வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

சின்ன சின்ன தகவல்கள்

இருபதாம் நூற்றாண்டின் முன்பாதி வரை இமயமலையின் ‘காங்ரா பள்ளத்தாக்கு’ப் பகுதியில் ‘கழுத்துக் கழலை’ பாதிப்பு அதிகமாக இருந்தது. கழுத்து ‘சங்கு’க்கும், மேற்பகுதி நெஞ்செலும்புக்கும் இடையில் உள்ள தைரோய்ட் சுரப்பி வீங்கிப் பெரிதாகும் நிலையே ‘கழுத்துக் கழலை’ எனப்படுகிறது.

1950ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், காங்ரா பள்ளத்தாக்கில் ‘கழுத்துக் கழலை’ பாதிப்பு பரவலாகக் காணப்படுவதற்குக் காரணம் என்ன என்று மருத்துவர் ரங்கசாமி மற்றும் அவரது குழுவினர் தீவிர ஆய்வை மேற்கொண்டனர். ‘அயோடின்’ பற்றாக்குறைதான் அதற்கு ஒரே காரணம் என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.

‘அயோடின்’ சேர்ந்த உப்பு, காங்ரா பள்ளத்தாக்கு மக்களுக்குக் கிடைக்க வழி செய்யப்பட்டது. ஐந்தாண்டுகளில், பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் ‘கழுத்துக் கழலை’ பாதிப்பு மறைந்தது. பெரியவர்களிடமும் அந்தப் பாதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. 1970ம் ஆண்டு வாக்கில், காங்ரா பள்ளத்தாக்கிலிருந்து ‘கழுத்துக் கழலை’ பாதிப்பு முற்றிலுமாக மறைந்துவிட்டது.

நிலக்கரி எரிவது ஏன்?

நிலக்கரி ஏன் எரிகிறது என்பதற்குக் காரணம் அதில் ‘கார்பன்’ உள்ளது. நிலக்கரி எரியும்போது அது வெப்ப வடிவில் சக்தியை வெளிப்படுத்துகிறது. அந்த வெப்ப சக்தியை மின்சாரம் தயாரிக்க உபயோகப்படுத்த முடியும். மின்சார உற்பத்தி நிலையத்தில், நிலக்கரியை எரிப்பதன் மூலம் நீராவி உண்டாக்கப்படுகிறது.

அந்த நீராவி, சுழல் இயந்திரத்தின் (டர்பைன்கள்) பெரிய இயந்திர உருளைகளை சுழலச் செய்கிறது. அவை மின்சார இயந்திரங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. நிலக்கரியைப் பயன்படுத்தியே உலகில் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

‘ஆந்த்ராசைட் நிலக்கரி’ என்பது நிலக்கரிகளிலேயே மிகவும் கடினமானதாகும். இதில் 90 சதவீதம் ‘கார்பன்’ இருக்கும். நிலக்கரிகளிலேயே மிகவும் தரமான இது. குறைவான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும், ஆனால் பூமிக்கடியில் மிகுந்த ஆழத்தில்தான் இது கிடைக்கும் என்பதால் விலை அதிகமாக இருக்கும்.

மின்னுற்பத்தி நிலையங்களும், தொழிற்சாலைகளும் பொதுவாக ‘பிட்டுமினஸ் நிலக்கரி’ பயன்படுத்துகின்றன. அவற்றில் 70 முதல் 85 சதவீதம் கார்பன் உள்ளது.

நிறத்தின் காரணமாகப் ‘பழுப்பு நிலக்கரி’ என்று அழைக்கப்படும் ‘லிக்னைட்’, 60 சதவீதத்திற்கும் குறைவான கார்பனை கொண்டுள்ளது. இது, குறைவான வெப்பத்திறன் உடையது. எனவே தேவையான வெப்பத்தைப் பெற அதிகமான பழுப்பு நிலக்கரியை எரிக்க வேண்டி இருக்கும்.

சைக்கிள் திருடர்கள்!

வியன்னாவில், பொதுமக்களுக்கு உதவும் வகையில் இலவச வாடகை சைக்கிள் திட்டத்தைக் கொண்டு வந்தனர். ஆனால் அதிகாரிகள் நினைத்ததற்கு எதிர்மாறாக ஆகிவிட்டது. ஒரு வாரத்துக்குள்ளாகவே 750 சைக்கிள்கள் திருடப்பட்டுவிட்டன. ஒவ்வொரு சைக்கிளின் மதிப்பும் 32 ஆயிரம் ரூபாய் வியன்னாவின் நெருக்கடியான போக்குவரத்துக்குத் தீர்வாக 500 சைக்கிள்களை நகர நிர்வாகம் வாங்கியது.

தேவைப்படுபவர்கள் சுமார் 150 ரூபாய் கொடுத்து சைக்கிளை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். சைக்கிளைத் திருப்பிக்கொடுக்கும்போது அந்த ரூபாய் திருப்பி அளிக்கப்படும். ஆனால் பலர் சைக்கிளைத் திருப்பிக் கொடுக்கவே இல்லை. கடைசியில் நகர நிர்வாகம் பொலிஸில் புகார் கொடுத்து சைக்கிள் திருடர்களை பிடித்தது.

பானையில் பிறக்கும் இசை

பானைகள், தண்ணீர் பிடித்து வைப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் ஏற்றவை, வினோதமான உருவம் கொண்ட சில பானைகள், சிலவகைப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கவும் உதவுகின்றன. ஆனால் பானையிலிருந்து இசை பிறக்குமா? ஏன் பிறக்காது? ‘பாண்டவடயா’ எனப்படும் பானை, வட இந்தியாவில் நாட்டுப்புற இசையில் இசைக்கருவியாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் இந்த இசைக்கருவி ‘நூட்’, ‘ரவுப்’ என்று அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மக்கள் இதை ‘மட்கி’ என்கிறார்கள். இவையெல்லாம் களிமண்ணால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ‘காக்ரி’ எனப்படும் பானை மட்டும் தாமிரம் அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்படுகிறது.

ஆனால் ‘பானைகள்’ கச்சேரி வரை வந்திருப்பது தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில்தான். இங்கு இப்பானை ‘கடம்’ என்றழைக்கப்படுகிறது. அதற்கு சமஸ்கிருத மொழியில் ‘மண் பானை’ என்று அர்த்தம். தட்டி ஒலி எழுப்பப்படும் இந்தக் கருவி மிருதங்கத்துக்கு ஒரு நல்ல பக்கத் துணையாகிறது. கர்நாடக இசையில் இது ஒரு மிகவும் முக்கியமான இசைக்கருவி ஆகும்.

வழக்கமாக, கடம் இசைக் கலைஞர் கடத்தின் வாய்ப் பகுதியை தனது மேலாடை அணியாத வயிற்றுப் பகுதியில் வைத்து வாசிக்கிறார். அதன் மூலம், ஆழமான, செறிந்த ஒலியை உருவாக்குகிறார். வாய்ப்பகுதியை மேற்புறமாக வைத்து கடம் வாசிப்பதும் உண்டு. கடம் கலைஞர் அவ்வப்போது ஒரு கையால் வாய்ப்பகுதியை மூடித்திறந்து, ஒலி வித்தியாசத்தை ஏற்படுத்துவார். ஒரு கையால் கடத்தின் வாயை மூடும் அதே நேரம், அடுத்த கையால் தட்டி இசையை உருவாக்குவார் அவர்.

கடம் வாசிப்பதில் விரல்களுக்கு வேலை அதிகம். ஒருவரால் தொடர்ச்சியாக கடம் வாசிக்க முடியாது. அது விரல்களுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்தும், அதனால்தானோ என்னவோ, மற்ற தட்டும் இசைக் கருவிகள் போல கடம் பிரபலமாகவில்லை.

ஆனாலும் கடம் ரசிகர்களும், ‘விக்கு’ வினாயகம் போன்ற புகழ்பெற்ற கடம் இசைக் கலைஞர்களும் நிறையப் பேர் இருக்கின்றனர். வினாயகம் போன்ற தேர்ந்த கடம் இசைக் கலைஞர்கள் ஒரு மண்பானையில் இருந்து கூட உயிரை ஊடுருவும் இசையைப் பிறக்க வைக்க முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •