புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

கவிதை மஞ்சரி

எதிர்பார்ப்பும் ஏமாற்றும்

ஏறாவூர் அனலக்தர்

பதினேழில் பதிவாகும் ‘வோட்டு’ - அதைப்
பாழாக்க வேண்டாங்காண் பாதகர்க்குப் போட்டு!
அதுநாளில் அன்போடு வருவார்! - வலு
ஆள்பார்த்து ‘நோட்டோடு’ குடிபோத்தல் தருவார்!

வாசிக்கு வாலாட்டும் கூட்டம் - வரும்
வாய்ப்பள்ளி வீடெல்லாம் நிறைக்கும்பார் தேட்டம்!
காசிக்கும் போதைக்கும் ஆடும் - சிலர்
கடைகெட்ட தனத்தாலே இரத்தந்தான் ஓடும்!

ஆரைத்தான் நாம்நம்பக் கூடும்- வரும்
ஆசாமி ஊழலைத்தான் செல்வாக்கு மூடும்!
சீரைத்தான் நாம்கண்ட தில்லை - சில
சீதேவி மாராலே ஊரெல்லாம் தொல்லை!

சாத்தானின் கைதன்னில் வேதம் - அது
சமத்தாகத் ‘தர்பாரில்’ சன்மார்க்கம் ஓதும்!
காத்தாள மாமுதலே துணையாம் - இறை
கண்ணோட்டம் இருந்தாற்றான் தீதொன்றும் அணையா?

ஆட்டுக்கு ஓநாயோ காவல்? - பசி
அரிக்காமல் அதுகொள்ளும் வேட்டைக்கு ஆவல்!
நாட்டுக்கு நல்லாட்சி வேண்டும்- வரும்
நடப்பாண்டில் பல்லினமும் வளங்காண யாண்டும்

மதம்பார்த்து மரம்தாவும் மந்தி - வளர்
மாந்தோப்பை மண்ணாக்கும் கிளைதோறும் குந்தி,
தரம்பார்த்து நாம்தேரும் ‘எம்.பி’ - தினம்
தரவேண்டும் வளம்யாவும் காயாமல் கும்பி!

வாக்குறுதி அளிக்கின்ற சீமான் - தன்
வாய்மைக்கு முரணாக வைப்பாரோ ‘கீமா’
வாக்களிப்பில் தெரிவானோரல் சீரால் - நம்
வாழ்வெல்லாம் செழிக்கட்டும் கோமானின் பேரால்!

மிருகமானேன

கவிமணி அ.கெளரிதாசன்

குடிக்கின்றேன் என்றவொரு காரணத்தால் - மனைவி
குறை கூறித் திட்டுகிறாள் நித்தம்நித்தம்
படித்தவன் நான்; பார்போற்றும் பாவலன்தான் - என்
பகுத்தறிவைச் சிலநேரம் மறந்திருப்பேன்!

வடித்திருப்பேன் பலகோடிப் பாக்கள் - இந்த
வையகமே பாராட்டி மேன்மை செய்யும்
குடிமகனாய் வாழ்ந்திடவே ஆசைப்பட்டேன் - தீய
குவலயத்தால் குடிகாரன் ஆக்கப்பட்டேன்!

நீதிக்குத் தலைசாய்ந்தேன்; குரல் கொடுத்தேன் - இந்த
நிலம்வாழும் கொடுமையெனும் களை எடுத்தேன்
சாதிக்கு எதிர்நின்று காப்பளித்தேன் - தனியே
சாதித்தேன்; நல்லவர்க்கே வாய்ப்பளித்தேன்!

போதிக்கும் கூட்டத்தை அணுகிப் பார்த்தேன் - அவர்
போதனைகள் பிழையென்று கடிந்து கொண்டேன்
ஆதிக்கம் கொண்டவரின் அதிகாரத்தை - உண்மை
அறவழியில் பயணிக்க முயன்றுதோற்றேன்!

பெண்குலத்தைக் கண்ணியமாய் பேணிப் பார்த்தேன் - கற்பு
பெரிதென்று, உயிரென்று ஒழுக்கம் காத்தேன்
கண்களெனத் தாய்மையினைத் துதித்து நின்றேன் - வாழ்வில்
கைப்பிடித்த மனைவியையும் மதித்து நின்றேன்!

பண்பற்ற வாத்தைகளை விலக்கி வைத்தேன் - பாரில்
பகைத்தீயை நித்தமுமே விரட்டி வைத்தேன்
“உண்மைக்குப் போராடும் ஒருவர்” ஆனேன்- மது
உட்கொண்ட பின்தானே, ‘மிருகமானேன்!’

நினைவொன்றே போதும்!

பி.ரி. அkஸ், கிண்ணியா - 07

உன்னால் நான்
உருவாகின்றேன்
ஒரு
புதிய மனிதனாக!

உன் சிரிப்பொலிகள்
என்னில் நிறைந்து
கிடப்பதினால்
வாழ்வின் உயிரோட்டம்
புதுவேகம் பெறுகிறது!

மறைந்திருந்த
திறமையெல்லாம்
வெளி வருகின்றன
மங்கை உந்தன்
ஆசீர்வாதத்தால்!

புதிய சிந்தனைகள்
பூவே உன்னால்
தோன்றியதில்
பழைய வாதங்கள்
பறந்தோடிப் போகின்றன

மழுங்கி இருந்த
உணர்வுகள்
மாது உன்னால்
மறுபிறவி எடுக்கிறதே
என்னில்!
உன் குரலோசை
கேட்கும் போதெல்லாம்
குதித்தோடும்
ஜீவ நதியாகிறது
என்
இரத்த நாளங்கள்!

நாளெல்லாம்
உன் நெருடல்
காற்றாக என்னில்
கலந்தோட
ஊற்றாகும்
கவி வெள்ளம்
உன் அழகை
உரத்துச் சொல்கிறது!

நலம் வாழ்ந்து
சரித்திரம்
நான் படைக்க
நங்கை உன்
நினைவொன்றே
போதும் எனக்கு!

இரண்டு கண்ணாடிகள்

எச். எம். மன்சூர், மீராவோடை

என்னை முழுதாய்
கண்ணாடியில் காணத் தவறியதிலிருந்து
அது பற்றியதான
ஏக்கமேதும்
மனதில் கொண்டதில்லை

அதற்கான தருணங்கள்
என்னை கைகூடினாலும்
கண்ணாடி யொன்றில்லாததனால்
அதை நழுவவிட்டுக் கொள்கின்றேன்

இப்போது
வயது பதினாறைத்தாண்டி
விட்டதாக அம்மாவும்
பருவம் எய்தி விட்டதாக அப்பாவும்
சொல்கிறார்கள்

யார் சொல்வது
சரியென்றுகாண
என் உருவை கண்ணாடியில் பார்க்க
தேவையில்லையென தோணுகின்றது
இரண்டு பேருமே
என் கண்ணாடிகளாயிருக்கும் போது

சாஸ்திரங்கள் ஏன்

நிலவன், அச்சுவேலி

சமநிலை பேணி
இயல்பாய் ஓடிய நதிகளை
இஸ்டம் போல் திருப்பியனி!

ஐந்து ரூபாய்க்காய்
ஆயிரம் மரங்களை
அழித்தனி!

உலகம் அழியும்
வெள்ளம் வரும்
புயல் வரும் - என
சாஸ்திரங்கள்
ஏன் சொல்ல வேண்டும்
நீ ஏன்
கேட்கவேண்டும்?

உன் முற்பகல்
வினைகளை
மறந்துவிட்டாயா?

வலுவுண்டு!

மூதூர் ‘கலைமேகம்

கன்னியர் கூடி கதை பேசி
காளையர் நெஞ்சை வாட்டுவிதும்
தன்னை மறந்து கேடு கெட்டு
தாய்க் குலபெருமை போக்குவதும்
பெண்ணிற் கழகோ சொல் மாதே
பேதமை ஏனோ திருந்தாயோ
உன்னில் எத்தனை திறனுண்டு
உனக்கு அதனாற் புகழுண்டு!
*
ஆசை வேண்டும் அமைதியுற
அதற்காய் உன்னை இழக்காதே
மோச வழிதான் காமவெறி
மூழ்கிப் போவது அறியாமை
ஆசை வார்த்தை பேசிடுவார்
அழகி என்றும் புகழ்ந்திடுவார்
நாச வழிக்கு நீசெல்லும்
நாட்டம் வேண்டாம் ஒதுக்கி விடு!
*
நல்லவரோடு உறவு கொள்
நாலு முணர்ந்து நடைபயலு
பல்லை இளித்து வாலிபரை
பக்கம் அணுகவையாதே
சொல்லும் செயலும் சரியானால்
சகலது முனது காலடியில்
வல்லமை ஆண்களில் மட்டுமல்ல
வனிதையர் கையிலும் வலுவுண்டு!

எனக்குள்ளும் உணர்வுகள்

சபிய்யா மன்சூர், இக்கிரி, கொள்ளாவ

எனக்குள் அக்கினிக்குழம்புகள்
ஆயிரம் வெடித்து சிதறிய போது
ஒளியிழந்த சூரியன் ஒன்று
கண் சிமிட்டிச் சிரித்த
உணர்வு

கால் பாதம் தேய்த்து
தேயும் வரை அழுதபோது
கண்ணீர் வர மறுத்த
உணர்வு

இதயத்தை துண்டாக்கி
யார் யாரோ பங்கு போட்ட போது
சிரித்து மழுப்பி கண்சாய்ந்து
கணப்பொழுது

தூக்கம் வேண்டி தலைவைத்த
போது
கவிதை வந்து எழுப்பி
விட்ட உணர்வு
எழுதவென்று பேனாபிடித்து
கவி வடித்த போது-
கற்பனைப் பறவை
சிறகிழந்து தலை குனிந்து
நின்ற உணர்வு

கவிதைக்கும் கண்களிற்கும்
கரும்போட்டி வந்த போது -
கண்களே ஜெயித்து
தூக்கத்தை பரிசளித்த உணர்வு

இரவுக்கும் கவிதைக்கும்
முடிச்சு போட்டு
இனிய தலையணையாக்கி -
கற்பனைப் பூக்களை
மெத்தையிட்டு இதோ -
உறங்குகிறேன்
உணர்விழந்த உணர்வுகளுடேனே!

பொறாமைக் களை

மூதூர் எம். எம். ஏ. அனஸ்

இது...
பக்குவப்படாத மனித உள்ளங்களில்
நன்கு செழித்து வளரும்
நச்சுக்களை

சில வேளைகளில்
நல்லுள்ளப் பரப்பில் கூட
இவை வளர்வதுண்டு
மனிதப் பண்புப் பயிர்களை
அதிகம் தாக்கும் தன்மை
இவற்றுக் குண்டு

மானுடச் சோலைகளின்
வசந்தத்திற்குப்
பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதும்
இதுதான்

அடுத்தவர்களின்
பணம், பதவிகளை ஜீரணிக்க முடியாத
உள்ளப் பொய் கை தான்.
அதிகம்
இதன் விளை நிலமாக உள்ளன

இவற்றை அழிப்பதற்கு.
பொறுமை சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு. போன்ற
நற்குண நாசினிகளையே
பிரயோகிக்க வேண்டும்
இக்களைகள் மட்டும் இல்லையென்றால்
மனிதக் களனி
வசந்தத்தின் அறுவடைகளால் வருஷிக்கப்பட்டு.
ஆங்கே...
அமைதியும் சமாதானமும் சங்கமித்தோடும்

இக்களையின் விளைநிலமாய்
தம் உள்ளங்களை ஆக்கிவிட்டு.
நல்லவர்களாய் வேசம் போடுபவர்களைக்
காலங்கள் காட்டிக் கொடுக்காவிடின்
மானுடமே நாசத்தால் ஆராதிக்கப்படும்

அன்புக்கு நன்றி

வீ.எம்.எலிசபெத், காசல்றி

உன்னாலேயே உருவானேன்....!
ஒவ்வொரு நொடியும்
உனை
உதறிவிட்டு ஓட... ஓட...
உனக்காகவே உருவானேன்!
ஓடி களைத்த
உன் பாதங்களுக்கு,
ஓர் அணியாக....
வாழ்வின் வடுக்களைப் படைத்தேன்,
காணிக்கையாக....!

அன்பிலே முறுவல் பூத்தாய்,
அள்ளி எனை அணைத்தாய்
ஆனந்தமாய் அழுதாய்....!
உன் உள்ளத்தை
உதடுகள் உச்சரித்தன...
“உனக்காக நான் சிந்திய
வியர்வைத் துளிகள்
வீண் போகவில்லை....” என்று

வேர் கொண்ட
வியர்வையின் உப்புச்சுவை - இனி
ஒவ்வொரு வெற்றி கனியிலும்,
உன்னதம் பெற்றுக் கொண்டேயிருக்கும்!!
உன்
அளவில்லா அன்புக்கு
ஆயிரம் கோடி நன்றிகள்...!
அப்பா!!

அவரவர் பக்கம்
 

aமருதங்கேணியூர்
வே.வே. அகிலேஸ்வரன்

கண்ணாம் பூச்சி
ஆடிக் கொண்டிருக்கும்
காதலர்கள் வட்டம்
கடற்கரைதனிலே
சுற்றுலாத் தலமோ

அலையோடு
தலைமுழுகி
நுரை பொங்கும்
நீரை
அள்ளியெடுக்கும்
இளசுகள்

ஆடை நழுவியும்
அங்கம்
மறைக்க மறந்து
கடலோடு விளையாடி
சிறு நண்டு
துரத்தும்
யுவதிகள்

மணல்வீடு கட்டி
விளையாடும்
சிறார்கள்

இத்தனையும் நிகழ்வும்
இதமாய் நிகழ்ந்திட
கடலையே!
வெறுத்து பார்க்கிறாள்
ஒரு பெண்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.