புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* ஜெனீவா பயணமும் ஐந்தாம் குறுக்குத் தெரு டொயிலட்டும்

சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாது எந்த முகத்துடன் இந்த அரசு ஜெனீவா செல்லப்போகிறது என மனோ கணேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். மாநகர சபை தேர்தலில் அளித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுள் ஒன்றான 5ம் குறுக்குத் தெருவில் மலசலகூடத்தை கடந்த மூன்று வருடமாக அமைத்துக் கொடுக்காதவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மாகாண சபைத் தேர்தலில் அதே 5ம் குறுக்குத் தெருவிற்கு வாக்குக் கேட்டு வரப் போகிறாரோ தெரியவில்லை என்று நாம் கேட்கவில்லை, 5ம் குறுக்குத் தெரு நாட்டாமை நண்பர்கள் கேட்கிறார்கள்

* சந்தா பணமும், சுயநலமுமே தொழிற்சங்கங்களின் குறிக்கோளாம்

தொழிற்சங்கங்களிடையே தொழிலாளர் பற்றிய நலனே கிடையாதாம். சந்தாவும், சுயநலமுமே குறிக்கோளாம், சொல்பவர் சட்டத்தரணி பி. இராஜதுரை ஐயா. ஆனால் இதனைக் கூறும் ஐயாவும் ஒரு தொழிற்சங்கவாதி, முன்னர் பெரிய தொழிற் சங்கமொன்றின் உப தலைவர். இப்போ இன்னொரு சங்கத்தின் பிரதித் தலைவர். இவர் ஒரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்து அதில் சந்தாவே பெறாது பத்து தொழிலாளர்களையாவது சேர்த்து சொந்தப் பணத்தில் அத்தொழிலாளருக்குச் சேவை செய்பவராக இருந்தி ருந்தால் ஐயாவின் கருத்திற்கு பலமாக கை தட்டலாம். இதை விடுத்து பத்திரிகையில் பெயர் வர வேண்டுமென் பதற்காக....

முஸ்லிம் கல்வி மாநாடு

சோபை இழக்க காரணம்?

மர்ஹும் ஷாபி மரிக்காரினால் உருவாக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு இப்போது சோபை இழந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. கல்விமான் பேராசிரியர் அனஸ் தலைவராகவும் துடிப்பான இளைஞர் சட்டத்தரணி ரiத் எம். இம்தியாஸ் செயலாளராகவும், ஆர்வமுள்ள பலர் அங்கத்தவர்களாகவும் இருக்க இந்த அமைப்பு சோர்வடைய வாய்ப்பில்லையே என வினவியபோதுதான் உண்மை வெளிப்பட்டது. ஆட்சிக் குழு மாற்றத்தின் பின்னர் கடந்த செயற்குழுவினால் நடப்பு நிர்வாகிகளுக்கு முறையாக ஆவணங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை எனும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. எது எப்படியோ இது முறையல்ல என்பதே எமது முடிவாகும்.

* புகழ்ச்சியும், இகழ்ச்சியும்

இதன் மர்மம் என்னவோ?

முஸ்லிம் காங்கிரஸிலுள்ள சகல அரசியல்வாதிகளுமே அரசாங்கத்தையும், அதன் செயற்பாடுகளையும் புகழ்ந்து வருகிறார்கள். அண்மையில் கிழக்கில் ஒரு பாடசாலை வைபவத்தில் கூட ஒரு மு.கா. எம்.பி. இந்த அரசாங்கமே முஸ்லிம்களுக்கு அதிகமாக சேவையைச் செய்துள்ளதாக மிகப் பெருமையாகப் பேசியுள்ளார். அது உண்மை, சகலருக்கும் தெரிந்த விடயம். இவ்வாறு தனித்தனியாக அரசைப் புகழும் இவர்களது கட்சியோ தேர்தல் என்று வரும்போது, தாம் புகழும் அரசுடன் இணைந்து நிற்காது அரசாங்கத்தைச் சாடி தனித்து நிற்பதாகப் புறப்பட்டு விடுவர். பின்னர் தேர்தல் முடிந்ததும் பழையபடி இணைந்து புகழ்பாடுவர். இதன் மர்மம் என்னவோ? இது வாக்களிக்கும் மக்களுக்குப் புரியாத புதிராகவே இன்னமும் உள்ளது.

* தப்பித்துக் கொண்டார்

தம்பி தம்பிராசா

யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாகவும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கூட்டணியின் முக்கியஸ்தர் தம்பிராசா இத்தடவை ஏதோ கடவுள் புண்ணியத்தால் ஒருவாறு தப்பித்துக் கொண்டார். இவர் உண்ணாவிரதமிருப்பதை உள்ளூரில் எவருமே துளியளவும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இணையங்கள் சில இவரை ஹீரோவாக காட்டுவதைப் பார்க்கும் புலம்பெயர்ந்தவர்கள் சிலர் இவருக்கு ஆதரவாம். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் தலையிடியாம். ஆள் வைத்து கழிவு ஒயில் ஊற்றிப் பார்த்தனர், தம்பிக்கு பப்ளிசிட்டி பன்மடங்காகியது. உடனே சுரேஷ் பிரேமச்சந்திரனை அனுப்பி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். இதனால் இம்முறையும் சாகாது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட தம்பி தம்பிராசா அடுத்த சாகும் வரையிலான உண்ணாவிரதம் பற்றி யோசித்து வருகிறாராம்.

* தனது பெயரை மாற்றும்

நிலையில் மாநகர முதியவர்

கொழும்பு தமிழ்ச் சங்க வீதியின் பெயரை மாற்ற முயற்சித்த தனக்கு இப்போ தனது பெயரை மாற்றி வைக்க வேண்டிய நிலை வரும் போலுள்ள என்று புலம்புகிறாராம். அந்த முன்னணியின் முதியவரான மாநகர அரசியல்வாதி அந்தளவிற்கு தன்னைப் பலரும் கிண்டல் செயற்வதாக கவலைப்பட்டாராம். நன்மை செய்ய முயற்சித்த நல்ல மனுசன், இவ்விடயத்தில் தான் தனது சொந்த உட்கட்சி உறுப்பினர்களாலேயே உதறித் தள்ளப்பட்டதை உணர்ந்ததால் இரட்டிப்புக் கவலையுடன் காணப்படுகிறாராம். வீதி பெயர் மாற்ற விவகாரம் இழுபறிப்படுவது குறித்து அதிகம் சந்தோசப்படுவது இவரது கட்சியிலுள்ள பலர்தானாம் என்றால் பலர் நம்பமாட்டார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.