வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

லக்ஷர் இ தொய்பா தலைவரின் வழக்குகள் தள்ளுபடியானதை இந்தியா குறை கூற முடியாது

லக்ஷர் இ தொய்பா தலைவரின் வழக்குகள் தள்ளுபடியானதை இந்தியா குறை கூற முடியாது

பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சு

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் மகமது சயீது மீதான இரண்டு வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து இந்தியா குறை கூறுவதை ஏற்கமுடியாது, என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 180 பேர் பலியாயினர், இந்த தாக்குதலுக்கு காரணமானவர், லஷ்கர்-இ- தொய்பா அமைப்பின் நிறுவனரும், ஜமாத்-உத் தாவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் முகமது சயீது. ஐ.நா.

பொது சபையிலும், ஜி-20 உச்சி மாநாட்டிலும் சயீது விவகாரத்தை இந்தியா எழுப்பக் கூடும் என்பதால், கடந்த ஆகஸ்ட் மாதம் சயீது மீது அவதூறாக பேசியது மற்றும் புனிதப் போர் நடத்த நிதி திரட்டியது உள்ளிட்ட இரண்டு வழக்குகள் பஞ்சாப் மாகாண பைசாலாபாத் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக சயீது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்தியாவின் நிர்பந்தத்தின் காரணமாக பொலிஸார் தன்னை கைது செய்து வழக்குகள் பதிவு செய்ததாகக் கூறி சயீது லாகூர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் “ஜமாத்-உத்-தாவா அமைப்பு, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. எனவே, அந்த அமைப்பின் தலைவர் சயீது தேச விரோதமாக பேசியதாக கொள்ள முடியாது’ எனக் கூறி, இரண்டு வழக்குக ளையும் தள்ளுபடி செய்து விட்டனர்.

“இந்த வழக்கை தள்ளுபடி செய்தது குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. ஒவ்வொரு ஜனநாயக நாட்டுக்கும் சட்ட திட்டங்கள் வேறுபடும். பாகிஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை இந்தியா குறை கூறுவதை ஏற்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி அப்துல் பசித் தெரிவித்துள்ளார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •