புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 
தேர்தல் வரலாற்றில் வன்முறைகள் குறைந்த பாராளுமன்றத் தேர்தல்

தேர்தல் வரலாற்றில் வன்முறைகள் குறைந்த பாராளுமன்றத் தேர்தல்

196 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 6,151 வேட்பாளர்கள் போட்டி:

நாளை தேர்தல்; ஏற்பாடுகள் பூர்த்தி

ஒரு கோடி 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கத் தகுதி

* நாடு முழுவதும் 12,314 வாக்களிப்பு நிலையங்கள்

* 1600 வாக்குகள் எண்ணும் நிலையங்கள்

* தேர்தல் கடமைகளில் 1,30,000 அதிகாரிகள்

* கண்காணிப்பு பணியில் 170 வெளிநாட்டவர்கள்

பதினைந்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நாளை (17) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில், 6151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளில் 3653 வேட்பாளர்களும், சுயேச்சைக் குழுக்களில் 2498 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இவர்களைத் தெரிவு செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பதற்கென நாடு முழுவதும் 12,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1600 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளில் 1,30,000 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர். எண்ணும் பணிகளில் 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவர்.

வாக்கெடுப்பைக் கண்காணிக்கவென 170 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அடங்கலாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தல் வரலாற்றில் வன்முறைகள் குறைந்த, தேர்தல் சட்டங்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்ற ஓர் அமைதியான தேர்தல் எனக் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தினூடாக அமைதியான தேர்தலுக்கு வழிகோலப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று தேர்தல்கள் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச, தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிக்க வசதியாக போதுமானளவு விடுமுறை வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்குத் தேவையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தேர்தல்கள் செயலகத்தின் சட்டம், விசாரணை பிரிவின் மேலதிக ஆணையாளர் எம். எம். மொஹமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

வாக்களிக்கச் செல்லும் பொது வாக்காளர் அட்டையுடன், ஆளடையாளத்தை நிரூபிக்கக் கூடிய ஆவணத்தைக் கொண்டு செல்லுமாறு தெரிவித்த அவர், மக்கள் வாக்களிப்பதன் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்குத் தேர்தல்கள் செயலகம் உத்தரவாதம் அளிக்குமென்றும், வாக்காளர் ஒருவர் யாருக்கு வாக்களித்தார், எந்தக் கட்சிக்கு வாக்களித்தார் போன்ற விபரங்கள் எதுவும் எவருக்கும் தெரிய வராதென்றும் கூறினார்.

இதேவேளை, இந்தத் தேர்தலில் இரண்டு புதிய விடயங்கள் அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்த மேலதிக ஆணையாளர் மொஹமட், தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தேர்தல்கள் செயலகத்திற்குக் குறுந்தகவல் மூலம் முறையிட முடியுமென்றும் தெரிவித்தார். ரிவி இடைவெளி ரிV இடைவெளி மாவட்டம் - முறைப்பாடு என்பவற்றைக் குறித்து 2343 என்ற இலக்கத்துக்கு குறுந் தகவலை அனுப்ப வேண்டும்.

அதே நேரம், தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகத்தர்களும் குறுந்தகவல் மூலம் தேர்தல் நிலவரங்களை ஆணையாளருக்கு அறிவிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 6.30 இற்கு வாக்களிப்பு நிலையம் தயார், 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்துவிட்டது போன்ற சகல நிலவரங்களையும் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகள்

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1640 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகக் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

அரச ஊழியர்களைப் பயன்படுத்தல், நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், சட்டவிரோத பிரசாரங்கள் உள்ளிட்ட 1499 முறைப்பாடுகளும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளிட்ட வன்முறைகள் தொடர்பில் 111 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் கூடுதலான தேர்தல் விதி மீறல்கள் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே சமயம், பிரசாரங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் இரண்டு நாள் அமைதிச் சூழலில் பிரசாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் பட்சத்தில் அவர்களின் உறுப்புரிமை ரத்துச் செய்யப்படுவதுடன் ஏழு ஆண்டுகளுக்குக் குடியியல் உரிமை பறிக்கப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

புதியவர்களுக்கான தகவல் மையம்

புதிதாகத் தெரிவாகும் உறுப்பினர்கள் பாராளுமன்றம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமுகமாக எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை காலை 9.30 முதல் பிற்பகல் 3.00 மணிவரை தகவல் மையமொன்று செயற்படவுள்ளது. உறுப்பினர்கள் தமது ஆளடையாள அட்டையைக் கொண்டு வருவதுடன் www.parliaசீலீnt.lk என்ற இணையத்தளத்தில் உள்ள படிவத்தை நிரப்பி பதிவிறக்கம் செய்துகொண்டு வரவேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இங்கு 15 இலட்சத்து 86 ஆயிரத்து 600 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடுதலான சுயேச்சை குழுக்கள் போட்டியிடுவதால் அங்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.