வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

விண்ணுலக வேந்தன் மண்ணில் மனிதனாக வந்தார்

விண்ணுலக வேந்தன்
மண்ணில் மனிதனாக வந்தார்

தூய ஆவியானவர் மூலமாக வார்த்தையாகிய தேவன் மாம்சமும் இரத்தமுமானார். மனிதனையும் தன்னை போல மறுரூபமாக்குதற்கே அவருடைய வருகையின் நோக்கமாயிருந்தது. அதனால் அவர் மனிதனானார். 2010 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார். ஆனால் பலருக்கு சந்தோஷத்தையும் சிலருக்கு கலக்கம் பயத்தையும் கொடுத்தது.

‘... எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி; கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்’ (லூக். 210-11) என்ற ஒரு அறிவிப்பும் கொடுக்கப்பட்டது.

காலம் நிறைவேறினப் போது இயேசு மனிதசாயலை தரித்து மனித அனுபவத்தைத் தம் மீது எடுத்துக் கொள்ளும் தேவனுடைய திட்டம் நிறைவேறிற்று. இந்த மாவேந்தன் தேவனாக மாறாமல் மண்ணின் மைந்தனானார். ‘அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள் வாசம் பண்ணினார்’ (யோவா. 1:14).

இது எப்படி சம்பவிக்கக் கூடும்? ‘நீர் கர்ப்பவதியாவாய்’ என்று கன்னி மரியாளிடத்தில் தேவதூதனால் கூறப்பட்ட பொழுது அவளும் இதே கேள்வியைத்தான் எழுப்பினாள்... (லூக். 129-34). அதற்கு தேவதூதனுடைய பதில் மிகவும் தெளிவாயிருந்தது. பரிசுத்த ஆவி உன் மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது. தேவனுடைய குமாரன் எனப்படும் (லூக். 1:35).

பெத்லகேம் என்னும் சிற்றூரில்:

வேந்தன் யாரிடத்தில் எப்படி எங்கே பிறக்க வேண்டும் என்ற இறைவனுடைய திட்டம் மிக நேர்த்தியாக நடைபெறுகிறதை காண்கிறோம். விண்ணக வேந்தனை பெற்றேடுக்க மரியாளை தெரிந்து கொண்ட தேவன், எப்படி பிறக்க வேண்டும் என்பதிலும் கருத்தாக செயல்பட்டுள்ளார். கன்னிப்பெண் பரிசுத்த ஆவியின் பலத்தால் கர்ப்பம் தரிக்கிறாள். பிள்ளையை பெற்றெடுக்க தேவன் தெரிந்துக் கொண்ட ஊர் பெத்லகேம்.

இங்கே பல வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற இடமாகவும் அமைந்துள்ளது. பெத்லகேம் மலைச் சரிவுகளில் அழகாக அமைந்துள்ள ஒரு ஊராகும். நமது முற்பிதாக்களில் ஒருவரான கோத்திர பிதாவாகிய யாக்கோபு, தன்னுடைய இரண்டாவது மனைவி ராகேலை இங்கேதான் அடக்கம் செய்தார்.

இங்குதான் தாவீது சிறுவனாக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வேளையில் அவனை மன்னனாக முடிசூட்ட தீர்க்கதரிசியாகிய சாமுவேல் இந்த ஊருக்குத்தான் வந்தார். தாவீதின் புகழ் பாரெங்கும் பரவியப் போது, பெத்லகேம் தாவீதின் ஊர் என்றே அழைக்கப்படலாயிற்று. யோசேப்புக்கும் அதுவே பிறந்த ஊராயிற்று. இத்தனை சிறப்புகளை கொண்ட இடத்தையே இறைவன் விண்ணின் வேந்தன் பிறக்கும் இடமாகவும் தெரிந்துக் கொண்டார்.

குடிமதிப்பு எழுத பெத்லகேம் எல்லையைக் கிட்டியப் போது மரியாலுக்கு பிரசவம் ஏற்பட்டது. சத்திரத்தில் இடம் இல்லாததால் விண்ணின் வேந்தன், மன்னாதி மன்னன் மண்ணில் பிறந்ததும் மாட்டுத் தொழுவத்தின் முன்னிலையில் (வைத்தார்கள்) கிடத்தினார்கள்.

இந்த விண்ணக வேந்தனின் பிறப்பை பறைசாற்ற விண்ணில் விடிவெள்ளி தோன்றினான். அதை கண்ட கிழக்கு தேசத்து வான சாஸ்திரிகள் பிரயாணப்பட்டு, ஏரோது ராஜாவிடம் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருப்பவர் எங்கே என்று விசாரித்தார்கள்.

அவர்கள் அவரை அரண்மனையில் சந்திக்க எதிர்பார்த்தார்கள். காரணம் அவர் ராஜா என்பதை விடிவெள்ளி மூலமாக அறிந்து கொண்டார்கள். இதை கேட்ட ஏரோது ராஜா பயந்து கலங்கினான். வந்த வான சாஸ்திரிகளோ விண்ணரசை வாழ்த்தி வணங்கி விடை பெற்றார்கள்.

விண்ணவரின் பிறப்பின் செய்தியைக் கேட்ட மந்தை மேய்ப்பர்கள் மகிழ்வுடன் கண்டு கழித்தனர். அத்தோடு இச்செய்தியை மற்றவர்களுக்கும் பறைசாற்றினர். இந்த செய்தியைக் கேட்ட பலர் பாலகனைக் கண்டுபரவசமுற்றனர்.

இந்த நாட்களிலே அவருடைய பிறப்பு உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அவருடைய பிறப்பின் செய்தி சகல ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று தேவதூதன் உரைத்தப்படி அதைக் கேட்ட ஆயர்கள் அகமகிழ்ந்தனர்.

மறுபுறத்தில் இச்செய்தியை கேட்ட ஏரோதும், பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் கலங்கினார்கள் அன்று. இன்று இச்செய்தி எத்தனையோ பேருக்கு சந்தோஷத்தையும் மனமாறுதலையும் கொண்டு வருகிறது என்பதே முக்கியமாக உள்ளது. விண்ணக வேந்தன் மண்ணில் மனிதனாக மாறியது மாந்தரை மறுரூபமாக்குவதற்கேயாகும்.

‘அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களால் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்’ (யோவா. 1:12).

அந்த விண்ணுலக வேந்தனை இந்த மனுகுலத்தில் விசுவாசித்து ஏற்றுக் கொள்ளுகிறவர்களை தம்முடைய சாயலாக மறுரூபமாக்குகிறார். தினகரன் வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுவதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»