ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களத்த நவீனமயப்படுத்த ஜப்பான், கொரியா உதவி

வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களத்த நவீனமயப்படுத்த ஜப்பான், கொரியா உதவி

அனர்த்தங்களை முன்கூட்டியே அறியும் வசதி

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விசேட ஏற்பாடு

2013ம் ஆண்டுக்கு முன்னர் வளிமண்டல ஆய்வு திணைக்களத்தை நவீனப்படுத்தி அதனை தரம் உயர்த்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கொரியாவின் கொய்கா (KOICA) மற்றும் ஜப்பானின் ஜெய்கா (JAICA) நிறுவனங் களின் நிதி உதவியின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

காலநிலை பற்றி சரியான தகவல்களை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் எண் ணக்கருவை நிறைவேற்றுவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நான்காவது பருவப் பெயர்ச்சி மழைக் காலம் பற்றிய கருத்தரங்கு கொழும்பு ஜனாகி ஹோட்டலில் நடைபெற்ற போதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காலநிலை பற்றிய தகவல்களை முன் கூட்டியே அறிவது அவசியம் என்று கூறினார்.

விவசாய நாடான இலங்கையின் விவசாய அபிவிருத்தி காலநிலைக்கு ஏற்ப கிடைக்கும் மழை வீழ்ச்சியிலேயே நம்பியிருக்கிறது. சுனாமியினால் விவசாயத் துறையில் ஏற்பட்ட அழிவைவிட சமீபத் தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் விவசாய செய்கைக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது என்று அமைச்சர் கூறினார்.

சரியான முறையில் காலநிலை மாற் றங்கள் குறித்து தகவல்களை முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பது வளிமண்டல ஆய்வு திணைக்களத்தின் கடமையென்றும், அதன் மூலமே நாடு விவசாயத் துறையிலும் மற்றெல்லாத் துறைகளிலும் சிறப்புற்று விளங்க முடியுமென்று கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட காலநிலை அவதான பொறுப்பதிகாரி டி. ஏ. ஜயசிங்க ஆராச்சி, இலங்கையில் ஒரு வருடத்தில் இரண்டு பருவப் பெயர்ச்சி மழையும் இரண்டு இடைநிலை பருவப்பெயர்ச்சி மழையும் இருப்பதுண்டு எனவும், தற்போது நாடு இரண்டாவது இடைநிலை பருவப்பெயர்ச்சி மழைகால த்தை எதிர்நோக்கியிருக்கிறதென்றும் அது டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தவுடன், வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலம் டிசம்பரில் ஆரம்பமாகுமென்றும் கூறினார்.

இந்த இடைநிலை பருவப்பெயர்ச்சி மழைக் காலத்தில் வடக்கு, கிழக்கில் சராசரியாக 479.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி ஏற்படுகிறது. இலங்கையின் வருடாந்த மழை வீழ்ச்சி 1861மில்லி மீற்றராகும். இதில் 14சதவீத மழை வீழ்ச்சி முதலாவது இடைநிலை மழைக் காலத்திலும், 30சதவீதமான மழைவீழ்ச்சி தென்மேற்கு மழை காலத்திலும், 20 சதவீதமான மழை வீழ்ச்சி இடைநிலை பருவக் காலத்திலும், 26சதவீத மழை வீழ்ச்சி வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி மழைக் காலத்திலும் கிடைக்குமென்று அவர் கூறினார்.

இவ்விதம் மழைக் காலம் ஏற்படுவதற்கு முன்கூட்டியே வளிமண்டலத் திணைக்களம் இது பற்றிய அறிவித்தல்களை மக்களுக்கு விடுத்தால் அரசாங்கத்தினாலும், பொது அமைப்புகளினாலும் ஏற்படக் கூடிய அனர்த்தங்களுக்கு முன்கூட்டியே தங்களை தயார்படுத்திக் கொள்ளக் கூடிய கால அவகாசம் இருக்குமென்று அவர் கூறினார்.

2004ம் ஆண்டில் இலங்கை உட்பட ஆசிய நாடுகளின் பெரும் பகுதிகளில் பேரழிவையும், பெருமளவு உயிர் அழிவையும் ஏற்படுத்திய சுனாமி பற்றி முன்கூட்டியே வளிமண்டல ஆய்வு திணைக்களங்களும், பூமியதிர்வு பற்றிய பதிவுகளை செய்யும் ஆய்வு நிலையங்களும் குறைந்தபட்சம் ஒன்றரை முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்நாடுகளின் மக்களுக்கு அபாய அறிவித்தலை விடுத்திருந்தால் அந்நாடுகளில் கட்டிடங்களுக்கும்,

சொத்துகளுக்கும் அழிவு ஏற்பட்டிருந்தாலும் உயிர் அழிவு மிகவும் குறைவாக நிகழ்ந்தது.

2004ம் ஆண்டு சுனாமியினால் 14 நாடுகளில் பெருமளவு பொருள் அழிவு ஏறற்பட்டதுடன் அந்நாடுகளில் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 40 வருடங்களுக்கு பின்னர் இந்துமகா சமுத்திரத்தில் சுமாத்திரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட மிகப்பெரிய பூமியதிர்ச்சியினால் உருவாகிய சுனாமி பேரழை இலங்கையைத் தாக்கிய போது எங்கள் நாட்டின் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அவர்களை விட மேலும் 25லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர வேண்டிய வேதனைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த பூமியதிர்ச்சியின் மையம் இலங்கையில் இருந்து 1600 கிலோமீற்றர் தொலைவில் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட சுனாமி பேரலை இலங்கைக்குள் 5 கிலோமீற்றர் வரையில் ஊடுருவி பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பேரலை 6 மீற்றருக்கும் உயரமாக கரையோர கிராமங்களை தாக்கி மனிதர்களையும், வாகனங்களையும் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமளவுக்கு சக்திவாய்ந்திருந்தது. தென்னிலங்கையில் 1700 பயணிகள் சென்ற ரயில் வண்டியும் சுனாமியினால் அழிவடைந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி