புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
இனிவரும் காலங்களில் தேசிய அரசாங்கமே நாட்டுக்கு விமோசனம் அளிக்கும்

இனிவரும் காலங்களில் தேசிய அரசாங்கமே நாட்டுக்கு விமோசனம் அளிக்கும்

அகில விராஜ் காரிய வசம்

ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்களுடனான நேர்காணல்

கேள்வி: இந்நாட்டில் பொதுத் தேர்தல் என்பது ஒரு யுத்தம் போன்றது. எனினும் இந்த முறை தேர்தலை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது அமைதியான ஒரு தேர்தலாக அமைந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான முறையில் உதவி செய்ததை ஏற்றுக் கொள் கின்aர்களா?

பதில்: ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரச்சினைகளுக்கு ஏற்பவே செயற்பட்டார். மஹிந்தவும் அவரது திருட்டுக் கும்பலும் இல்லாத ஒரு மக்கள் செல்வாக்கைக் காட்டி ஸ்ரீ.ல.சு.கட்சியை இரண்டாக்குவதற்காகச் செயற்பட்டார்கள். அவ்வேளையில் கட்சியின் தலைவர், கூட்டணியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால கட்சிக்காகவே செயற்பட்டார்.

62 இலட்சம் வாக்குகளினுள் உள்ளடங்கிய வாக்குகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஊடாக ஐக்கிய தேசிய கட்சிக்கு விஷேடமான நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது சரியாகச் சிந்திக்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு இந்த பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால் அது மேற்கத்தைய நாடுகளின் தேர்தல்களைப் போல மிகவும் அமைதியான ஒரு தேர்தலாகும்.

தேர்தல்கள் ஆணையாளருக்கு மாத்திரம் சிலர் இதற்காக நன்றி கூறுகின்றனர். அது தவறானது. அவரது உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அன்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இடமளிக்காத போதும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அவரது அனைத்து உத்தரவுகளையும் மதித்து நடக்கவும் அவரால் சுதந்திரமாகச் செயற்படவும் இடமளித்தது. இது தான் உண்மை. அரச ஊடகங்களிலும் கூட நேரடியாக அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு நாம் எதிர்க்கட்சி யினருக்கு இடமளித்தோம்.

1994ம் ஆண்டில் சந்திரிக்கா அம்மையாருக்கு கிடைத்தது 105 ஆசனங்களே. அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொண்டே ஒரே ஒரு மேலதிக ஆசனத்தைக் கொண்டு அரசாங்கத்தை அன்று அமைத்தார். தேவையாயின் அதைவிடவும் பலமிக்க வகையில் தனியான அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசிய கட்சியினால் முடியும்.

என்றாலும் நாம் நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவே பார்க்கின்றோம். அதனால்தான் தேசிய அரசாங்கத்திற்குச் செல்கின்றோம். அன்று ஒரு மேலதிக ஆசனத்தினைக் கொண்டு அமைக்கப்பட்ட சந்திரிக்காவின் அரசாங்கம் உடையும் வரையில் நாம் காத்திருந்த போதும் அந்த அரசாங்கம் 21 வருடங்கள் வரை ஓடியது.

கேள்வி: ஐக்கிய தேசிய முன்னணிக்கு இம்முறை 51 இலட்சம் வாக்குகள் கிடைத்தது. எனனும் சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகளைக் கழித்துப் பார்க்கும் போது 45 - 46 இலட்சம் வாக்குகள் ஐ.தே.கட்சிக்கு இருக்கும். கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 47 இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. இன்று நாட்டில் வாக்காளர்கள் அதிகரித்துள்ள போதும் ஐ.தே.கட்சியின் வாக்குகளின் வீதம் போதாது என்பதை ஏற்றுக் கொள்கின்aர்களா?

பதில்: இங்கு ஒரு வாதம் இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் பொதுத் தேர்தலில் கிடைப்பதில்லை. அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளில் சரிவு இடம்பெறவில்லை.

கேள்வி: ஐக்கிய தேசிய கட்சிக்கு இன்று 106 ஆசனங்களுடன் முஸ்லிம் காங்கிரசின் ஓர் உறுப்பினரும் 107 ஆசனங்கள் உள்ளது. ஸ்ரீ.ல.சு.கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தின் மூலமாகவா 113 ஆசனங்களைப் பூரணப் படுத்துகிaர்கள்? கடந்த 100 நாள் தேசிய அரசாங்கம் அனாதையாகியுள்ளது என்பது உங்களுக்கு மறந்துள்ளதா?

பதில்: ஐக்கிய தேசிய கட்சிக்கு தனியாக ஆட்சி அமைக்க ஆறு ஆசனங்களே தேவைப்படுகின்றது. தற்போதைக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி உட்பட பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 25 உறுப்பினர்கள் தனியாக எம்மோடு பேசியிருக்கின்றார்கள். என்றாலும் மக்கள் நிராகரித்த மஹிந்த ராஜபக்ஷவின் அந்த முறையினை ஐக்கிய தேசிய கட்சியும் நிராகரிக்கின்றது.

எமக்குத் தேவை உண்மையான நல்லாட்சி. நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டுக்குத் தேவையான அரசியல் அமைப்பில் மாற்றத்தையும், தேர்தல் முறைகளில் மாற்றத்தையும், வடக்கிற்கு ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது போன்ற மிக முக்கியமான வேலைகளைச் செய்வதுமேயாகும். இதற்காக ஸ்ரீ.ல.சு.கட்சியை மாத்திரமல்ல விருப்பமுள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொள்வோம்.

பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை ஏற்படுத்த முடியுமாக இருந்தால் அதற்கு பிரதமர் தயாராக உள்ளார். ஐக்கிய தேசிய கட்சியானது அமைச்சுப் பதவிகளையும் சலுகைகளையும் அனுபவிப்பதை மாத்திரம் நோக்காகக் கொண்ட மோசமான கொள்கையுள்ள இடத்தில் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியானது நாட்டுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றி நாட்டுக்குத் தேவையான விடயங்களைச் செய்யவே முயற்சிக்கின்றது. இதுவே நாட்டுக்குச் சிறந்ததாகும்.

கேள்வி: எனினும் கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட தேசிய அரசாங்கச் செயற்பாடு வெற்றி பெறவில்லை. இம்முறையும் அவ்வாறு நடந்தால்...?

பதில்: கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சியினர் சிலர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் வெளியேறினார்கள். இன்னும் சிலர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்த முறை அவ்வாறு முடியாது. இதற்கான சிறந்த ஒரு முன்மாதிரியை இரண்டாவது உலக யுத்த காலத்தில் பிரித்தானியாவிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

பிரதமர் சர்ச்சில் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் இரண்டு கட்சிகளைச் சேர்ந்தோரையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்தைக் கொண்டு சென்றார்கள். எதிர்க்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் ஒரு வரையறைக்குள் பொறுப்புடன் குறைகளைச் சுட்டிக் காட்டி விமர்சனங்களைச் செய்தார்கள். அந்த முன்மாதிரியை எமது எதிர்க்கட்சியினரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லாமல் நினைத்த நினைத்த மாதிரியெல்லாம் பொய்யான விமர்சனங்களைச் செய்யக் கூடாது. ஏனென்றால் இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் இடம்பெற்றதைப் போன்று நிதிச் சட்டங்களைத் தோற்கடிக்கவும், முட்டாள்தனமாகச் செயற்படவும் அவர்களுக்கு உரிமையில்லை.

அடுத்து அன்று 100 நாள் வேலைத்திட்டத்தில் எம்மிடம் 42 உறுப்பினர்களே இருந்தனர். கூட்டணியில் 150 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலை அதற்கு நேர்மாறானது. இதனால் இந்தப் பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதை விடுத்து நாட்டை பாதிக்கும் விடயங்களைச் செய்ய எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.

எம்மால் தனியான ஆட்சியை அமைப்பது ஒரு பிரச்சினையே அல்ல. எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்து நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவே நாம் முயற்சிக்கின்றோம்.

கேள்வி: இரண்டில் மூன்று பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்து நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்களைப் போன்று ஆபத்தான விடயங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். சர்வாதிகார 18வது யாப்புத் திருத்தம் போன்ற விடயங்கள் இதற்குச் சான்றானதல்லவா?

பதில்: அன்று தனி ஒரு கட்சியினாலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனால் இம்முறை அவ்வாறில்லை. பல கட்சிகளின் இணக்கப் பாட்டினுள்ளேயே இம்முறை மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசு அமைக்கப்படுகின்றது.

இதனால் தனி நபர் ஒருவரினதோ, தனி ஒரு குடும்பத்தினதோ நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு இந்த வாய்ப்பை ஒருபோதும் பயன்படுத்த இடமளிக்க மாட்டாது. ஐக்கிய தேசிய கட்சி அதற்கு இடமளிக்கவும் மாட்டாது.

அத்தோடு இன்றுள்ள ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டைப் பற்றிச் சிந்திப்பவர்களேயன்றி தமதோ தமது குடும்பத்தினதோ நலன்கள் பற்றிச் சிந்திப்பவர்கள் அல்ல. அதற்காகப் பதவியைப் பாவிக்க வந்தவர்களுமல்ல.

 இந்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி நாட்டை அபிவிருத்தியடையச் செய்து இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பையும் சிறந்த கல்வியையும் பெற்றுக் கொடுத்து இந்நாட்டு மக்களுக்கு நன்மைகளை வழங்குவதே எமக்குத் தேவை.

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருணாகலில் போட்டியிட்டதால் ஐக்கிய தேசிய கட்சியினால் அந்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகித்த நீங்கள் அந்த மாவட்டத்தின் இறுதி முடிவுகளைப் பற்றி என்ன கருதுகிaர்கள்?

பதில்: யுத்தத்தை நிறைவு செய்த ஒரு தலைவர், நாட்டை அபிவிருத்தி செய்த ஒரு பிரபலமிக்க தலைவர் என்று கூறிக் கொண்டுதான் மஹிந்த ராஜபக்ஷ குருணாகலில் போட்டியிட வந்தார். அங்கு ஐக்கிய தேசிய கட்சி 30 ஆயிரம் போன்ற சிறியதொரு வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தாலும் அது எமக்கு ஒரு பின்னடைவல்ல. எமக்கு அது ஒரு முன்னேற்றமே.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தை சுமார் 80 ஆயிரம் வாக்குகளினால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தார். எனினும் இம்முறை அவர்கள் 30 ஆயிரம் வாக்குகளினாலேயே வெற்றி பெற்றுள்ளார்கள்.

எனவே பின்னடைவு அவர்களுக்கே அன்றி எமக்கல்ல. குருணாகல் மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வாக்குகளையும் சேர்த்துப் பார்த்தால் உண்மையிலேயே அவர்கள் அங்கு தோல்வியடைந்துள்ளார்கள்.

எம்.எஸ்.முஸப்பிர்...-

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.