வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

தியாகத்தை நினைவ+ட்டும் புனித ஹஜ் கடமை

தியாகத்தை நினைவ+ட்டும் புனித ஹஜ் கடமை

சக்தி பெற்றிருக்கும் முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் (செய்தல்) கடமையாகும். இது (ஹஜ்) இஸ்லாமியக் கடமைகளுள் ஒன்றாகும். இது குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்

அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து, மனிதர்கள் மீது (அதனளவில் செல்ல சக்தி பெற்றவர்கள் மீது) கடமையாக உள்ளது.

யார் இதனை நிராகரிக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டு தேவையற்றவனாக உள்ளான். (அல்குர்ஆன் : 3 : 97)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

இஸ்லாம் ஐந்து விஷயங்கள் மீது எழுப்பப்பட்டுள்ளது. (அவை)

01. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயமாக முஹ்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் ஆவார்கள் என்று சாட்சி பகருவது.

02. (ஐங்காலத்) தொழுகையை நிலை நாட்டுதல்

03. ஸகாத் கொடுத்தல்.

04. ரமழானில் நோன்பு நோற்றல்

05. கண்ணியமிக்க அல்லாஹ்வின் வீட்டிற்கு (கஃபாவிற்கு) சென்றுவர சக்தி பெற்றவர் ஹஜ் செய்தல் என்பனவாகும். (நூற்கள் : புகாரி, முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சொற்பொழிவாற்றினார்கள். அதில் கூறினார்கள்.

அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கி உள்ளான். ஆகவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள். அப்பொழுது ஒரு மனிதர் நாங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் ஹஜ் செய்யவேண்டுமா? யாருசூலல்லாஹ் என்று கேட்டார். அதற்கு பதில் கூறாமல் நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர் அக்கேள்வியை மூன்று முறை கேட்டார்.

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ‘ஆம்’ என்று கூறிவிட்டால் அது உங்கள் மீது ஒவ்வொரு ஆண்டும் கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். பின்னர் கூறினார்கள். நான் எதை கூறுகிறேனோ அதனை எடுத்துக் கொண்டு என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் அழிந்ததெல்லாம் அவர்களின் அதிகமான கேள்விகளின் காரணமாகவும் அவர்களின் நபிமார்க ளுக்கு மாறு செய்ததின் காரணமாகவும் தான்.

ஆகவே நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு ஏவினால் உங்களால் இயன்ற வரை அதனை செய்யுங்கள். நான் எந்த விஷயத்தை உங்களுக்கு தடுக்கிறேனோ அதனை நீங்கள் விட்டு விடுங்கள்.’ (நூல் : முஸ்லிம்)

அல்லாஹ் கூறுகிறான் :

ஹஜ்ஜுக்குரிய காலம் அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே அவற்றில் எவரேனும் ஹஜ்ஜை தம்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு மற்றும் பாவங்கள் ஈடுபடல், சச்சரவு செய்தல் ஆகியவை கூடாது’

(அல்குர் ஆன் : 2 : 197)

அல்லாஹ் கூறுகிறான் :

‘நபியே! தேய்ந்து வளரும் பிறையைப் பற்றி உம்மிடம் கேக்கின்றார்கள். நீர் கூறும் அவை மக்களுக்கு காலம் காட்டுபவையாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் உள்ளன’ (அல்குர்ஆன் : 2 : 189)

மேலும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘அமல்களில் எது மிகச் சிறந்தது என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வையும் அவனது திருத்தூதுவரையும் கொண்டு ஈமான் கொள்வதாகும் என்று கூறினார்கள். பின்னர் எந்த அமல் சிறந்தது என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’ என்று கூறினார்கள். பின்னர் எந்த அமல் சிறந்தது என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுன் மப்ரூம் என்று கூறினார்கள்.

(நூற்கள் : புகாரி, முஸ்லிம்)

விளக்கம் : ஹஜ்ஜுன் மப்ரூர் என்றால் பாவங்கள் கலக்கப்படாத பரிசுத்தமான ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் ஆகும்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்கள் கூற செவி மடுத்துள்ளேன் ‘யார் இல்லற உறவு கொள்ளாது பாவங்கள் செய்யாது (பரிசுத்தமான) ஹஜ் செய்கிறாரோ அவர் அவரது தாய் அவரை பெற்றெடுத்த நாளில் உள்ளவரைப் போன்று (அன்று பிறந்த பாலகனைப் போன்று ஊருக்குத்) திரும்புகிறார்’ (நூற்கள் : புகாரி, முஸ்லிம்)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘ஒரு உம்ரா மற்றொரு உம்ராவுக்கு இடையில் உள்ள பாவங்களை அழித்துவிடும். மப்ரூர் ஆன ஹஜ்ஜின் நற்கூலி (அதற்கு) சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை.

(நூற்கள் : புகாரி, முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ஜிஹாதை சிறந்த அமலாக எண்ணுகிறோம். ஆகவே நாங்களும் ஜிஹாதில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (உங்களுக்கு) மிகமேலான ஜிஹாது. ஹஜ்ஜுன் மப்ரூர் ஆகும். எனக் கூறினார்கள்.

(நூல் : புகாரி)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் ஹஜ் செய்வதற்கு நாடுகிறாரோ அதனை அவசரமாக நிறைவேற்றவும்.

(நூற்கள் : அபூ தாவூத், தாரமீ)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் ‘அல்லாஹ்வின் படையினர் மூவர் : 1. (அல்லாஹ்வின் பாதையில்) அறப்போர் புரிகிறவர். 2. ஹஜ் செய்பவர். 3. உம்ரா செய்பவர்.’

(நூற்கள் : நஸாஈ, பைஹகீ)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஹஜ், உம்ரா செய்பவர்கள் அல்லாஹ்வின் படையினர் ஆவர். அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அவர்களுக்கு அவன் பதிலளிப்பான்.

அவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அவர்களுக்கு அவன் மன்னிப்பு வழங்குவான்

(நூல் : இப்னு மாஜா)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறுனார்கள் ‘யார் ஹஜ் செய்வதற்கு அல்லது உம்ரா செய்வதற்கு அல்லது (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்வதற்கு புறப்பட்டு. (பிறகு) அப்பாதையிலேயே மரணித்து விடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் போர் செய்த கூலியை இன்னும் ஹஜ், உம்ரா செய்த கூலியை எழுதுகிறான்.’ (நூல் : பைஹகீ)

இங்கு குறித்த காரியத்தை செய்வதற்கு புறப்பட்டு அவ்வழியிலே அவர் மரணித்தால் அக்காரியத்தை செய்த கூலியை அல்லாஹ் வழங்குவான்)

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் முறையாக செய்யுங்கள். ஏனென்றால் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு இவைகளில் பிடித்திருக்கக் கூடிய துருவை (கரலை, அழுக்கை) நெருப்பு எப்படி இல்லாமலாக்கிவிடுமோ (போக்கி விடுமோ) அதுபோல ஹஜ்ஜும் உம்ராவும் பாவங்களையும், வறுமையை (பக்ரை) யும் போக்கிவிடும் எனவே மப்ரூரான ஹஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை.

(நூல்கள் : திர்மிதீ, நஸாஈ)

எனவே நாம் செய்துமுடித்த ஹஜ் மற்றும் செய்யவிருக்கும் ஹஜ் இதனை ஹஜ்ஜுன் மப்ரூர் ஆக அல்லாஹ் ஒப்புக் கொள்வானாக. அதற்குரிய கூலியான சுவனத்தையும் தந்தருள்வானாக ஆமீன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »