வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

ஜீன் தெரபியில் புதுமை

ஜீன் தெரபியில் புதுமை

குழந்தை என்றாலே எல்லோருக்கும் கொள்ளை பிரியம். ‘ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்பார்கள். தம்பதிகள் மட்டுமல்ல, குழந்தைகள் கூட ‘ஓடிப்பிடித்து விளையாட தம்பிப் (தங்கை) பாப்பா வேண்டும்’ என்று சில நேரம் விளையாட்டாய் கேட்டு விடுவார்கள்.

இதனால் ஆண் குழந்தை இருப்பவர்கள், பெண் குழந்தை மீதும், பெண் குழந்தை இருக்கும் தம்பதி ஆண் குழந்தை மீதும் மோகம் கொள்வது இயல்பு. அதேபோல் குழந்தை பாக்கியமே இல்லாதவர்கள் எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் ஏக்கம் கொள்வதும் தவிர்க்க முடியாதது.

இந்த ஆசை, ஏக்கங்களுக்கு தீர்வு காண சில மருத்துவ முறைகள் இருக்கின்றன. இதில் புதிதாக, கருத்தரித்தவுடன் நமக்கு தேவையான குழந்தை ஆணா, பெண்ணா என்று முடிவு செய்து விரும்பியபடி கு¡ந்தை பெற புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டெம்செல் தெரபி, ஜீன் தெரபி ஆகியவை அடுத்த தலைமுறைக்கான நவீன மருத்துவ முறைகளாகும். இந்த இரு முறைகளும் தினமும் வெளிக்கொண்டு வரும் புதுமைகளால் மருத்துவ உலகில்புரட்சி ஏற்பட்டிருக்கிறது எனலாம்.

ஜீன்கள் என்பவை மரபுப் பண்புகளுக்கு அடிப்படையானவை. நமது உடலில் எந்த வகை ஜீன்கள் எந்தப் பணிகளை செய்கிறது என்பது வேகமாக அறியப்பட்டு வருகிறது. புற்றுநோய், தலை வழுக்கை, நுரையீரல் நோய் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஜீன்கள் இனம் கண்டறியப்பட்டு விட்டன. எனவே, இந்த வியாதிகளை மனித இனத்தில் இருந்து அடியோடு விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

அதேபோல் உறுப்புகள் உருவாக்கத்துக்கான அடிப்படை செல்லான ஸ்டெம்செல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், மருத்துவ உலகம் மறுமலர்ச்சி கண்டிருக்கிறது. இதன் மூலம் பல்வேறு வியாதிகளுக்கு தீர்வு காண முடியும் என்று ஆய்வின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் முதன் முறையாக ஸ்டெம்செல் முறையில் கண்புரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவப் புரட்சி வரிசையில் தற்போது பாலின மாற்றத்துக்கு காரணமான ஜீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதாவது வயிற்றில் உருவாகும் கருவானது ஆணாகவும், பெண்ணாகவும் மாறுவதற்கு அடிப்படையாக இருக்கும் ஜீன்கள் அறியப்பட்டு உள்ளன.

இதுவரை ஆண்டிரோஜன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் மிகுதிக்கு ஏற்ப ஆண், பெண் தன்மை மாறுபடும் என்று அறியப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஹார்மோன் சுரப்போடு தொடர்புடைய ஜீன்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

அதாவது பெண் தன்மை ஏற்படுவதற்கு பாக்ஸ் எல்2 என்ற ஜீன்களும், ஆண் தன்மைக்கு சோக்ஸ் 9 என்ற ஜீன்களும் காரணமாக இருக்கின்றன. இந்த இரு ஜீன்களில் எது முதலில் செயல்படத் தொடங்குகிறதோ, அதற்கு ஏற்பத்தான் கருவானது ஆணாகவோ, பெண்ணாகவோ மாறுகிறது என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஜீன்களின் செயல்பாடுதான் ஆண்களுக்கு தாடி, மீசை வளர்வதிலும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. எனவே, பருவ வளர்ச்சியல் திடீர் பால் மாற்றம் ஏற்பட்டு அரவாணித் தன்மை அடைவதற்கும் காரணமாக இருக்கிறது.

தற்போது இந்த ஜீன்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதால், எதிர்காலத்தில் வாரிசுகள் தேவைப்படுவோர் ஆணோ, பெண்ணோ விருப்பத்தின் பேரில் கருவை வளர்த்து பெற்றுக் கொள்ளலாம். இதனால் காலமாற்றத்தால் குறைந்துவிட்ட பெண்சிசுக் கொலை அறவே ஒழியும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் அரவாணித் தன்மையையும் கட்டுப்படுத்த முடியும். குழந்தைகளில் விரும்பிய பண்புகளை உருவாக்குவதற்கும் ஜீன் தெரபியில் வழி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய மாலிக்யூலர் பயாலஜி ஆய்வகத்தைச் சேர்ந்த மத்தியாஸ் டிரையர் என்பவர் தலைமையிலான குழு இந்த ஜீன்களை கண்டுபிடித்து உள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •