ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

ஹோமாகம முன்னாள் நீதிபதி 1 கோடி ரூபா சரீரப் பிணையில் விடுதலை

ஹோமாகம முன்னாள் நீதிபதி 1 கோடி ரூபா சரீரப் பிணையில் விடுதலை

வெளிநாடு செல்வதற்குத் தடை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவு

மூன்று இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைதாகி, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஹோமாகம முன்னாள் மாவட்ட நீதிபதியை ஒரு கோடி ரூபா சரீரப் பிணை யில் விடுவிக்குமாறு கொழு ம்பு பிரதம மாஜிஸ்திரேட் கிஹான் பிலபிட்டிய நேற்று உத்தரவிட்டார்.

முதலாவது சந்தேக நபரான மஹிந்த கித்சிரி என்ற பொலிஸ்காரரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர் ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம மாஜிஸ் திரேட், அவருக்கு பிணை விதிக்க விசேட காரணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை யென்றும் தெரிவித்தார்.

50 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் அடிப்படையில் இரண்டு பிணைகளாக இதனை வைக்குமாறும், பிணையாளர்களாக சந்தேக நபரின் மனைவி உட்பட நெருங்கிய உறவினர் களை ஆஜர் செய்யுமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முறைப்பாட்டாளரின் சாட்சியாளர்களுக்கு எவ்வித மிரட்டலும் அச்சமும் ஏற்படுத்தலாகாதென்றும் மாஜிஸ்திரேட் கடுமையாக எச்சரித்தார்.

மிரட்டல்கள் செய்தால் அதுபற்றி அறிக்கை செய்யுமாறும் முறைப்பாடு கிடைத்தால் பிணையை ரத்துச் செய்து சந்தேக நபரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதாகவும் எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட், சந்தேக நபர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் தடைவிதித்தார். அவரின் பாஸ்போட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சனி செனவிரத்ன, விசாரணைகள் முடிவுறவில்லை, இதனால் சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

11 சாட்சியாளர்களின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பத்திரன, விசாரணை பற்றிய தகவல்கள் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படாத நிலையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க முடியாதென்றும், ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பாக சந்தேகம் எழுவதால் சந்தேக நபர்களுக்கு பிணை விதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இது தவறாகத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். எனவே பிணையில் விடுவிக்குமாறு மாவட்ட நீதிபதியின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய கேட்டுக்கொண்டார்.

சந்தேக நபர்கள் காரணங்களை சட்டத்தரணிகளிடமும் மறைத்துள்ளனர் எனத் தெரிவித்த சட்டத்தரணி செனவிரத்ன, சந்தேக நபர்களின் கூற்றுப்படி அவர்கள் என்ன காரணத்துக்கு சென்றனர் என முறைப்பாட்டாளரின் கணவரின் வாக்கு மூலத்திலிருந்து தெரிவதாகக் கூறினார்.

முதலாவது சந்தேக நபரை சம்பந்தப்பட்ட இடத்துக்கு மாவட்ட நீதிபதியே அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் இலஞ்சம் பெறவே செல்கின்றனர் என்பதை இருவரும் அறிந்திருந்ததாகவும் கூறினார்.

காரணங்களை ஆராய்ந்த மாஜிஸ்திரேட் பிணை விதிக்கப்பட்ட பொலிஸ்காரரை மீண்டும் விளக்கமறியலில் வைத்து மாவட்ட நீதிபதியை தனது உத்தியோகபூர்வ அறைக்கு அழைத்து வந்தமை தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தார்.

பாதுகாப்புக்காகவே அவரை அவ்வாறு உத்தியோகபூர்வ அறைக்குக் கொண்டு வந்தோமென சிறைக்காவலாளிகள் தெரிவித்தனர். இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாமென மாஜிஸ்திரேட் தெரிவித்தார். (எப்.எம்.)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி