புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
இன நல்லுறவை சீர்குலைக்க முயலும் சில தமிழ் - முஸ்லிம் அரசியல்வாதிகள்

கல்முனை வீதி பெயர் மாற்றல், தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம்;

இன நல்லுறவை சீர்குலைக்க முயலும் சில தமிழ் - முஸ்லிம் அரசியல்வாதிகள்

கைவிட வேண்டுமென்கிறார் செனட்டர் மசூர் மெளலானா

இனநல்லுறவைச் சீர்குலைக்கும் முயற்சிகளை தமிழ், முஸ்லிம் அர சியல்வாதிகள் கைவிட வேண்டு மெனவும் சமாதானம் ஏற்பட்டு மீண்டும் இரண்டு சமூகமும் ஒற்று மையுடன் வாழத் தலைப்பட்டுள்ள நிலையில் நிதானமாகச் செயற்படுவது அனைவரினது கடமையாகுமென்று கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் செனட்டர் மசூர் மெளலானா தெரிவித்தார்.

கல்முனையில் அண்மைக்காலமாக எழுந்துள்ள நிலை கவலை தருவதாகத் தெரிவித்த மசூர் மெளலானா, தமிழர்களின் அபிலாஷைகளை முஸ்லிம்கள் மதித்துப் பழக வேண்டிய அதேவேளை முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு தமிழர்கள் மதிப்பளிக்க வேண்டுமென்றார்.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் தொடர்பில் இரண்டு தரப்பும் மனம் விட்டுப் பேசி உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார். எல்லை நிர்ணயம் மேற்கொண்ட பின்னர் தனியான தமிழ்ப் பிரதேச செயலகம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதேவேளை கல்முனை தனியான தமிழ்ப் பிரதேச செயலகப் பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், கல்முனை தரவைப் பிள்ளையார் வீதி விவகாரம் பெரும் சர்சையாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கமலதாசன் கருத்துத் தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபை நிர்வாகம் தரவைப் பிள்ளையார் வீதியின் பெயரை கடற்கரைப் பள்ளி வீதி என மாற்ற முயல்வது இனநல்லுறவைச் சீர்குலைக்கும். சுய இலாபங்களுக்காக இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வது மீண்டும் ஒரு தடவை கல்முனை பிராந்தியத்தின் அமைதியையும், சகவாழ்வையும் சீரழிக்கும் என்பதை மேயரும் அவருடன் இணைந்து செயற்படுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களைப் பகைத்துக் கொண்டு முஸ்லிம்களும் முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டு தமிழரும் வாழ முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு இந்த முன்னெடுப்பைக் கைவிட வேண்டும் என்றார்.

இது தொடர்பில் கல்முனை மாநகர சபை அமர்வில் மேயர் நிசாம் காரியப்பர் தெளிவு படுத்தினார். வீதிப் பெயர் மாற்றம் தொடர்பில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் பதிலுரை நிகழ்த்திய சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கூறியதாவது,

மனச்சாட்சிக்குப் புறம்பாக நியாயமற்ற முறையில் எந்தவொரு விடயத்தையும் ஒரு போதும் அமுல்படுத்த முனைய மாட்டேன். எந்த ஒரு சமூகத்துக்கும் பிரதேசத்திற்கும் அநீதியிழைக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. இது மக்களின் பிரச்சினை. சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் இப்பிரேரணையை நான் கொண்டு வரவில்லை.

அப்படி நினைத்துப் பேசுவதுதான் இங்கு பிரச்சினையாக மாறுகின்றது. கல்முனையில் தமிழ்ப் பிரதேச செயலகம் வழங்கப்பட வேண்டுமென்பதில் எமது கட்சி தலைமைத்துவம் மாத்திரமல்ல மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் மிகத் தெளிவாக பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாம் ஒருபோதும் முட்டுக்கட்டை போடவில்லை. எல்லைகள் நிர்ணயம் செய்வதிலேயே பிரச்சினை உள்ளன என்றார். வீதிப் பெயர் மாற்றம் தொடர்பில் 21 நாள் கால அவகாசம் பொது மக்களின் மாற்றுக் கருத்துக்களுக்கு வழங்கப்படு மென்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.