வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

இருளில் வாழ்வோருக்கு ஒளி; நத்தார் கூறும் நற்செய்தி

இருளில் வாழ்வோருக்கு ஒளி;
நத்தார் கூறும் நற்செய்தி

உலகம் முழுவதும் உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.

000ம் ஆண்டுகளுக்கு முன் இஸ்ரவேல் தேசத்தில் எருசலேம் பட்டணத்தில் சிறிய கிராமமாகிய பெத்லகேம் என்னும் கிராமத்தில் ‘மரியாள்’ என்னும் பக்தியுள்ள பெண்மணியின் வயிற்றில் இயேசு பிறந்தார். இறைதூதுவர் மூலம் இறை வார்த்தையைப் பெற்று வேத வசனத்தின்படி அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து ‘கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்.

ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’ என்றான். அவளோ அதைக் கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

தேவதூதன் அவளை நோக்கி, மரியாளே பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். மரியாள் ‘உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவை’ பெற்றாள்.

‘அவள் குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்’. உலக இரட்சகர் ஜனங்களின் பாவங்களிலிருந்து விடுதலை கொடுக்கவே இப்பூமிக்கு வந்தார் என வேதம் சொல்கிறது. சங்கீதம்14:2,3 வேத வசனத்தின்படி, ‘தேவனை தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்’.

வேத வசனத்தின்படி பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின் மேல் தங்கள் வழிகளைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது. அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது. நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன் என்று சொல்லி, நோவா என்னும் நீதிமானிடம் தேவன் ஓர் மரத்தால் ஒரு பேழையை உண்டு பண்ண கூறினார். தேவன் தனக்கு கட்டளையிட்டபடியே எல்லாம் அவன் செய்து முடித்தான்.

ஆதியாகமம் 9:1-2 என்ற வசனத்தின்படி, பேழையிலிருந்த 8 பேருடன் கடவுள் அவர்களை ஆசீர்வதித்து நீங்கள் பல்கி பெருகி பூமியை நிரப்புங்கள் என்று சொல்கிறார். இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலபிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லை என்றும், பூமியை அழிக்க இனி ஜலபிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றேன் என்றும் கடவுள் கூறினார்.

நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன். அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கையின் அடையாளமாகும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும் போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். ‘அப்பொழுது எல்லா மாம்ச ஜீவன்களையும் அழிக்க இனி ஜலமாவது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவு கூறுவேன் என்றார்.

அந்த வில் மேகத்தில் தோன்றும் போது, தேவனுக்கும் பூமியின் மேலுள்ள சகல வித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவு கூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன் என்று சொன்னார்.

கிறிஸ்மஸ் தினம் டிசம்பர் 25 ஆம் திகதி என்று ரோமாபுரியில் ஆட்சி செய்த (கி.பி. 353 ஆம் ஆண்டளவில்) கொன்ஸ்தாந்தின் ஆட்சியின் போது தான் பிரகடனப்படுத்தப்பட்டது.

உரோமையப் பாப்பாண்டவர் கி.பி 440 அல்லது 441 இல் வெளியிட்ட அறிக்கையில் கிறிஸ்மஸ் இந்த நாளில் தான் கொண்டாடப்பட வேண்டும்என்று அறிவுறுத்தினார். 4 ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் கிறிஸ்தவ உலகம் கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆதி திருச்சபையானது களியாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபடாமல் புற இனங்களிலிருந்து இறைவனை அறிந்து வந்தவர்களுடன் ஆன்மீக ரீதியாக இறைவனை ஆராதனை செய்து இறைதூதை போதித்து ஆன்மீக வளர்ச்சியில் ஈடுபட செய்து இறைவனை மகிமைப்படுத்தியது.

கிறிஸ்துவின் பிறப்பின் மூலம் இறைவன் நமக்கு என்ன சொல்லுகிறார் என்று நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

(யோவான் 3: 16, 17) என்ற வேத வசனத்தின்படி, தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளி உலகத்தில் அன்பு கூந்தார்.

இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பு சகலத்தையும் தாங்கும், நம்பும், விசுவாசிக்கும், உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதாகவே அவரை அனுப்பினார்.

பாவத்தில் சாபத்தில் வியாதியில் மரணத்திலிருந்து உம்மை மீட்கும்படியாக கிறிஸ்து பிறந்தார். (லூக்கா 1: 78) என்ற வேத வசனத்தின்படி அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கும் வெளிச்சம் கிடைத்தது.

“அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது” அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கின்றது. இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிக்கின்ற ஒளியே அந்த மெய்யான ஒளி என்கிறது யோவான் நற்செய்தி.

அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.

“இதோ நான் மரித்தேன் சதா காலங்களிலும் உயிரோடுயிருக்கிறேன்” மாட்டுத் தொழுவத்தில் பிறந்த கிறிஸ்துவின் பிறப்பை இன்று நாம் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாட்களில் பாவத்திலிருந்து நம்மை மீட்டு நித்தியத்திற்கு அழைத்து செல்ல நம் இருதயத்தை அவருக்கு கொடுத்து திக்கற்ற பிள்ளைகள், அநாதைகளுக்கு உள்ளதை பகிர்ந்து அவரின் வருகைக்காக காத்திருப்போம்.

அனைவருக்கும்

நத்தார் வாழ்த்துக்கள்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»