ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

எல்லைப் பகுதிகளில் வீரர்களுக்குப் பதிலாக ~ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்

எல்லைப் பகுதிகளில் வீரர்களுக்குப் பதிலாக ~ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்

எல்லை கட்டுப்பாடு கோடு உட்பட எல்லையோரத்தில் அண்டை நாடுகள் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களில் அடிக்கடி வீரர்கள் பலியாவதை தடுக்க ‘ரோபோ’க்களை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி இந்தியா ஆய்வு செய்து வருகிறது.

இந்தியாவில் எல்லையையொட்டிய குறிப்பாக கடும் பனி காற்று வீசும் கார்க்கில் மற்றும் லடாக் எல்லை பகுதிகளில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள், இயற்கையோடு எதிர்த்து போராட முடியாமலும் எதிரிகளின் அதிரடி தாக்குதலாலும் பலியாவது, அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதை தடுக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலும் கூறப்பட்டது. இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் போர் அபாயம் உள்ள எல்லை பகுதிகளில் வீரர்களுக்கு பதிலாக ‘ரோபோ’ என்ற இயந்திர மனிதர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ‘ரோபோ’க்கள் வெடிகுண் டுகளை செயல் இழக்க செய்வதற்கும் அதிக கதிர்வீச்சு உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கும், பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பதிலாக ‘ரோபோ’க்களை நியமிப்பது என்பது புதிய நடவடிக்கை. என்ன தான், ‘ரோபோ’க்களை நியமித்தாலும், அதன் பின் நின்று எதிரியை அடையாளம் காண்பது உட்பட பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி இயக்குவது, பாதுகாப்புப் படை வீரர்கள் தான். சண்டை பகுதிகளில் ‘ரோபோ’ வீரர்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்து இராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சில நாடுகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறது.

இது குறித்து இராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் புது தலைவர் அவினாஷ் சந்தர், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியில் கூறிய போது, பதற்றம் நிறைந்த பகுதிகள், தாக்குதல் நடத்த அச்சம் உள்ள பகுதிகளில் ‘ரோபோ’க்களை நியமிப்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

ஆரம்பத்தில் ‘ரோபோ’க்களுக்கு வீரர்கள் பின்னால் இருந்து யார் எதிரி, நண்பன் யார் என, அடையாளம் காட்டுவர். இது தொடர்பாக சில முன்னணி நாடுகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி