வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009


தென் மாகாண முஸ்லிம்கள் மாகாண சபைத் தேர்தலில் அரசின் வெற்றியை உறுதிப்படுத்த தயாராக வேண்டும்

தென் மாகாண முஸ்லிம்கள் மாகாண சபைத் தேர்தலில் அரசின் வெற்றியை உறுதிப்படுத்த தயாராக வேண்டும்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தவர்களும், நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக, மாகாண சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள் இன்று ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

கருத்து வேறுபாடுகளை தூக்கியெறிந்து விட்டு, சமூக ஒற்றுமைக்காக, அபிவிருத்திகளை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் தென் மாகாண சபைத் தேர்தலில் காலி மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காலி ஜின்தோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர் கூறியதாவது:-

பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தவர்களும், நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக, மாகாண சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள் இன்று ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

அதே போன்று பல வருடங்களாக மண்ணுக்குப் போராடிய கருணா அம்மானும், பிள்ளையானும் தங்களுக்கு எதுவுமே தேவையில்லை. தாம் சார்ந்த மக்களுக்கு அபிவிருத்திகளை செய்ய வேண்டும். உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து தாருங்கள் என்று ஆயுதங்களை தூக்கியெறிந்து விட்டு, அரசாங்கத்துடன் இணைந்து தாம் சார்ந்த மக்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமன்றி பல தமிழ்க் கிராமங்களில் முன்னர் பச்சைக் கொடி தொங்கவிடப்பட்டிருந்த போதும் கூட, யுத்தத்தின் பின்னர் ஜனாதிபதி தான் இந்த நாட்டில் எப்போதும் தலைவர், நாம் ஜனாதிபதியை ஆதரிக்கிறோம் என்று பச்சைக் கொடிகள் எல்லாம் நீலக் கொடிகளாக மாறியிருக்கின்றன.

எனவே, வருகின்ற தென் மாகாண சபைத் தேர்தல் காலி மாவட்ட முஸ்லிம்களுக்கு ஜனாதிபதியின் உள்ளத்தை வெல்வதற்குரிய நல்லதொரு சந்தர்ப்பமாகும். மாறாக காலம் காலமாக குடும்பத்தினர் ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே நாங்களும் இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பீர்களானால் அதனை விட மடமை வெறொன்றும் கிடையாது. ஐ. தே. கவினால் எதையும் சாதிக்க முடியாது, எதையும் நாட்டுக்கு செய்ததுமில்லை.

ஆகவே, எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்து ஜனாதிபதியை கெளரவப்படுத்துவதுடன், ஆளும் கட்சியில் போட்டியிடுகின்ற ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரை மாகாண சபைக்கு அனுப்பி அபிவிருத்திகளை கெளரவமாக பெற அனைவரும் ஒன்றுபடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •