ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

நாட்டின் நிர்வாக முறையில் ஏற்பட்ட மாற்றம் மக்களின் விருப்புடன் மேற்கொள்ளப்பட்டதல்ல

13ஆவது திருத்தம்

நாட்டின் நிர்வாக முறையில் ஏற்பட்ட மாற்றம் மக்களின் விருப்புடன் மேற்கொள்ளப்பட்டதல்ல

*வடமராட்சி இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகர் கோரினார்

*13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதா? அல்லது நாட்டை ஆக்கிரமிப்பதா? என்ற தொனியில் இந்திய அழுத்தம் அமைந்திருந்தது

ஜனாதிபதியின் செயலாளர்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறையில் ஏற்படுத்தப்பட்ட முழுமையான மாற்றம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க மேற்கொள்ளப்பட்டதல்ல என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய லலித் வீரதுங்க, நாட்டு மக்களின் விருப்பமோ அல்லது சர்வஜன வாக்கெடுப்போ இன்றியே அரசியல மைப்பின் 13 வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறைமை முழுமையாக மாற்றப்பட்டது எனவும் தெரிவித்தார்.

அன்று மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை நிறுத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகர் அப்போதிருந்த இலங்கை ஜனாதிபதியைக் கோரியிருந்தார் என குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க: நாட்டை ஆக்கிரமிப்பதா? அல்லது 13 வது திருத்தத்தை நடை முறைப்படுத்துவதா என்ற வகையில் அந்த அழுத்தம் அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.

மாகாண சபைகள் மூலம் எந்தளவு சேவைகள் கிடைக்கக்கூடியதாகவுள்ளன என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு மக்களுடையதே என குறிப்பிட்ட அவர், அன்று சிலர் வசம் இருந்த இரகசியங்கள் இன்று வெளிப்பட்டு வருகின்றன என வும் தெரிவித்தார்.

அப்போது தாம் உதவி அரசாங்க அதிபராக பதவி வகித்த போது மக்களுக்கு காணித் துண்டொன்றை வழங்குவதற்கு தமக்கு அதிகாரம் இருந்ததாயினும் மாகாண சபை மற்றும் மாவட்டச் செயலாளரிடம் காணிகளுக்கான உரிமைகள் இருந்ததனால் ஒரு காணித்துண்டை ஒருவருக்கு வழங்குவதற்கு 20 - 30 இடங்களுக்கு அலைய வேண்டிய நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணிச்சீர்திருத்த ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த ‘ரன்பிம’ காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சில அரச அலுவலகங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் கிட்டுவதில்லை. இத்தகைய அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் கூறுவதுண்டு. அவர் சிறந்ததொரு தலைவர். எனினும் அரச அதிகாரிகள் என்ற வகையில் எமக்கு தீர்மானமெடுக்கப் பயம் உள்ளது. எனினும் மக்களுக்கு சேவை செய்யாத நிறுவனங்கள் பிரயோசன மற்றவை என ஜனாதிபதி கூறுகின்றார்.

பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகத்துடன் நான் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது அவர் என்னிடம் “நாம் இருவரும்” மேல் மாகாண சபை பிரதேசத்திலேயே வாழ்கிறோம். எனினும் மாகாண சபை மூலம் எமக்கு என்ன சேவை கிடைத்துள்ளது” என அவர் வினவினார். அப்போது தான் நானும் சிந்தித்து பார்த்தேன்.

இந்த மாகாண சபை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் இங்கு வாழ முடியும் தானே என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றி யுள்ளார். காணியற்றவர்களுக்கு காணி வழங்குவதாக கூறிய வாக்குறுதி மட்டுமன்றி அனைத்து வாக்குறுதிகளையும் முறையாக நிறைவேற்றியுள்ளார். எதிர்காலமில்லாத நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இப்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழும் சூழல் உள்ளது. இந்நிலை தொடர ஜனாதிபதியின் கரங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் சகல தடைகளையும் வெற்றிகொள்ள நாம் அனைவரும் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார். (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி