புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
பலதும் பத்தும்

அழியும் நிலையில் உள்ள விலங்குகள்

ஒளி வெள்ளத்தில் மிதந்த அதிசயம்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பிரபல எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களை காப்பாற்றும் நோக்கத்தில் நேற்றிரவு வர்ணஜால ஒளி வெள்ளத்தில் மிதந்தது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 102 மாடிகளைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உள்ளது. உச்சியில் உள்ள கூம்பு முனையுடன் சேர்த்து 443 மீற்றர் உயரமுள்ள இந்த கட்டிடத்தின் முன்னால் கடந்த வார இரவு ஆயிரக்கணக்கான மக்கள் வானத்தை அன்னார்ந்து பார்த்தபடி நின்றிருந்தனர்.

திடீரென, அந்த கட்டிடத்தில் எரிந்து கொண்டிருந்த அத்தனை விலங்குகளும் அணைந்து அப்பகுதியில் நிசப்தம் நிலவியது. ஒரு மெழுகுவர்த்தி என்ற தலைப்பில் பிரபல இசையமைப்பாளர்கள் ஜே. ரால்ப் மற்றும் சியா ஆகியோர் வனவிலங்குகளை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து உருவாக்கிய பாடலின் பின்னணியில் அருகாமையில் உள்ள பல கட்டிடங்களில் இருந்து சுமார் 40 புரொஜக்டர்கள் எம்பயர் ஸ்டேட் கட்டித்தின் மீது அடுத்தடுத்து ஒளி வெள்ளத்தை பாய்ச்சின.

அழிவின் உச்சக்கட்ட விளிம்பு நிலையில் உள்ள பனிச் சிறுத்தை, ஆசிய யானைகள், ஆகியவற்றின் உருவங்கள் உயிரோட்டமாக உலா வந்தன. வாத்து உள்ளிட்ட பறவையினங்கள். பூச்சிகள், கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட அத்தனை அழிவு நிலை யில்ல உள்ள உயிரினங்களும் சுமார் 3 மணி நேரத்துக்கு எம்பயர் ஸ்டேட் கட்டித்தின் மீது வண்ணமயமான ஒளிக்காட்சியாக பிரதிபலிக்கப்பட்டன.

இதை சிலிர்ப்புடன் கண்டு ரசித்த மக்கள் உற்சாக மிகுதியால் கூக்குரல் எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கணிதத்தை புரிந்துகொள்ளும் நாய்க்குட்டி

இங்கிலாந்தில் ஒரு செல்ல நாய்க்குட்டி பிறந்து சில மாதங்களிலேயே கிண்டல் செய்யும் டங் அவுட் ஸ்மைலி போல தானாகவே அவ்வப்போது செய்துவந்தது. இதை கவனித்த அதன் உரிமையாளர் கட்டளையிட்டால் அவ்வாறு செய்யும்படி அதனை பழக்கினார். கணிதத்தை புரிந்துகொள்ளும் இந்த ஷிஹ் ட்சூ வகை நாய்க்குட்டி ஒரு நடக்கத்தெரிந்த குழந்தையை விட இயற்கையிலே புத்திசாலியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் புத்திசாலித்தனத்தை உணர்ந்த உரிமையாளர் தொலைக்காட்சியில் அது தோன்றவும் வழி செய்துள்ளார்.

வெறும் இரண்டு வயதே ஆகும் இந்த நாய்க்குட்டி 60 வித கட்டளைப்படி நடக்கவல்லது. ஷிஹ் ட்சூவுக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய வைக்க மாட்டேன் என உரிமையாளர் தெரிவித்தார். இந்தியாவில் ஷிஹ் ட்சூக்கள் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை விற்கப் படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியும் திருமணம்

உலகிலேயே முதன் முறையாக இரண்டு ரோபோக்களுக்கு திருமணம் நடந்த நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது.

இந்த ரோபோக்களை மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண் ரோபோவுக்கு புரோயிஸ் என்றும், பெண் ரோபோவுக்கு யுகிரின் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆண் ரோபோ அளவில் பெரியதாக எந்திர மனித உருவிலும், பெண் ரோபோ ஜப்பான் பொம்மை வடிவத்தில் வடிமைக்கப்பட்டிருந்தது. இந்த பெண் ரோபோவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்ததும் இரு ரோபோக்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டுள்ளதாகவும் இத்திருமணம் ஜப்பானிய முறைப்படி நடைபெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக எடையுள்ள யானை தந்தங்களை கடத்தி வந்த கும்பல்

சுவிட்சர்லாந்து நாட்டிற்குள் சட்ட விரோதமாக கடத்தி வந்த அதிக எடையுள்ள யானை தந்தங்களை சூரிச் விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூரிச் விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த யூலை மாதம் 6ம் திகதி சீனாவிலிருந்து வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில் சுமார் 262 கிலோ எடையுள்ள யானை தங்தங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யானை தந்தங்களை சிறிதாக வெட்டி அவற்றை 8 சூட்கேஸ் பெட்டிகளில் மறைத்து வைதது கடத்தி வந்துள்ளனர். இவற்றின் கள்ள சந்தையின் மதிப்பு சுமார் 4 இலட்சம் பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 40 முதல் 50 யானைகளிலிருந்து இந்த தந்தங்களை கடத்தல்காரர்கள் வெட்டி எடுத்துள்ளனர்.

சூரிச் விமான நிலைய வரலாற்றில் அதிக எடையுள்ள யானை தந்தங்களை கைப்பற்றியது இதுவே முதன்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனக்குத் தானே ஆபரே'ன் செய்த டாக்டர்

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர் லியோனிட் ரோகோசோவ்.

29.04.1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார்.

தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை.

ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் அங்கிருந்து ஆயிரத்து 600 கிலோ மீற்றர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவநிலையோ... விமான பயணத்துக்கு இடம் தரவில்லை.

அன்று மாலை வயிற்று வலி மேலும் கடுமையானது. அப்பென்டிஸைட்டிசிஸ் எனப்படும் குடல் வால் நோய்தான், தனது தீராத வயிற்று வலிக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

மறுநாள் இரவு வரை வயிற்று வலி குறையாமல் போகவே, 30.04.1961 அன்றிரவு 10 மணியளவில் ஒரு ஓட்டுனர் மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் ஆகியோர் கத்தி, மருந்து ஆகியவற்றை எடுத்து தர, தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீற்றர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீற்றர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெளியே எடுத்தார்.

சுமார் 02 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனுக்கு பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ் 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறி எப்போதும் போல் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

1962ம்ஆண்டு லெனின்கிராட் நகருக்கு திரும்பிய அவர், 1966ம் ஆண்டு புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து பி.எச்.டி பட்டம் பெற்றார். பின்னர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி 1986 முதல் 2000ம் ஆண்டு வரை செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.

நுரையிரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 21-09-2000 அன்று தனது 66வது வயதில் லியோனிட் ரோகோசோவ் மரணமடைந்தார்.

உலக மருத்துவ வரலாற்றில் தளக்குத் தானே ஒருவர் ஆபரேஷன் செய்துக் கொண்டது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமானதை மறந்த பெண்

2வது தடவையாக கணவரையே
திருமணம் செய்தார்

கார் விபத்தொன்றில் நினைவாற்றல் பாதிக்கப்பட்டு தனக்குத் திருமணமாகியுள்ளதை மறந்த பெண்ணொருவர், தனது கணவரை மீண்டும் திருமணம் செய்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

இந்த திருமண வைபவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கடந்த திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. வேர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ஸடம்பர் (20 வயது) என்ற மேற்படி பெண் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தென்னஸி மாநிலத்திலுள்ள பிரிஸ்டல் நகரில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்தார்.

அவருக்கும் அவரது காதலர் ஜெரமிக்கு (21 வயது) திருமணமாகி 19 நாட்களில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. அந்த விபத்தால் நினைவாற்றல் பாதிக்கப்பட்ட ஜஸ்டிஸ் தனக்குத் திருமணம் நடந்ததையே மறந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது திருமணம் இடம்பெற்ற முதலாவது ஆண்டு தினத்தில் தனது கணவரை மீண்டும் திருமணம் செய்துள்ளார். அவர்களது திருமணம் மரியன் எனும் இடத்திலுள்ள ஹங்றி மதர் பூங்காவில் இடம்பெற்றது. இந்த திருமண செலவிற்கான பணத்தை அவர்கள் பொதுமக்களின் நன்கொடைகள் மூலம் பெற்றிருந்தனர்.

ஜஸ்டிஸ் 10 வயது சிறுமியாக இருந்த போது பாடசாலையில் ஜெரமியை முதன்முதலாக சந்தித்தார். காலப் போக்கில் அவர்களிடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெரமி திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை ஜஸ்டிஸிடம் வெளியிட்டார். தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் முதல் தடவையாக திருமண பந்ததத்தில் இணைந்தனர்.

