ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
நாடெங்கிலும் உணவு சுகாதார சோதனை

நாடெங்கிலும் உணவு சுகாதார சோதனை

  • 28, 29, 30 ஆம் திகதிகளில் நடவடிக்கை

  • ‘A’, ‘B’, ‘C’ என உணவகங்களைத் தரப்படுத்த திட்டம்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல ஹோட் டல்கள், பேக்கரிகள் சிறு தேநீர்க் கடைகள் மற்றும் உணவு விநியோக நிலையங்கள் அனைத்தையும் சோதனையிட தீர்மானித் துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இம் மாதம் 28, 29, 30 ஆம் திகதிகளில் இதனை நடைமுறைப்படுத்துவதுடன், பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் உணவகங்களை ‘ஏ’, ‘பி’, ‘சி’ என தரம் பிரிக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

பாவனையாளர்களுக்கு சிறந்த, சுத்தமானதும் பாதுகாப்பானதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இச் செயற் திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார். இத்திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஜிஸ் மெண்டிசுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இது தொடர்பான சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலிருந்து உணவகங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளையடுத்தே அமைச்சர் இத்தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சு தெரிவித்தது.

மாவட்டங்கள் தோறும் மக்கள் சுகாதார பரிசோதகர்கள் பிரிவு மட்டத்தில் மேற்படி மூன்று தினங்களிலும் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் உணவகங்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என தரம் பிரிப்பதானது, மக்கள் சிறந்த உணவகத்தைத் தேர்ந்தெடுத்து உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே எனவும் அமைச்சு தெரிவித்தது.

அத்துடன் மேற்படி பரிசோதனை நடவடிக்கைகளை கண்காணிப்புச் செய்யுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் சகல மாகாண, மாவட்ட மற்றும் நகர சபைகளின் சுகாதார பணிப்பாளர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பரிசோதனை நடவடிக்கைகளின் போது வீதிகளுக்கருகில் அமைந்துள்ள தேநீர் கடைகள், ஹோட்டல்களுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பரிசோ தனையின் பின் பரிசோதனை நடவடிக்கை யில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் உரிய சுகாதார அதிகாரியிடம் அறிக்கை சமர்ப் பிக்க வேண்டுமெனவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி