வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

சுய அறிவை இழக்கச் செய்யும் போதை

சுய அறிவை இழக்கச் செய்யும் போதை

மனிதப் பிறவியானது கிடைப்பதற் கரிய மேலான பிறவி. இப்பிறவிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய பேறு பகுத்தறிவாகும். இவ்வறிவு இழக்கப்படு மானால் மனிதர்கள் இழி நிலையடைந்து விலங்குகளாகின்றனர் (மாக்கள்). இந்த உன்னத அறிவை மயக்கி மிருக நிலைக்குத் தள்ளுவது மதுவாகும்.

அதாவது சுய அறிவு கொண்ட மனிதனுக்கு போதை ஊட்டி அவனது சுய சிந்தையை இழக்கச் செய்வதே மது என்னும் போதைப் பொருள் ஆகும். எனவே மனிதனுக்குச் சிறப்புத் தருகின்ற பகுத்தறிவை மயக்கி மாக்களாக்குகின்ற எப் பொருளாயினும் அது தேவாமிர்தம் ஆயினும் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். அதனை ஒழியச் செய்வது நம் எல்லோரின் கடமையாகும். எனவே மது என்னும் அரக்கனை ஒழிக்க இன்றைய தினத்தில் உறுதிகொள்வோம்.

மதுவானது சமூகத்தில் நிலை பெறக் காரணமாக இருக்கும் காரணிகள் மிக விசித்திரமானவை. மது அருந்துவோர் சொல்லும் பொதுவான கருத்து தமது துன்ப துயரங்களை போக்கவும் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை தாங்கவும் மனம் அமைதியிழந்து தவிக்கும்போது அவற்றை மறந்து சிறு பொழுதாயினும் மனம் சாந்தியடைய மருந்தாக ‘மது’ அமைகிறது என்பதாகும்.

சிலர் கஷ்டப்பட்டு உழைப்பதனால் உடல் வலிகளைப் போக்கி சுகம் பெற உதவுவதாக கூறுகின்றார்கள்.

இன்னும் சிலர் மது அருந்துவது சமூக அந்தஸ்தை தமக்குத் தருவதாகவும் மது அருந்தாதவர் கையாலாகாதவர், சமூக பொருத்தப்பாடற்றவர் என சமூகம் தம்மைக் கருதும் என்று நியாயம் கூறுகின்றனர். இவ்வாறு பல்வேறு காரணங்களினால் சமூகத்தில் ‘மது’ என்னும் அரக்கன் ஊடுருவி மனிதனை வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு அடிமைகளாக மாற்றிவிட்டான்.

இன்றைய சமூகத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வேறுபாடின்றி மது அருந்துவதனால் மது விற்பனை செய்தல் ஒரு வருமான மீட்கும் தொழிலாகவே இடம் பெற்று விட்டது.

இவற்றுக்கு முக்கிய காரணமாக அமைவது மதுவின் கொடுமை பற்றிய உண்மையான விழிப்புணர்வின்மையும் வெளிநாட்டுக் கலாசாரத் தாக்கமும் ஆகும்.

மதுவை ஒருவர் அருந்தும்போது நாளடைவில் அது பழக்கமாகி பொருளாதார கஷ்டங்களை ஏற்படுத்தும் அது அவரது குடும்பத்தையும் வெகுவாகப் பாதிக்கும் வீட்டில் சண்டை சச்சரவுகள் பசி, பட்டினி ஏற்படுவதுடன் பிள்ளைகளினதும் கல்வியில் கூட தாக்கத்தை ஏற்படும். பொதுவாக ஏழை மக்கள் தாம் வைத்திருக்கும் சிறு தொகைப் பணத்தையும் குடிபோதையிலோ, போதைப் பொருளிலோ செலவழிக்கும்போது அவர்களது குடும்பத்தின் நிலை மேலும் கஷ்டமானதாகின்றது.

இது குடும்பத்தை மட்டுமல்ல முழு சமூகத்தையே பாதிக்கின்றது. முழு சமூகத்தின் கண்ணியம், கட்டுப்பாடு பாதிக்கப்படுகின்றன. மதுவானது சுய சிந்தனையை சிதைப்பதனால் கொலை களவு, கற்பழிப்பு போன்ற சட்டவிரோத செயல்கள் சமூகத்தில் நிலைகொண்டு முழு சமூகமுமே குட்டிச் சுவராகின்றது. மதுப்பாவனை தேவைதானா?


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»