புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 

சில மனிதர்களும் சில நியாயங்களும் - 09

சில மனிதர்களும் சில நியாயங்களும் - 09

ஆதித்யாவை எடுத்துப் பேசிவிட்டு போனை வைத்த ஆரணி மூச்சு வாங்கினாள். அவளைப் பொறுத்தவரை அம்மாவைப் பேசியது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

ஆரணியின் மனம் குமுறியது. அது பேசத் தொடங்கியது.

அப்பாவின் இன்றைய நிலைமைக்கு அம்மாதான் காரணம் என்று சொல்வதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இன்றைக்கு நாங்கள் உயிரோடும் நல்ல நிலையிலும் இருப்பதற்கு அம்மாதான் காரணம். வேறு யாருமே இல்லை. அப்பா இருப்பதற்கு அவருடைய வரட்டுக் கெளரவம் தான் காரணம். இன்றைக்கு அம்மா இல்லையென்றால் அக்கா டாக்டர் ஆகி இருக்க முடியாது. ஏன் உயிரோடு கூட இருந்திருக்க முடியாது என்பதே ஆரணியின் வாதமாக இருக்கிறது.

நாட்டிலே எவ்வளவு பிரச்சினை. திடீர் திடீரென்று கண்ணிவெடிகள் வெடிக்கும் பல இராணுவத்தினர் மாள்வார்கள். அதைத் தொடர்ந்து எதுவுமே அறியாத அப்பாவி மக்களை இராணுவத்தினர் கொல்வார்கள். இறக்கின்ற மக்களுக்கு தாங்கள் ஏன் இறக்கின்றோம் என்பதே தெரியாமல் இருக்கும். கண்ணிவெடி வைத்தவர்களைக் காணமுடியாது. இதுதான் அன்றைய நாடு. நாங்களும் இந்த நெருக்கடிக்குள்தான் வாழ்ந்தோம்.

நாங்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு எத்தனை நாள் இருந்திருப்போம். அப்பாவின் அரசியலும் அப்படித்தான். வங்குரோத்து அரசியல். இந்த அரசியல் வங்குரோத்துத்தனத்துக்காக கூழைக் கும்பிடு போடுபவர்களைக் கருத்தில் கொண்டு அப்பாவிற்கு பெரிய மதிப்பு உண்டு என்று ஆதித்யா கூறுவது எந்த வகையில் சரி?

எப்படி ஏற்றுக் கொள்வது?

இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் அம்மா துணிந்து எங்களுக்காக ஒரு முடிவெடுத்தா. தான் தனியே போக வேண்டுவென்று அம்மா சுயநலமாக முடிவெடுக்கவில்லை. எல்லோரும் நாட்டைவிட்டுப் போவோம் என்றே முடிவெடுத்தா. எல்லோரும் போராடுவோம் என்று நாங்கள் முடிவெடுக்கவில்லை. நாங்கள் அறிந்து கொண்டதெல்லாம் ஆமியின் சாவும் பொதுமக்களின் சாவும்தான். அதனால் அம்மா எங்களைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடு செல்ல வேண்டுமென்று முடிவெடுத்தா? இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு அப்பாவும் சம்மதித்தார். அப்பாவின் சகோதரர் வீட்டுக்குப் போய் நாங்கள் சீரழிந்தவிதத்தை பட்டபாட்டை எப்படிச் சொல்வது? நல்லதையே நினைத்து நல்லதையே செய்த அம்மாவை ஏன் எல்லாரும் குற்றவாளியாகப் பார்க்கிறார்கள்? எனக்கு இந்தத் தர்க்கம் புரியவே யில்லை.

அங்கே ஏற்பட்ட சீரழிவின்பின் லண்டனுக்கு வந்தோம். அப்பாவின் சகோதரரின் மனைவியால் அந்தக் கொஞ்ச நாட்கள் நாங்கள் பட்ட துன்பம் பயங்கரமானது. ஒரு கட்டத்தில் திரும்பி நாட்டுக்கே போனால் என்ன என்ற அளவுக்கு வேதனைப்பட்டோம். ஏன் ஆதித்யாவாகட்டும் அப்பாவாகட்டும் அந்த மன நிலையில்தானே இருந்தோம். மரணக் குழியிலிருந்து தப்பி வந்து மீண்டும் மரணக் குழிக்கே செல்லுமளவுக்கு நாம் தள்ளப்பட்டோம் என்பதை ஏன் ஒருவரும் நினைக்க மறுக்கிறார்கள்.

அப்பாவுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அவர் இதற்குப் பல காரணங்கள் சொன்னாலும் எல்லாம் அவரின் வரட்டுக் கெளரவத்தைக் காப்பாற்றும் முயற்சிகளாகவே இருந்தன. இதற்கு ஏன் அம்மாவைக் குற்றஞ் சொல்லவேணும்?

அம்மா எப்படி அவரோடு கூடப் போக முடியும்?

அம்மா வெளிநாட்டுக்கு வந்தது தான் உல்லாசமாக வாழ்வதற்காக இல்லையே!

எங்கள் இருவரையும் காப்பாற்றி படிப்பிக்கவே வந்தார்கள். ஒரு தாயின் மனத்துடிப்பை எவ்வளவு கீழ்த்தரமாக எண்ணுகிறார்கள். அம்மாவுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும். எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு எங்களுக்காக தன் விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றையும் தியாகம் செய்தாளே அவளா குற்றவாளி. ஆதித்யாவுக்கு ஏன் இவை எல்லாம் விளங்கவில்லை. காலம்தான் இதற்கான பதிலைக் கொடுக்கவேணும். ஆரணியின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.