அணிந்துக்கொண்டுள்ள துணிகள் மூலம்

இனி பேசலாம், பாட்டு கேட்கலாம்

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில், ஆரம்ப காலத்தில் இருந்த ஒரு கண்டுபிடிப்பு பின்னாளில் அதன் பயன்பாடுகள் அதிசயத்தக்கதாக உருமாறி இருக்கின்றன.

இப்போது, துணியை நாம் உடுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டியதில்லை. அணிந்துக் கொண்டுள்ள துணியில் பேசிக்கொள் ளலாம், பாட்டு கேட்கலாம். கிராஃபீ (graphலீnலீ) கொண்டு மின்னணு துணியை (லீlலீணீtroniணீ ணீloth) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அணிய கூடிய கணனி மற்றும் பிற மின்னணு சாதனங்களையும் உருவாக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை இங்கிலாந்து ஆராய்சியாளர் கிரேனியன் உள்ளிட்டோர் கொண்ட சர்வதேச ஆராய்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

ஆடைகளில் உள்ள இழைகளில், ஊடுருவக்கூடிய மற்றும் நெகிழ்வான கிராபீன் எலக்ட்ரோடுகள் (graphலீnலீ லீlலீணீtroனீலீs) உட்பொதிக்கும் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு மின்னணு ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் அணியக்கூடிய மின்னணு ஆடைகள் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இந்த எடைக்குறைந்த ஆடைகள் அணிவதற்கு எளிமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க

கைவிரலை கடித்து தின்ற கார் திருடன்!

அமெரிக்காவின் ஹ¥ஸ்டன் பகுதியில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விலை உயர்ந்த ஆடம்பர மெர்சிடெஸ் காரை ஒரு வாலிபர் ஓட்டி வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் அவரை கைது செய்தனர். அவரது பெயர் கென்சோ ராபர்ட் (20) புளோரிடாவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் அந்த காரை திருடி வந்துள்ளது தெரிய வந்தது. அவரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரிக்க வேனில் அமர வைத்து இருந்தனர்.

பொலிஸ் நிலையம் சென்றவுடன் கைரேகை மூலம் கார் திருடியதை பொலிஸார் கண்டுபிடித்து விடுவார்கள் என கென்சோ ராபர்ட்ஸ் பயந்தார். எனவே, தனது கை விரல்களில் இருந்த மோற்புற தோலை கடித்தார். அத்துடன் சேர்த்து விரலின் சதையையும் தின்று விழுங்கினார். அப்போது வேதனை தாங்க முடியாதல் கண்களில் கண்ணீர் வந்தது. இருந்தாலும் வலியை பொறுத்துக் கொண்டு தனது விரல் சதைகளை கடித்து தின்றார். அக்காட்சி கண்காணிப்பு கெமராவின் வீடியோவில் பதிவானது.

இதற்கிடையே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட கென்சோ ராபர் ட்டை கார் திருடன் என அதி தொழில் நுட்ப ஸ்கேனர் மூலம் பொலிஸார் கண்டு பிடித்தனர்.

இலட்சகணக்கான வெட்டுக்கிளிகளின்
படையெடுப்பால் தவிக்கும் ரஷ்யா

ரஷ்யா நாட்டின் தென் பகுதியில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படை யெடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தென் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன.

இந்நிலையில் இப்பகுதியில் இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.

இதனால் அப்பகுதி முழுவதுமே வெட்டுக்கிளிகளாக தென்படுகின்றன. மேலும் அவைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளத்தை சேதப்படுத்தியுள்ளன.

இதன் காரணமாக சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவின் தென் பகுதியில் அதிகளவு வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் வெள்ளம் காரணமாக இவ்வளவு வெட்டுக்கிளிகள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குளிர்சாதன பெட்டிக்குள் 70 முதலை தலைகள்

அவுஸ்திரேலியாவில் இராட்சத குளிர்சான பெட்டிக்குள் 70 முதலை தலைகளை கண்டுபிடித்து மீட்ட பொலிஸார் முதலைகளை கொன்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் ஹம்ட்டி டூ என்ற பகுதி அமைந்துள்ளது.

அண்மையில் இந்த பகுதிக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள், அங்குள்ள சில கடைகளிலிருந்து தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வந்ததால் அங்கு சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு மிகபெரிய குளிர்சாதன பெட்டிக்குள் சுமார் 70 முதலைகளின் தலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்று வன விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் பெற்று அங்கு வந்த அதிகாரிகள், குளிர்சாதன பெட்டியை சுற்றி மொய்த்துக் கொண்டிருந்த புழுக்களை அகற்றி விட்டு 70 முதலை தலைகளையும் கைப்பற்றினர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.