புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர் யார்?

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட

புலிகளின் முக்கிய உறுப்பினர் யார்?

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதி சேகரிப்பு நடவடிக் கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரை நேற்று முன்தினம் வெள்ளியன்று இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 37 வயதான இந்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சமூக விருந்தினர் அனுமதிப் பத்திரம் மூலம் மலேசியாவுக்குள் நுழைந்திருந்தார்.

தீவிரவாத முறியடிப்பு பிரிவின் புகிட் அமான் சிறப்பு பிரிவினர் கோலாலம்பூரில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது இவர் கடந்த 7 ஆம் நாள் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் மலேசியாவில் தங்கியிருந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க நிதி திரட்டினார் என்று தாம் நம்புவதாக, மலேசிய காவல்துறைத் தலைவர் தான் சிறி காலித் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கடனட்டை மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதும், அதில் வெளிநாட்டவர்களை ஈடுபடுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவின் குடிவரவுச் சட்டங்களை மீறி மேலதிக நாட்கள் தங்கியிருந்த அவரைக் கைதுசெய்து, நேற்று சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பியதாகவும் மலேசிய காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டவரின் பெயர் விபரங்களை மலேசிய காவல்துறை வெளியிடவில்லை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.