ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிப்பு நிறைவு

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிப்பு நிறைவு

விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் இறுதி யறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்க எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் இறுதியறிக்கை தயாராகியுள்ள நிலையில், இறுதிநேர செவ்விதாக்கப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. வார இறுதியில் அறிக்கை முழுமையாகத் தயாராகிவிடும் என அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். திங்கட்கிழமையிலிருந்து எந்தத் தினத்திலும் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய் ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களிடமிருந்து சாட்சி யங்களைப் பதிவுசெய்து தனது இறுதி அறிக்கையைத் தயாரித்துள்ளது. திங்கட்கிழமையின் பின்னர் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க முடியும். எனினும், எந்தத் திகதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதை ஜனாதிபதி செயலகம் அறிவிக்கும். திகதி அறிவிக்கப்பட்டதும் இறுதி அறிக்கையை நாம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளோம் என லக்ஷ்மன் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அதேநேரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை உயர்ந்த தரத்தில் இருக்கும் என எதிர்பார்ப்பதுடன், இதிலுள்ள முன்மொழிவுகளை அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுல்டா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி