வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

குடும்பங்கள் வளரட்டும்; குடும்ப வாழ்வு சிறக்கட்டும்

குடும்பங்கள் வளரட்டும்; குடும்ப வாழ்வு சிறக்கட்டும்

இம்மாதம் 26ம் திகதி திருக்குடும்ப திருவிழா. இதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

ஒரு சமயத்தில் அரசர் ஒருவர் சிறந்த ஓவியத்திற்கு உயர்ந்த பரிசு அளிக்கப்படுமென அறிவிப்பு செய்திருந்தார். அந்நாட்டில் திறமை மிகு ஓவியர்கள் பலர் இருப்பினும் சிறந்த ஓவியமாய் எதை வரைவது என்பது தான் குழப்பமாய் இருந்தது.

கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியம் இதுதான். மாலை நேரம் விவசாயி ஒருவர் பகல் முழுவதும் வயலில் உழுது விட்டு மாலை நேரத்தில் களைப்படைந்த நிலையில் கலப்பையை தொழில் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார்.

அவரின் மனைவி அவரின் குடிசை வாயிலில் நின்று கொண்டு அன்பான முகப்பாவனையில் அவரை வரவேற்க காத்திருந்தார்.

அவர்களின் சிறுவயது குழந்தையோ வீட்டிலிருந்து அவரை நோக்கி இரு கைகளையும் நீட்டிய நிலையில் ஓடுகிறது. இதுதான் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இம்மூவரும் ஒருவரை ஒருவர் ஏற்று அன்பு செய்து அரவணைப்பதைக் காணமுடிகிறது. இம்மூன்று பண்புகளுமே நல்ல குடும்பத்தின் சிறப்பாகும்.

‘ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனை அவர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். கனிதரும் கொடி முன்திரிபோல் அவன் மனைவி அவள் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள். ஒலிவச் செடிகள் போல அவன் மக்கள் பந்தியில் அவளைச் சூழ்ந்திருப்பர் (தி.பா. 128:3-4) என வாசிக்கிறோம்.

திருச்சபை திருக்குடும்பத்தை நாம் முன்மாதிரிகையாய் கொள்ள வேண்டுமென இன்று நினைவுறுத்துகிறது. நல்லவர்கள் வரமுடியா நாசரேத்து ஊரில் அவர் குடியிருந்தாலும் இவர் தச்சன் மகனல்லவா? எனக் குறைத்து மதிப்பிடும் தொழில் செய்தாலும் இவரின் தாய் மரியாவல்லவா?

எனப் பெயர் குறிப்பிடும்சாதாரண பெண்ணாய் மரியாள் இருப்பினும் அக்குடும்பத்தில் சூசையப்பரிடம் நீதி இருந்தது. மரியாளிடம் ‘இதோ ஆண்டவரின் அடிமை’ எனக் கூறும் தாழ்ச்சி இருந்தது. இயேசுவிடம் பெற்றோருக்குப் பணியும் கீழ்ப்பணிதல் இருந்தது. இக்குடும்பமே நம் குடும்பங்களுக்கு முன் மாதிரிகை.

இக்குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பளிச்சிடுகிறது. பாஸ்கா விழாவில் முழுமையாகப் பங்கேற்று நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுகையில் ஒருநாள் பயணம் முடிந்த பின்பு சிறுவன் இயேசு தங்களோடு வராததைக் கண்டு அவரைத்தேடிக் கொண்டு எருசலேமுக்குச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின் எருசலேம் ஆலயத்தில் அறிஞர்கள் நடுவில் அமர்ந்து. அவர்களோடு உரையாடுவதைக் கண்டு வியப்புற்றனர்.

‘மகனே ஏன் இப்படிச் செய்தாய், இதோ பார் உன் தந்தையும் நானும் மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே’ என்று மரியா சொன்ன வார்த்தைகள் தம் பிள்ளை மேல் தாங்கள் கொண்டிருந்த பொறுப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. நாசரேத்துக்குத் திரும்பிச் சென்ற பிறகு பாலன் இயேசு இறை நம்பிக்கையிலும் ஞானத்திலும் உடலிலும் வளர வழிகாட்டினர். இவ்வாறு பொறுப்புள்ள பெற்றோருக்கு மரியாவும் சூசையும் முன்மாதிரியாய் விளங்குகின்றனர்.

இன்று திருக்குடும்பத்தின் உறுப்பினர்களை நாம் எருசலேம் ஆலயத்தில் சந்திக்கின்றோம். திருக்குடும்பத்தின் உறுப்பினர்கள் மூவரும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட மதிப்பீடுகள் மனநிலைகள், நற்பண்புகள், செயல்பாடுகள் அனைத்தையும் இன்று சிந்திக்கின்றோம்.

இக்குடும்பத்தின் தலைவர்கள் விசுவாசம் நிறைந்தவர்களாவும் அருள் வாக்குக்குக் கீழ்படிந்தவர்களாகவும் இறை வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்து செயற்படுபவர்களாகவும் விளங்கினார்கள்.

புனித அகுஸ்தினார் மனந்திரும்பி இயேசுவை பின்பற்றுவதற்கு அவரின் தாய் மொனிக்காவின் இடைவிடா செபம் தான் காரணம். புனித குழந்தை தெரசாள் தன் தந்தை மார்டினைக் குறித்து இவ்வாறு கூறுவார். ‘என் தந்தை இப்பூமியில் வாழும் போதே புனிதரைப் போன்று எனக்குத் தென்பட்டது. அவரின் புனிதமே நாங்கள் அனைவரும் துறவு வாழ்வில் இறைபணி செய்ய காரணம் என்றார்.

‘நல்ல குடும்பமே தேவ அழைத்தலின் விளைநிலம் என்றார் பரிசுத்த தந்தை. வீடு செங்கற்களால் கட்டப்படுகிறது. ஆனால் நல்ல இல்லமோ தெய்வீக அன்பால் உருவாக்கப்படுகிறது. எனவே, நம் குடும்பங்களும் திருக்குடும்பத்தைப் போல் வளரட்டும் வாழட்டும்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»