வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

சங்கக்காரவின் முதலிடத்தை நெருங்குகிறார் சச்சின்

சங்கக்காரவின் முதலிடத்தை நெருங்குகிறார் சச்சின்

தென்னாபிரிக்காவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை நெருங்கியுள்ளார்.

இந்தியா - தென்னாபிரிக்கா இடையே செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டுக்கு பின்னர் வீரர்களின் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தர வரிசை யில்,கடந்த மாதம் இலங்கை அணித் தலைவர் சங்கக்காரவிடம் முதலிடத்தை பறிகொடுத்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் முதலிடத்தை தட்டிப் பறிக்கும் நிலைக்கு நெருங்கியிருக்கிறார்.

செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தாலும், டெண்டுல்கரின் 50வது சதம் ஆறுதல் அளித்தது. அவர் துடுப்பாட்ட தர வரிசை யில் 880 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார். முதலிடம் வகிக்கும் சங்கக் கார அவரை விட வெறும் 2 புள்ளிகளே அதிகம் இருப்பதால், அடுத்த டெஸ்டின் போது டெண்டுல்கர் மீண்டும் முதலிடத் திற்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

3வது இடத்தில் இருந்த இந்திய வீரர் ஷெவாக் (832 புள்ளி) 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டின் மூலம் முதல் முறையாக தனது இரட்டை சதத்தை பதிவு செய்த தென்னாபிரிக்க வீரர் ஜக் கலிஸ் (846 புள்ளி) 3 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். சகல துறை வீரர் பட்டியலில் கலீஸ் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிராக போத்தில் நடந்த ஆஷஸ் 3வது டெஸ்டில் சதம் அடித்த அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் ஹஸே 8 இடங்கள் உயர்ந்து, 6வது இடத்தை பிடித்திருக்கிறார். மற்ற இந்திய வீரர்களான வி.வி. எஸ். லஷ்மன் 15 வது இடமும், காம்பீர் 21வது இடமும், டிராவிட் 23 வது இடமும் அணித் தலைவர் தோனி 33வது இடமும் வகிக்கின்றார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் சஹீர்கான் 4வது இடத்தில் இருந்து 7 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். காயம் காரணமாக செஞ்சூரியன் டெஸ்டில் அவர் ஆடாததால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »