புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
புதிய அரசின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் மட்டக்களப்புக்கு செலுத்தப்படுமா?

புதிய அரசின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் மட்டக்களப்புக்கு செலுத்தப்படுமா?

புதிய அரசின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் விஷேட உரையாற்றிய ஜனாதிபதி, போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட எல்லைக் கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதனை தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த முப்பது வருடகால கொடிய யுத்தத்தினால் சின்னாபின்னமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தம் ஓய்ந்த பின்னர் இம் மாகாணங்களை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான எந்த விசேட செயல்பாடுகளும் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணத்தினால் யுத்த காலத்தில் போர்க்களமாக காணப்பட்ட பகுதிகள் யுத்தம் ஓய்ந்து ஏழு வருட காலம் சென்றும் இன்னும் அந்த யுத்த வடுக்களை பேணிப் பாதுகாப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நில அமைப்பினை பெளதிக ரீதியாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடலுக்கும் மட்டக்களப்பு வாவிக்கும் இடைப்பட்ட பகுதியைன எழுவான் கரை என்றும் மட்டக்களப்பு வாவிக்கும் மாவட்ட எல்லைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியினை படுவான்கரை என்றும் வகுக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் படுவான்கரையினை பொன் விளையும் பூமி என அழைப்பர். இப் பகுதியானது மட்டக்களப்பில் கூடுதலான நிலப்பரப்பினைக் கொண்டுள்ள பிரதேசமாகவும், முழுமையான வயல் நிலங்கள், சிறிய பெரிய குளங்கள் என 900க்கும் மேற்பட்ட நீர்பாசனக் குளங்களை இப் பிரதேசம் கொண்டுள்ளது. அத்துடன் விலங்கு வளர்ப்புக்கான முழுமையான மேய்ச்சல்தரைப் பிரதேசம் மற்றும் மீன்பிடி என்பன செறிந்துள்ள பிரதேசமாக படுவாங்கரை உள்ளது. இங்குள்ள மக்களில் கூடுதலானவர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளதுடன், கல்வி அறிவு, குடிநீர் மற்றும் சுகாதாரம் என்பன மிகவும் குறைந்த வசதியுடனே இன்றுவரை இம் மக்கள் வசிக்கின்றார்கள்.

வறுமையில் முன்னிலை வகிக்கும் மட்டக்களப்பு

போர் ஓய்ந்தாலும் வறுமையில் முதலிடத்தில் (2010) மட்டக்களப்பு காணப்பட்டது. இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின்படி மட்டக்களப்பு மூன்றாவது இடத்துக்கு (2013) உயர்வு காணப்பட்டாலும் இதன் அசைவு மிகக் குறைந்த நிலையிலே காணப்பட்டுள்ளது. இதில் 80 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்கள் இப் பிரதேசத்தில் வசிக் கின்றார்கள் என்பது எத்தனை அரசியல்வாதிகளுக்கு தெரியும். ஆனால் போர் ஓய்ந்து ஏழு வருடகாலம் உருண்டு ஓடினாலும் இவர்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதைப்போல் போரால் விதவையானவர்கள் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் உள்ளது. இவர்களின் வாழ்வாதாரமும், குடும்ப சுமையும் எந்தவிதத்திலும் மாற்றமடையவில்லை.

நீர்ப்பாசன திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்கு முன்னர் பொன்விளையும் பூமியாக அழைக்கப்பட்ட படுவான்கரையானது போருக்குப் பின்னர் இன்னும் அந்த பெயரை பெறும் வகையிலான செயல்பாடுகள் எதனையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் நகர மக்களுக்கான குடி நீர் பிரச்சினையினை தீர்க்கும் வகையிலான திட்டமான உன்னிச்சை குளத்தின் புனரமைப்புக்காக தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் கச்சை கட்டி நின்றார்கள். ஆனால் இந்த உன்னிச்சை குளத்தின் அருகில் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் படுவான்கரை மக்களுக்கான குடிநீர் பிரச்சினையினை தீர்ப்பதற்கு இன்றுவரை எந்த அரசியல்வாதிகளினாலும் சிறப்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

முழுமையான நெல்வயல்களையும், விலங்கு வளர்ப்பினையும் கொண்டுள்ள படுவான்கரையானது 900க்கும் மேற்பட்ட நீர்ப்பாசன குளங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள வயல் நிலங்களில் கணிசமான வயல்கள் வானம்பார்த்த பூமியாகவே உள்ளது. இரண்டு போகம் வேளாண்மை செய்யக்கூடிய வயல்களைக் கொண்டுள்ள போதும் போதுமான நீர்ப்பாசன வசதியில்லாத காரணத்தினால் வயல்களின் உத்தம விளைவினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

அத்துடன் இதில் வேளாண்மை செய்யும் விவசாயிகள் அடிக்கடி நட்டமைவதனையும் குறிப்பிட வேண்டும். மழையினை நம்பி மேற்கொள்ளப்படும் பெரும் போகத்தின் போது, பெரு வெள்ளம் ஏற்படுமாக இருந்தால் அழிந்து போகும் அல்லது மழையில்லாவிட்டாலும் அழிந்து போகும். எனவேதான் இக்குளங்களை புனரமைப்பதற்கான விஷேட நடவடிக்கைகள் எதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதில் கணிசமான நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்ட குளங்கள் தூறந்து போன நிலையிலே உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த செயல்பாடு

கடந்த காலத்தில் இருந்த தவறான மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமனம் காரணமாக மாவட்டத்தினை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதனை உணர்ந்த புதிய அரசானது, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரை நியமிப்பதாயின் அம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சியினரே இருக்க வேண்டும் எனும் எண்ணப்பாட்டினை மக்கள் விருப்பத்துடன் வரவேற்கின்றார்கள். இதன் மூலம் குறுகிய எண்ணம் இன்றி மாவட்ட அபிவிருத்தியில் கவனம் செலுத்துவார்கள்.

எஸ்.தியாகராசா

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.