸ்காரம் செய்து முடிந்த பிறகு, தரையில் முதுகு அழுத்தப்படுத்து, ஒவ்வொரு கைகால் மூட்டுகளையும் தளரவைத்து, உச்சி முதல் பாதம் வரை ஓய்வடையச் செய்.

சவாசனம் என்ற (சவம் போன்ற) நிலையில் உடம்பை முழுமையாகத் தளர்த்தி ஓய்வடைய விடு. முதலில் மூன்று அல்லது நான்கு நமஸ்காரங்கள் செய்து முடித்தபின் சோர்வடைந்து விடுவீர்கள், படிப்படியாக நாளைக்கு ஒன்றாக அல்லது இரண்டு நாளைக்கு ஒன்றாக உயர்த்திக் கொண்டு செல். உடம்பின் எந்தப் பகுதியிலும் இதனால் வலி ஏற்படாமல் பார்த்துக் கொள். இப்படி உயர்த்துவது அவரவர் சக்திக்கு ஏற்ப அமைய வேண்டும். சூரிய நமஸ்காரத்துக்கு அளவுக்கட்டுப்பாடு இல்லை. முடிந்தவரை செய்யலாம். நூற்று எட்டு (108) நமஸ்காரங்கள் வரை செய்பவர்கள் கூட இருக்கிறார்கள்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன் சூரியனை வழிபட வேண்டும்.
அதற்குரிய பிரார்த்தனை இது.


சூரிய வழிபாடு:

“ஓம் சூர்யம் சுந்தரலோக

நாதமிர்தம் வேதாந்தஸாரம் சிவம்

ஞானம் பிரம்மயம் சுரேச

மமலம் லோனககச்சித்தம் ஸ்வயம்;

இந்திராத்திய நரதீபம் சுரகுரும்

த்ரை லோக்ய சூடாமணிம்,

பிரம்ம விஷ்ணு சிவ ஸ்பரூபஹ் ருதயம்

வந்த ஸ்தரபாஸ்கரம்’

உலகத்தின் அழகான தலைவனும், அழிவில்லாதவனும், வேதாந்தத்தின் உட்பொருளும், சுபமானது. முழுமையான அறிவும், பிரம்மத்தின் உருவமானவனும், தேவர்களின் தலைவனும், எப்போதும் தூய்மையானவனும், உலகத்தின் ஒரே சூட்சும் சக்தியும், இந்திரனின் தலைவனும், தெய்வங்களின் மூலவனும், மூவுலகிற்கும் முடியாக ஒளிரும் ஜோதியும் , பிரம்மஸ்வரூபத்தின் இதய ஜோதியும் சிவா- விஷ்ணு- பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் இணைந்த உருவமும், ஒளியைப் பொழிபவனுமான சூரியனே உன்னைத் தலைவணங்கிப் பிரார்த்திக்கிறேன்.

கண்ணுக்குத் தெரியாத இறைவனின் நித்ய உருவமாக நமது பார்வையில் படத் தரிசனம் தருபவன் சூரியன், ஒளியும் உயிர்ச் சக்தியும் தந்து அருளுபவன் அவனே. ஓர் உருவம் தந்து வழிபட்டாலொழிய இறைவனை வணங்கப் பழகாதவர்களே உலகில் உள்ள பெரும்பாலான பக்தர்கள், அப்படிப்பட்டவர்க ளுக்குத் தினந்தோறும் இயற்கையின் வடிவமாக இறைவனின் உருவமாகத் திகழுகிறான் கதிரவன்,

சூரிய நமஸ்காரம் உடல், மனம், ஆன்மா மூன்றையும் வலுப்படுத்த அடிப்படை அமைத்துக் கொடுத்து நம்முடைய பண்பை உயர்த்தவல்லது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •