வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

ஈரான் பள்ளிவாசல் தாக்குதலை அமெரிக்கா - இஸ்ரேல் திட்டமிட்டன

ஈரான் பள்ளிவாசல் தாக்குதலை அமெரிக்கா - இஸ்ரேல் திட்டமிட்டன

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உதவியதாகவும் தெஹ்ரான் ஆவேசம்

ஈரான் ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசல் தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளதாக ஈரான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை ஈரானின் பஜுலுஸ்தான் மாகாணத்திலிருந்த ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசலில் இரட்டைத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 27 பேர் பலியானதுடன் நூற்றுக்கு மேலானோர் காயமடைந்தனர். ஈரானின் இந்த மாகாணம் சுன்னி முஸ்லிம்களை அதிகமாகக் கொண்டுள்ளதுடன், பாகிஸ்தானின் எல்லைக்கருகில் உள்ளது. இந்த மாகாணத்துக்கு தன்னாட்சி வேண்டி ஜுன்துல்லா என்ற சுன்னி அமைப்பு போராடுகின்றது.

இந்த அமைப்பே இத்தாக்குதலையும் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதைத்திட்டமிட்டதாகவும் அமெரிக்கா இஸ்ரேல் என்பன இத்தாக்குதலை ஊக்குவித்ததாகவும் ஈரானின் உள்துறையமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த தினம் ஆறு குற்றவாளிகளை சுட்டுக் கொன்றோம். 40 பேரைக் கைது செய்தோம். கைதானோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.க்கும் தாக்குதலை நடத்தியோருக்கும் உறவுள்ளதாக காட்டுகிறது.

பாகிஸ்தானில் வைத்தே போராளிகள் பயிற்றப்பட்டுள்ளனர் என்றும் ஈரானின் உள்துறையமைச்சர் சொன்னார். ஈரானுடன் உறவுகளைத் தொடர பாகிஸ்தான் விரும்பினால் ஜுன்துல்லா அமைப்புடனுள்ள தொடர்பை மீளாய்வு செய்ய வேண்டும்.

குற்றவாளிகளை எங்களிடம் (ஈரானிடம்) ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமென்றும் ஈரான் கோரியுள்ளது. ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்கா ஐ.நா. என்பன கண்டித்துள்ள போதும் ஈரான் இதை நம்பத்தக்கதாக இல்லை.

ஈரானின் அமைதியைக் குலைத்து அரசியல் இராணுவ ஆதாயம் பெற ஷியா சுன்னி மத மோதல்களை கருணையில்லாத அமெரிக்காவும், இஸ்ரேலும் தூண்டிவருவதாக ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.

பாகிஸ்தான் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரை இஸ்லாமாபாத்திடமிருந்து எவ்வித கருத்தையும் பெறவில்லை.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »