வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பண்பாட்டுப் பாரம்பரியமும் கலாசாரப் பேணுகையும் மிக்க நம்மை அடிக்கடி சர்வதேசங்களும் உற்றுப் பார்க்கின்றன. இந்தப் பார்வை அண்மையில் இன்னும் கூர்மையடைந்து இப்போது பலமாக நிலைத்திருக்கின்றது.

இலங்கை நாட்டின் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கப்போகும் தேர்தலில்- முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதியாக மாறி ஜனாதிபதியைத் தெரிவு செய்யப்போகும் தேர்தலில் நமது வகிபாகம் தற்போது மிகமிக முக்கியமானது.

இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. நமது இனத்திலிருந்து, நமது பிரதேசத்திலிருந்து, நாம் விரும்பும் கட்சியிலிருந்து எமது பிரதிநிதியைத் தெரிவு செய்து அனுப்பும் தேர்தல் அல்ல. நமக்குச் சம்மதமோ இல்லையோ இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பை அரசியல் யாப்பு கூறுகின்ற அடிப்படையில் பெரும்பான்மையினராக உள்ள சிங்கள இனத்தவர் ஒருவரே பெறுவார்.

1982 ம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்தனாவை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவிற்கு அதிக வாக்குகளை வழங்கினோம். அப்போது போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இன உணர்வோடு வாக்களித்தோம். ஆனால் வென்றது. ஜேர்.ஆர்.தான். எமது வாக்குகள் ‘எதிர்ப்பு வாக்குகள்’ என்ற முத்திரை குத்தப்பட்டனவே தவிர வேறொன்றுமில்லை.

1988ம் ஆண்டுத் தேர்தலில் பிரேமதாசவை, எதிர்த்துப் போட்டியிட்ட திருமதி பண்டாரநாயக்காவை நம்மில் பெரும்பாலானோர் ஆதரித்தோம் ‘எதிர்ப்பாளர்’ என்ற பெயர் மட்டுமே எஞ்சியது. வேறொன்றும் இல்லை- பிரேமதாஸா வென்றார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தோம். வாக்களிப்பில் கலந்து கொண்ட சில பிரதேசத்துத் தமிழர்கள்கூட ரணிலுக்கே வாக்களித்தனர். சிலர் கூறுவதுபோல நூலளவு வெற்றி என்பது போல யாப்பின் விதிகளுக்கேற்ப மஹிந்த வெற்றிபெற்றார்.

மலையகத் தலைமைத்துவங்களும் நமது சகோதர இனமான முஸ்லிம் இனத்தின் தலைவர்களும் தமது இனத்தினதும் பிரதேசங்களினதும் வாழ்வை, வளத்தைக் கருத்திற்கொண்டு தூரநோக்கோடு செயற்பட்டு சகல துறைகளின் அபிவிருத்திகளிலும் அவர்கள் பங்காளிகளாகி சுபீட்சம் நிறைந்த வாழ்வில் வளம் காணும்வேளை நாம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வறுமையில், போர் நெருக்கடியில், அகதிவாழ்வில், எண்ணற்ற இழப்புகளில் எதிர்காலம் இல்லாத நிகழ்காலத்தில் இன்னும் இருக்கின்றோம்.

தேர்தல் காலங்களில் உரத்த தொனியில் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு உரிமைக் குரல் எழுப்பியவர்களின் வீராவேச வார்த்தைகளில் விழுந்து ஜனநாயகத்தின் பெறுமதி மிக்க விழுமியமான வாக்குகளை கடலில் அள்ளிக் கொட்டிய காகிதங்களாக்கினோம். சலுகைகள் எம்மைச் சரணடையச் செய்யப்போவதில்லை. உரிமைகளே எமது உறுதியும் இறுதியுமான இலக்கு என்று முழங்கி வாக்குப் பெற்றவர்கள் அரசாங்கம் வழங்குகின்ற அனைத்துச் சலுகைகளையும் தாம் பெற்று அனுபவித்து வந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் யுவதிகளையும் உரிமைப்போர் எனும் வெளிச்சத்தைக்காட்டி விட்டில் பூச்சிகளாக விழச்செய்து அவர்கள் சடலங்களால் மண்ணை நிரப்பி மாவீரர் உறங்கும் இடம் என்று கூறி நமது மண்ணை மயான பூமியாக்க உறுதுணை நின்றனர்.

தமக்கு உயிராபத்து என்று கூறி தமது குடும்பங்களோடு வெளிநாடுகளில் வாழந்துகொண்டு பாராளுமன்றச் சம்பளம், கொழும்பில் வசிப்பிட வசதி, அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு, ஏனைய அத்தியாவசிய வசதிகள், தீர்வையற்ற வாகனங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் என்று எதனை விட்டார்கள்? நமக்கு எந்த உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்? தளத்தில் நின்று, மக்கள் நிலையைச் சரியாகப் புரிந்து அவர்கள் வாழ்வில் சுபீட்சம் தோன்ற முயன்று பணிசெய்த- செயற்றிட்டங்கள் வகுத்துச் சீராகச் செயற்பட்டவர்களையும் அரசாங்கங்களை அனுசரித்து பகை பாராட்டாது, பண்பு இழக்காது பணிசெய்தவர்களையும் இனத்துரோகி என்றார்கள். எட்டப்பர்கள் என்றார்கள். காட்டிக் கொடுப்பவர்கள் என்றார்கள். கைக்கூலி என்றார்கள். ஆனால், நமது வாழ்வு கேள்விக்குறியாகியதே மிகுதி.

30 ஆண்டு போர் பற்றி இங்கு அதிகளவு சத்திரசிகிச்சை செய்ய நாம் விரும்பவில்லை. அது காலத்தினதும் சித்தத்தினதும் விரயம். யோகர் சுவாமிகள் கூறுவதுபோல் முடிந்துபோன விடயம். ஆயினும் சிலவற்றை நாம் அறிந்தும் புரிந்தி கொள்ளல் அவசியம்.

நாட்டின் அதியுயர் அதிகாரம் உள்ள சபையாக பாராளுமன்றம் செயற்படத் தொடங்கிய 1949ல் இருந்து 1978 வரைக்குமான காலகட்டத்தில் 1956 லிருந்து 1977 வரை இனமுரண்பாட்டு அடிப்படையில் எழுந்த எந்த நெருக்கடிக்கும் குறிப்பாக நமது வடபகுது மக்கள் பட்ட துன்பங்களுக்கு எந்தத் தலைவராலும் நிரந்தரத் தீர்வுகாண முடியவில்லை. 1978ல் இலிருந்து 2005 வரை ஜனாதிபதி ஆட்சிமுறை இருந்த காலத்தில் ஜே.ஆர், பிரேமதாச, டீ.பீ. விஜேதுங்க, சந்திரிகா என்ற வகையில் 25 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்தவர்கள் எவரும் தீர்வு தரவில்லை. போரை முடிக்கவில்லை. வடபுலத்து மக்களின் வாட்டத்தைப் போக்கவில்லை. சமாதானத்திற்கான சைகைகளைக்கூடக் காட்டவில்லை. போரை போருக்காக நடத்தினார்கள். முடிவுகண்டு நமது நிம்மதி மூச்சுக்காக நிரந்தரத் தீர்வைக் காணவில்லை.

தற்போதைய ஜனாதிபதியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ 2005ல் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது போரின் விளைவுகளுக்குள் நாம் அனுபவித்த துன்பங்களுக்கு நீறுபூத்த நெருப்புப் போன்ற தற்காலிக போர்நிறுத்த சூழல் நிலவியது. எந்த நிமிடமும் போர் மூளும் என்ற ஊகம் பின்பு ஊர்ஜிதமாயிற்று.

சீ இந்த நாட்டின் போரை ஆரம்பித்தவர் மஹிந்த அல்ல.

சீ தனக்கு முன்னுள்ள கால்நூற்றாண்டுக்கான அழிவுமிக்க போரை நடத்தியவரும் மஹிந்த அல்ல.

சீ வடபுலத்து மக்களுக்கு அகதிவாழ்க்கை எனும் அவலநிலையை அறிமுகப்படுத்தியவரும் மஹிந்த அல்ல.

சீ நமது மக்கள் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து ஓடுவதற்கு காரணமானவரும் மஹிந்த அல்ல.

சீ போரை மட்டுமே நடத்துவோம், அது முடியும்வரை அபிவிருத்தியையோ மக்களின் அன்றாட வாழ்வையோ கருத்தில் எடுக்க மாட்டோம் என்ற வக்கிர புத்தியோடு செயற்பட்டவரும் மஹிந்த அல்ல.

போர் நடந்த நாட்டைப் பொறுப்பேற்று, திடசங்கற்பத்துடன் செயற்பட்டு, நெருக்கடி மிக்க சூழலில் இருந்து பகுதிபகுதியாக நாட்டை விடுவித்து, ஒருபுறம் போரிலிருந்து நாட்டை விடுவிக்கும் முயற்சியும், மறுபுறம் மக்களின் அன்றாட வாழ்வின் புனரமைப்பும், மீட்கப்பட்ட பிரதேசங்களில் ஜனநாயக விழுமியங்களுடன் நிலைத்த அபிவிருத்தியும் என்ற வகையில் தூரநோக்குடன் செயற்பட்ட முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.

யாழ் குடாவின் இப்போதைய நிலையை நெஞ்சில்கொண்டு நடுநிலை தவறாத தராசில் நிறுத்திப் பார்ப்போம்.

சீ நமது இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கிவிட்டது என்பதனை நாம் மறுக்க முடியுமா?

சீ அரசாங்கத்தில் அங்கம் பெறும் நமது பிரதேச அமைச்சர்களுடாக அபிவிருத்திப் பணிகள் வேகமாக நிறைவேறுகின்றன என்பதனை மறுக்க முடியுமா?

சீ போர் ஓசைக்கு ஓய்வுதந்து ஊரடங்குநிலை தளர்த்தப்பட்டு, பாடசாலைகள், வைத்தியசாலைகள் இயங்கவும், போக்குவரத்துக்கள் சீரடையவும், ஆலயங்களில் உற்சவங்கள் நடைபெறவும் ஏற்புடையதான சூழல் திரும்பியுள்ளது என்பதனைப் புறந்தள்ள முடியுமா?

சீ இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புநிலை உருவாகியுள்ளது என்பதனை நிராகரித்துவிட முடியுமா?

சீ வன்னிப் பெருநிலப் பரப்பில் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்த மக்களின் மீள்குடியேற்றமும் அவர்களின் புனர்வாழ்வுக்கான பணிகளும் துரிதமாகச் செயற்படுகின்றன என்பதனை ஏற்க மறுக்கலாமா?

சீ சரணடைந்த போராளிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் நெறிப்படுத்தப்படுகின்றன என்பதை நிராகரிக்க முடியுமா?

“வடபகுதி மக்களும் எனது மக்களே. இந்தத் தேசத்தின் புத்திரர்களே. அவர்கள் போரை விரும்பியவர்களும் அல்லர். போருக்கு மட்டுமே சொந்தக்காரர்களும் அல்லர். உன்னத வாழ்வு வாழ்ந்து அதனைத் தொலைத்துவிட்டு எதிர்காலச் சந்ததிக்கு எதனைக் கொடுப்போம் என்ற ஏக்கத்துடன் வாழும் எமது உறவுகள்” என்பதனை ஏற்று, வடக்கின் வசந்தத்தை தனது சகோதரரும் தனது சிரேட்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் உருவாக்கி உறுதிமிக்க நமது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்திருப்பவரையிட்டு சிந்தியுங்கள்.

வடக்கின் வசந்தம், நமது வடபுலத்துக்கு எவற்றை வழங்கியிருக்கின்றது? பின்வரும் சிலவற்றை மனங்கொள்வோம்:-

சீ பாலங்கள் அமைப்பதற்கென 2,953 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

சீ யாழ் உள்வீதிகள் உள்ளடங்கலாக மதவாச்சி, மன்னார் தலைமன்னார் இணைப்பு வீதிகள், கண்டி-யாழ் வீதி என்பனவற்றுக்காக 2,022 மில்லியன் ரூபாவும், குளங்கள் சீரமைப்பதற்காக 375 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டு இருக்கின்றன.

சீ அரசாங்கத்தை கண்டனம் செய்வதையே தமது இலக்காகக் கொண்டு வெறும் விமர்சனங்களைக் கொண்டிருந்தவர்கள் திகைக்கும் அளவுக்கு ஏ-9 பாதை திறக்கப்பட்டது. பாஸ் முறை நிறுத்தப்பட்டது. மக்களது போக்குவரத்து இலகுவாக்கப்பட்டது. இவை மட்டுமா?

சீ வல்வினை போக்கும் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் தரிசனத்திற்காக அடியார்கள் சங்கடங்கள் ஏதுமின்றி கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

சீ தேவாரப் பாடல்பெற்ற சிவத் திருத்தலம் திருக்கேதீஸ்வரத்தில் பூரண புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் மகா சிவராத்திரி விரத தினம் அந்த ஆலயத்தில் அனுட்டிக்கப்படுவதற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

சீ மடுமாதா திருத்தலத்தின் தரிசனத்திற்காக அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பலரும் விமர்சிப்பதுபோல இவையெல்லாம் தேர்தலை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் அல்லவே. போர் முடிந்தபின்பு சடுதியாக அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கும் இவற்றிற்கும் முடிச்சுப் போட்டு மஹிந்தவின் தூரநோக்கு மிக்க, இன வேறுபாடற்ற இந்தச் செயற்பாடுகளை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்.

இந்நிலை நீடித்து நமது மண் மீண்டும் சர்வதேசம் நோக்கும் வகையில் பெறுமானம் மிக்க புத்திஜீவிகளை, விவசாய மன்னர்களை, இலக்கிய சிருஷ்டிகர்த்தாக்களை, ஆத்மீக ஞானிகளை, அருங்கலை விற்பன்னர்களை உருவாக்க வேண்டாமா? ஊக்கமிகு உழைப்பும் பண்பாடு பேணும் பக்குவமும் கலாசாரம் கட்டிக்காக்கப்படும் கண்ணியமும் மிக்க நமது மண்ணை நாம் மீண்டும் கட்டியெழுப்பும் காலம் இது. அதற்கென வழிவகுத்தவர் இந்த நாட்டைப் பொறுப்பேற்று நடத்தும் சுமையை தன்தோளில் சுமக்க நமது பலத்தையும் வேண்டுகிறார். பலம் அளித்தவர் பயன்பெற வேண்டாமா?

எதிர்ப்பது ஒன்றையே எமது காலாகால கொள்கையாகக் கொண்டு- மாறுதல் வரவேண்டும் என்று எழுந்தமானத்தில் முடிவெடுத்து எதனையும் சாதியாத தீர்ப்புகளை வழங்கும் புத்திசாதுரியமற்ற செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

அரசியலில் எதனையும் அறியாத, போர் ஒன்றைத் தவிர வேறொன்றையும் புரியாத நாட்டு நிர்வாகத்தில் அரிச்சுவடியை இனிமேல்தான் ஆரம்பிக்க ஆயத்தமாகின்றவர்களிடம் நாட்டை ஒப்படையாது, சின்னாபின்னப்படுத்தப்பட்ட நாட்டை, சீரமைத்து சமாதானமும் சுபீட்சமும் அபிவிருத்தியும் சமத்துவமும் நிம்மதியும் நிறைந்த வாழ்வுக்கு எமது மண்ணை இட்டுச் செல்லக்கூடிய, 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உடைய இன்றைய ஜனாதி பதியை மீண்டும் தெரிவு செய்வோம்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •