வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி

அவுஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி;

கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி

விசாகப்பட்டினத்தில் நடந்த அவுஸ்திரேலி யாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்தியா - அவுஸ்திரேலியா இடையே கொச்சியில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பகல் - இரவு மோதலாக விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இரு அணியிலும் தலா 2 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறக்கப்பட்டனர். இந்திய அணியில் ஷிகர் தவான். சவுரப் திவாரி ஆகியோர் தங்களது முதலாவது சர்வதேச போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றனர்.

இதேபோல் அவுஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் முதல்முறையாக சர்வதேச போட்டியில் இடம் பிடித்தனர். அதிரடி மன்னன் டேவிட் வார்னருக்கு அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காதது ஆச்சரியம் அளித்தது.

நாணயச் சுழற்சியில் ஜெயித்த இந்திய அணியின் கெப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதன்படி இந்திய வீரர்கள் முதலில் களத்தடுப்பு செய்ய களம் புகுந்தனர். இந்திய வீரர்கள் புதிய உடையில் ஜொலித்தனர். முன்பு அடர் புளு நிற உடையில் வலம் வந்தனர். தற்போது அது வெளிர் நீலநிற சீருடையாக மாறியிருக்கிறது.

ஷோன் மார்சும், டிம் பெய்னும் அவுஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினார்கள். மார்ஷ் (0), பெய்ன் (9) இருவரும் ஆஷிஷ் நெஹ்ராவின் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து அணியை கப்டன் மைக்கேல் கிளார்க்கும் மைக் ஹஸ்ஸியும் மீட்டனர். இருப்பினும் அணியின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. இதனால் ஆட்டத்தின் போக்கு ஓரளவு இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 26 வது ஓவரில் தான் அவுஸ்திரேலியா 100 ஓட்டங்களை கடந்தது.

நிதானமாக ஆடிய இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 160 ஓட்டங்களாக உயர்ந்த போது பிரிந்தது. மைக் ஹஸ்ஸி 69 ஓட்டங்களில் (78 பந்து, 7 பவுண்டரி) தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதை தொடர்ந்து துணை கப்டன் கமரூன் ஒயிட் ஆட வந்தார். மறுமுனையில் கப்டன் பொறுப்புடன் ஆடிய கிளார்க் சதத்தை நெருங்கினார்.

45 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 205 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதாவது அவர்களின் ஓட்ட விகிதம் 4.55 ஆக இருந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தின் ஒட்டுமொத்த போக்கையும் கமரூன் ஓயிட் தலைகீழாக மாற்றி காட்டினார். அவரது விசுவரூபத்தில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் ஜெட்வேகத்தில் உயர்ந்தது. தொடக்கத்தில் மிரட்டிய நெஹ்ராவின் பந்து வீச்சையும் சிதறடித்தார். இதற்கிடையே மைக்கேல் கிளார்க் தனது 5வது ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவுக்கு எதிராக அவரது 2வது சதமாகும்.

இறுதி 5 ஓவர்களில் மட்டும் மொத்தம் 7 சிக்சர்கள் பறந்தன. இந்த சரவெடியால் அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட ஏறியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டு இழப்புக்கு 289 ஓட்டங்கள் குவித்தது. கிளார்க் 111 ஓட்டங்களுடனும் (138 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தனது 11வது அரைசதத்தை கடந்த கமரூன் ஒயிட் 89 ஓட்டங்களுடனும் (49 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் அவுஸ்திரேலிய வீரர்கள் 84 ஓட்டங்கள் திரட்டினர்.

அத்துடன் கமரூன் ஒயிட் எல்லைக்கோட்டுக்கு வெளியே அடித்த ஒரு பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்த ஒரு முதியவரை பதம் பார்த்து விட்டது. பந்து தாக்கியதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேபோல் கிளார்க் 46 வது ஓவரில் நேராக ஒரு பவுண்டரி விளாசிய போது நடுவர் பில்லி பவ்டன் குனிந்து தப்பி விட்டார். ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்கு சிறிது நேரம் பிடித்தது. அந்த அளவுக்கு அந்த பந்து அகர வேகத்தில் பறந்தது.

இதைத் தொடர்ந்து 290 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஷிகர் தவானும், முரளி விஜயும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். 2 வது பந்திலேயே தவான் (0) போல்ட் ஆனார். அறிமுக போட்டியில் டக் அவுட் ஆன 17 வது இந்தியர் தவான் ஆவார். டெண்டுல்கர், டோனி, ரெய்னா உள்ளிட்டோரும் தங்களது அறிமுக போட்டியில் டக் அவுட் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது நேரத்தில் விஜயும் (15) வெளியேறினார். இதை தொடர்ந்து விராட் கோக்லியும், யுவராஜ் சிங்கும் கைகோர்த்து அணியை சிக்கலான நிலையில் இருந்து மீட்டதுடன், நல்ல நிலைக்கும் உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 172 ஓட்டங்களை எட்டிய போது யுவராஜ் சிங் (58) போல்ட் ஆனார்.

அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா அடித்து விளையாடி துரிதமாக ஓட்டங்களை சேகரித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். மறுமுனையில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட விராட் கோஹ்லி, பை-ரன்னர் உதவியுடன் தொடர்ந்து அசத்தினார். தனது 3வது சதத்தையும் பூர்த்தி செய்தார். சதத்திற்கு பிறகு சிறிது நேரம் அதிரடி காட்டிய கோஹ்லி 118 களில் பிடி ஆனார்.

இதன் பிறகு வந்த கப்டன் டோனி (0) வந்த வேகத்தில் நடையை கட்டியதால், இந்தியாவுக்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் ரெய்னா களத்தில் நின்று மிரட்டவே, இந்திய அணி வெற்றிக்கனியை 7 பந்துகள் மீதம் வைத்து பறித்தது. இந்திய அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரெய்னா 71 ஓட்டங்களுடனும் சவுரப் திவாரி 12 கடைசி வரை களத்தில் இருந்தனர்.

விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா தொடர்ந்து பெற்ற 3 வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். இதற்கு முன்பாக இங்கு நடந்து ள்ள இரு ஆட்டத்திலும் (2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் எதிராக 2007ஆம் ஆண்டு இல ங்கை எதிராக) இந்திய அணி வெற்றி பெற்றி ருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
»