புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

ஆனந்தம் அளித்தாலென்ன?

ஆனந்தம் அளித்தாலென்ன?

- கவிஞர் அ. கெளரிதாசன்

இந்துமா ஆழிமகள் திலக மெளன
இலங்குகின்ற இலங்கையெனும் அழகுத் தீவில்
வந்தேறு குடிகளெனும் வார்த்தை யாலே
வந்ததுவோ துயரங்கள்; வர்க்க பேதம்?
சந்ததமும் சாதி, மதம் மொழிக ளென்று
சாற்றியதால் நட்புணர்வு குலைந்த தாமோ?
‘சிந்தித்தே மூவினமும் மகிழ்வு துய்க்கும்.
செய்தியினைச் சித்திரைநீ, தந்தா லென்ன?’

எல்லோரும் இந்நாட்டு மன்ன ரென்னும்
எண்ணங்கள் இதயத்தில் பூக்கும் வண்ணம்
நல்லபுதுச் சிந்தனைகள் உதிக்க, மாந்தர்
நனிசிறந்த வாழ்வடையும் வழிகள் செய்ய
இல்லாதார் உள்ளவர்கள் என்ற பேச்சு
இல்லாத ஒரு நிலையைச் தோற்று வித்து
‘சில்வாவும், சுலைமானும், சில்வெஸ்ரரும்
சிவாவுடனே கைகுலுக்கச் செய்தாலென்ன?’

இல்லையினி எம் நாட்டில் சண்டை, யென்று
இசைக்கின்ற வார்த்தைகளைச் செவிகள் கேட்க,
‘கல்முனை’ ‘கொழும்பு’ முதல், ‘காலி’ தொட்டுக்-
‘கதிர்காம’ ‘கண்டித்’, ‘திரு மலை’வரைக்கும்
செல்லுகின்ற நிலைவரவும் வேண்டும்! அச்சமும்
சேராமல் பயணங்கள் தொடர, மாந்தர்,
‘அல்லலுக்கு விடைதந்து ஆனந் தத்தை-
அனைவருக்கும் சித்திரைநீ, அளித்தா லென்ன?’

சித்திரையாள் வருகின்றாள்

பாண்டியூர் பொன் - நவநீதன்

தினகரனின்
காதலியாய்
நேயமுற
வாழ்ந்திருந்து
நமக்கெல்லாம்
நல்ல நல்ல
வாழ்வளிக்க
செல்வியவள்
செப்பி - தாம்பூலஞ்
சப்பி - பூ
இதழ் சிவக்கப்
புத்தாண்டுத்
தேரேறிச்
சித்திரையாள்
வருகின்றாள்

திங்களியைத்
தோழியாக்கி - பார்
எங்கு மெழில்
தங்கமாக்கிப்
பங்குனிக்கு
விடை கொடுத்து
தன் பணிக்கு
இடமெடுத்து
விண் முகில்
சேலை கட்டி
வெண்ணிலாப்
பொட்டு ஒட்டி
விண்மீன்களினைப் - பூச்
சரமாகச் சூடி
வியாழ (ன்)
குருநாளில்
புத்தாண்டுத்
தேரேறிச்
சித்திரையாள் - வருகின்றாள்

சத்தியங்களும் பத்தியங்களும்!

ஜே. ஹவாப்தீன்

கிளியின் முகவரியில்
வெளவாலின் குடியிருப்பு
வாயால் விழுங்கி
வாயால் கக்கிய அருவருப்பு

நதியைத் திருப்பி
மண்ணின் ஈரம் ரசித்த இதயம்
குதியால் கசக்கிய
குளுத்திப் பூச்சியாய்

மல்லிகைப் பூவால்
மலர் வீடு செய்துதரும்
மணக்கும் கனவுக்காய்
மண்டையில் அடித்துக்கொண்டேன்
மாட்டுச் சாணத்தை
மறைவில்
முகத்தில் பூசுவது தெரியாமல்

நச்சுமரத்தின் கிளையில்
ஆடிய
ஏமாந்த உயிர்க்கூடு
அதன் வேர்களில் புதைந்து
அப்பாவிச் சுவாசம்...

நாக்கு இத்துப்போன சாக்கு
என்பதை
செத்துப்போன உறவு சொல்லியது
உயிர் போகும் போது
கொத்தும் பாம்பும் அதுதான்

பத்தியங்களை விழுங்கி
பைத்தியப்பட்டம் வழங்கி
சத்தியங்கள் எரிந்து சாம்பராகி
சரித்திரம் அவியும் போது
கண்ணீர்த்துளிகள்
சாட்சி சொல்லும்

ஏகாந்த வலி!

எஸ். எல். எம். ரிலா

நீ இல்லாத பிறகு
எனக்கு ஆறுதல்
உன்னைப்பற்றி எழுதும்
என் கவிதைகள் தான்

என் பொழுதுகள் எல்லாவற்றையும்
உன்னுடனே கழிக்கவிரும்புகிறேன்
ஆனால் என்னிடம் எஞ்சியிருப்பது
உன் நினைவுகள் மட்டும் தான்

உனக்காக எழுதிய கவிதையெல்லாம்
இன்னும் என்னிடம் தான் இருக்கின்றன
உன் நினைவுகளை போல

பூட்டியே வைத்திருக்கிறாய்
உன் இதயத்தை
என்னை வெளியே தள்ளிவிட்டு

நீ தந்த காதல்
இப்பொழுது
காயமாய் வலிக்கிறது

நீ
எதை வேண்டுமானாலும்
பொய் என்று சொல்
என் காதலைதவிர

உனக்காக
இழந்தது அதிகம்
இறுதியில்
உன்னையும்தான்

ஆண் பிள்ளையின் அம்மா

கலாபூஷணம் ஏ. எம். எம். அலி

கைகோத்துப் பிடித்தவனே! மெய்சேர்த்து எடுத்தவனே!
கண்டகுறை என்னவென்று அறியேன் - அக்
காரணத்தை என்னவென்று புரியேன்
பொய்சேர்த்து உறவாடிப் புருஷனென வாழ்ந்திருந்து
ஓடிவிட்டாய் என்மனதைப் புண்ணாக்கி- உளம்
ஒடிந்தழுது ஓய்ந்துவிட்ட பெண்ணாக்கி

கரும்பெனவே நீபிழிந்த காதலினை எனக்கூட்டிக்
களிப்போடு ஒரு சுமையைத் தந்தாய்! - குழந்தைக்
கனியொன்றைத் தரத்தானோ வந்தாய்?
இரும்பெனவே உளம்மாறி என்னையொரு துரும்பாக்கி
எடுத்தெறிந்து போனாயே கடுப்பாய்- என்
இதயமின்னும் கொதிக்குதடா நெருப்பாய்!

கண்ணுறங்க மாட்டாது கவலைகள் தீராது
காலமெல்லாம் வாழ்விழந்து போனேன்- ஒரு
கயவனினால் தனிமரமாய் ஆனேன்!
பெண்ணுரிமை பற்றியெல்லாம் பெரிதாகப் பேசியென்ன
இற்றைநாள் வரையும்நான் தனிமரமே- அடா
இனியும் நான் காய்க்காத தாய்மரமே!

நாளோடிப் போனதுவே நாற்பதுக்கு மேல் அகவை
நான்கண்டு கொண்டேனே நரைகள் - என்
நயனத்தில் என்றும் நீர்த் திரைகள்!
ஆளோடிப் போய்விட்டான் அவனோடி மூபத்து
ஆண்டோடிப் போனதுவே சும்மா! - நானோர்
ஆண்பிள்ளைக் கும்; மட்டும் அம்மா!

காலமெல்லாம் காத்திடுவான் கண்மணிபோல் பார்த்திடுவான்!
காவலரண் போலிருப்பான்! என்றே - நான்
கனவொன்றைத் தான் கண்டேன். அன்றே!
கோலமெல்லாம் அழிந்து துயர் கூடிப்போய் வா (ழ) டவைத்தான்
கொழுநனென வந்து சென்ற கடையன்! - இந்தக்
கொடிபடரத் துணைநில்லாக் கொடியன்

கண்டுபிடித்துத்தொலை!

- றாஹில்

நீ
ஒருதுளி
கொந்தளிக்கிறாய்
கடல்களாகி!

ஏழாம் அறிவு
கிடைத்தால்கூட
முடியாது
உன் கனவுகளை
புகைப்படம்
எடுக்க!

உயிர்
இயக்குகிறது என்கிறாய்
மனச்சிறைக்குள்
ஆயுட் கைதியான
நீ!

கண்ணீருக்குள்
உன்னைக் கண்டுபிடித்து
தொலைத்துவிடு
புன்னகைக்குள்!

நுளம்புக்குக் கூட
அன்பு போதி
வழிகாட்டும்
அது
மின்மினியாகி!

பேதம்
உனக்குள் இருந்தால்
கல்தேட
தேவையில்லை
நீ
உண்டாக்க!

உன் எளிமை
வானம் என்றால்
புகழ் பரவும்
நிலா வரை!

நள்ளிரவு
இருளுக்கு
பயப்படுகிறாய்
ஒரு சொட்டு
வெளிச்சமும் இல்லாத
நீ!

இறை காதல்
சுவனம் வரை
நகர்த்துகிறது
உன் ஆயுளை!

என் உயிரே...!

ஏ. எச். எம். றிழ்வான்

மெல் இதழ்களும்
மெழுகுக் கன்னங்களும்
மைதீட்டிய கண்ணின்
மயக்கும் பார்வைகளும் - தாக்குதடி

வெட்கச் சிரிப்பு
வெகுளித் தனம்
வெள்ளித் தோடிட்ட காதுகள்
வெண் பற்கள் - ஈர்க்குதடி

எழில் கூந்தல்
எரிக்கும் கோபம்
எட்டா நிலா அழகு
எழில் முகம் - பிடிக்குதடி

விண் மீன் விழிகள்
விண் மழைமேக புருவம்
மரகதக் கையின்
மருதாணிச் சிவப்பு - மயக்குதடி

இளஞ் சிவப்பு
இதழ்களில்
இனிமையாக முத்தமிட
இதயம் மெல்லத் - துடிக்குதடி

கனவுகளைத் தந்துவிட்டு
களைந்து சென்றாயடி - என்
கற்பனைகள் சிறகொடிந்து
கண்ணீர் உற்றாய் - சிந்துதடி

வெட்கப்படும் தென்னை!

எஸ். ஜனூஸ்

வெட்டி எறியப்பட்ட
குருத்தோலையின் பிரிவால்
தென்னை மரம் தேம்புகிறது

பூப்பெய்திய சிறுமியின்
பாதாதி கேசங்களில்
பணிந்து கிடக்கும்
குருத்தோலையைப் பார்க்கையில்
பழுத்தோலை சிரிக்கிறது

பூப்பெய்தியவளுக்கு
பாயாகிப் போன
குருத்தோலையால்
பூரிப்படைகிறது தென்னை

இப்போதெல்லாம்
குருத்தொலையை
மரம் வெட்டி
வெட்டி எறியும் தருணங்களில்
தென்னை மரம் ஆசிர்வதிக்கிறது

வழமை போல குருத்தோலையை
பழுத்தொலை சீண்டிக்கொண்டேயிருக்கிறது

ஓலைக்குடிசை இல்லாத ஊரில்
பழுத்தோலையை சுமக்கும் தென்னை
வெட்கப்பட்டுக் கொள்கிறது

போகுமிடம் தெரியுமா?

வாசுகி குணரத்தினம்

மரணத்தின் வலி
புரிந்து கொண்டாயா
அதன் வேதனை
உனக்குத் தெரியுமா.
மரணம் வரும் வரைக்கும்
அது புரிவதில்லை.
சுதந்திரமாகச் சுவாசித்த
மீனுக்கு அது தெரியும்
ஒரு ஆலாவின் வாயில்
சிக்கிச் சிதறுகையில்
மரண வலி புரியும்
ஆலா எனும் வல்லரக்கனால்
செட்டைகள் உடைக்கப்பட்டு
கண்கள் பிடுங்கப்பட்டு
கடைசி நொடி உயிரை
கையில் பிடித்தபடி
ஆலாவோடு சேர்ந்து
பறந்துகொண்டிருக்கும்.
அந்த மீனுக்கு
ஆனது மரணம்
வானத்தில் தான்
தன்னைச் சேர்த்து விடும்
என்பது தெரிந்துவிடும்
ஆனால் மானிடா
உனது மரணத்தின்
வாசற் கதவு
எங்கே உண்டு என்பது
உனக்குத் தெரியுமா
உயிர்போன பின்பும்
நீ எங்கே
என்பது
உனக்குத் தெரியுமா?

டயரி

- பாஹிரா

எதிர்பார்ப்புக்களையும், ஏக்கங்களையும்
சுமையாக்கிய டயரிக்குள்
உயிரின் ஓசை ஓயாமல் ஒலிக்கும்.

அடையமுடியாதவைகள்
அண்மிக்காதவைகளுக்கான
கண்ணீர் அஞ்சலிகள்
காலத்தின் மொழியிலே
கவிதை பாடி நிற்கும்.

முடிச்சுப் போடப்பட்ட
கனவுகள், ஆசைகள்
மீளமுடியாத பொழுதுகளை
உரிமை யாக்கி,
காயங்களின் வலியை
உரத்துக் கூறும்.

தொலைக்கப்பட்ட
சந்தோஷங்களைத் தேடி
சில கணங்கள்,
தொலைந்திடும் இதயம்
வளைத்து நிற்கும்
நிகழ்கால கண்ணாடிக்குள்
என் விம்பத்தின் நிழல்
என்னையே பழிக்கும்.

புதுப்பித்துக் கொண்டு
பயணம் தொடர்ந்தாலும்
உயிர் சுவாசத்தின் உபாதைகள்
உள்ளுக்குள்ளே உயிர்ப்பெடுத்து
உரசிடும் கற்களாகி இதயத்தைத் துளைக்கும்.

பரிணமிக்கும் தருணங்கள்!

‘காத்தான்குடி’ ஜெமஸ்த்

உன்மணம்
என்னில் மணக்க
என் மனம்
தினம் ஏங்கும்
கணம்.....

என் அகம்
நீ நிரம்பியுள்ள
சுகம், தரும்
வாழ்நாள்
யுகம்......

உன் உளப்படியை
ஓரடியேனும்
தாண்டிடமுடியாது
நொண்டியிடும்
நொடிகள்.....

பிரிவுத்
துயரங்கள்

தருகின்ற
பாரங்கள் மலை
ஏறுகின்ற
நேரங்கள்....

நிலம் உன்னை
நிதம் தழுவ,
தொழுகின்ற
விழுதுகளின்
பொழுதுகள்.....

சூடிய சுடிதாரில்
கூடுதல் நொடிகொண்டு
படிமங்களாக
படிந்துகிடக்கின்றன
எனது
நிமிடங்கள்.......

இவை, பிரிவு
ரணங்களின்
வர்ணங்கள்
வர்ணிக்கும்
தருணங்கள்......

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.