வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

சாதிப்பதற்கு எனக்கு இனிமேல் எதுவுமில்லை; இளைஞர்களுக்கு வழிவிட்டு விலக விரும்புகின்றேன்

சாதிப்பதற்கு எனக்கு இனிமேல் எதுவுமில்லை; இளைஞர்களுக்கு வழிவிட்டு விலக விரும்புகின்றேன்

காலி மைதானத்தில் வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடை கொடுக்கிறார் முரளிதரன்

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் முரளிதரனின் 18 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை, காலியில் நடைபெறும் டெஸ்டுடன் முடிவுக்கு வருகிறது. 1992 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம் ஆன முரளிதரன், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விடைபெறுகிறார். அவருக்கு மறுக்க முடியாத வகையில் வழியனுப்ப விழா நடத்த இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.

38 வயதான முரளிதரன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்கள் விழ்த்திய உலக சாதனையாளர். 132 டெஸ்ட் விளையாடி 792 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். கடைசி டெஸ்ட் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது ;-

காலியில் நேற்று நடைபெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போது

இது ஒரு மிகப் பெரிய ஆட்டம் என்று நான் சொல்ல மாட்டேன். இது மற்றொரு சாதாரண ஆட்டம் தான். எனக்கு இது கடைசி போட்டியாகும். கடந்த 18 – 19 ஆண்டுகளாக நான் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி டெஸ்டில் சிறப்பாக விளையாடி, இலங்கைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

எனது இறுதி டெஸ்டில் ஒரு விக்கெட்டும் எடுக்க முடியாமல் போனாலும் அல்லது 5 விக்கெட் வீழ்த்தினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். எனது அனைத்து யுக்திகளையும் இதில் பயன்படுத்த முயற்சிப்பேன். அதற்கு பலன் கிடைக்குமா? இல்லையா என்பதை பார்க்கலாம். எத்தனை விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது பற்றி நினைக்காமல் களத்தில் உற்சாகமாக ரசித்து விளையாடுவேன். எனக்குள் அதிகமான நெருக்கடியை கொடுக்கமாட்டேன்.

முதலில் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெற திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இடையில் இந்தியா - இலங்கை தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டதால், இதுதான் சரியான நேரம் என்று நினைத்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால் தொடரின் பாதியிலேயே விலகுவதில் எனக்கு எந்த வருத்தமும், வேதனையும் இல்லை. நான் செய்த சாதனைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றன.

நான் உண்மையிலேயே அணிக்கு தேவையாக இருந்தால், உடல் தகுதியுடன் இருந்தால் 2011ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன். இல்லாவிட்டால் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒரு நாள் போட்டியில் இருந்தும் விலகுவேன்.

இன்னும் சாதிப்பதற்கு எனக்கு எதுவுமில்லை. நான்கு உலக கோப்பை போட்டிகளில் விளையாடிவிட்டேன். அதில் ஒரு முறை வெற்றிபெற்றிருக்கிறோம். ஒரு முறை 2வது இடத்தைப் பிடித்து இருக்கிறோம். ஐ. பி. எல். கிரிக்கெட்டில் இன்னும் 2 – 3 ஆண்டுகள் விளையாடுவேன் என்றார் முரளிதரன்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
»