புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

Short Story

கொஞ்சம் போல உள்ள மனக் குழப்பத்தோடே நான் அந்தக் கதிரையில் இருந்து கொண்டி ருந்தேன். யோசனையோடு கைவிரல்களால் என் வலப்பக்கத்துக் காதை வருடுவதும், இழுத்து இழுத்துப் பார்ப்பதுமாக இருந்து கொண்டிருந் தேன். காதுச் செவியின் உட்புறத்தே ஒரு மயிர் வளர்ந்து நீண்டிருப்பது கைவிரல்களிலும் அங்கே எனக்கு அகப்பட்டது. உடனே பிடுங்கி விடலாமென்று விரலால் அதைப் பிடித்து இழுத்தேன். மயிர்காலுக்குள்ளே உடனே அது எனக்கு நோக்காட்டியது.

அந்தப் பக்கம் அதனால் விடுத்துவிட்டு, பெருவிரலையும் ஆட் காட்டி விரலையும் மூக்கின் வெளித்துவாரத் தடியில் கொண்டு போய் இரு முறை துடைத் தேன். அதிலும் ஒரு நீட்டு மயிர் மூக்குக்குள்ளா லிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்ததில் விரல்களுக்கு அது எனக்குப் பிடிபட்டது. அதையும் வலுக்க ஒரு முறை இழுத்துப் பார்த் தேன். பிடுங்கியெடுக்க முடியவில்லை. அதுவும் காது மயிர்போல நொந்தது.

இதற்குப் பிறகு அவசரம் காட்டும் அசைவோடு நான் இருந்து கொண்டிருந்தேன். தெய்வம் எப்போது கண்திறக்குமோ என்ற மாதிரியான எதிர்பார்ப்போடு எனக்கு முன்னால் இருந்த மேசைக்கு மறுபக்கத்தில் கதிரையில் இருந்து கொண்டிருந்த அந்தப் பாடசாலை அதிபரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் பள்ளிக் கூட நூலகத்திற்கு பணத் துக்கு விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்த நான் எழுதிய நூல் பிரதிகள் சில அந்த மேசை யின் மேலே சிறிய உயரத்திற்கு ஒழுங்காக அடுக்கி வைத்த கணக்கில் இருந்தது. நான் அந்த அலுவலக அறைக்குள் வரமுன்பாக மரியாதை கருதி வெளி வாசலில்தான் நின்றிருந்தேன். கையில் நான் கொண்டு வந்திருந்த புத்தகக் கட்டு இருந்தது.

“அதிபர் என்னைக் கண்டு விட்டு உள்ளே வாருங்கள்” - என்று சொல்லி தன் தலையை யும் ஆட்டினார்.

அவர் அழைக்கவும் உள்ளே நான் போனேன்.

“வணக்கம்!” என்றேன்.

அவரும் “வணக்கம்” சொன்னார்.

“நான் ஒரு எழுத்தாளன்! நான் எழுதிய புத் தகங்களை பாடசாலை நூலகத்துக்கு விற்பனை செய்யவென கொண்டு வந்திருக்கின்றேன்” என்று சொன்னேன்.

அவர் உடனே தன் கையை, புத்தகத்தை வாங்கி கொள்ள என் பக்கம் பார்த்து நீட்டினார்.

நான் கொடுத்தேன்.

அவர் அதை வாங்கி ஒவ்வொரு புத்தகமாகப் பார்த்தார்.

“நிறைய எழுதியிருக்கிaர்கள்....”

“ம்....!”

“அதிகமாக என்ன விஷயத்தைப் பற்றி இந்தக் கதைகளில் நீங்கள் எழுதினீர்கள்?” என்று என்னிடம் கேட்டார்.

“யுத்தக் காலம் தானே அதைப் பற்றித் தான்!” என்று கதையை நான் தொடங்கிவிட்டு - மகாபாரதக் கவிதையில் சஞ்சையன் பார்த்துச் சொன்ன குருசோத்திர யுத்த கள வர்ணனை போல - சில சம்பவங்களை நான் அவருக்குச் சொன்னேன். அதையெல்லாம் வெவ்வேறு விதமான வாசிப்பினூடாக நான் பெற்றுக் கொண்ட கதை நுணுக்கங்களை பாவித்து இந்தச் சிறு கதைகளை நான் எழுதியிருப்ப தாவும் அவருக்கு நான் விளக்கினேன்.

அவர் கதைப் பரப்புகள் கொண்ட புராணம் கேட்பது மாதிரி நான் சொன்னவைகளை யெல் லாம் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அந்தக் கதைகளையெல்லாம் அவருக்குச் சொல்லச் சொல்ல, அவர் என்னை - இலியட், ஒடிசி, ஹோமர், தாந்தே - போன்றவர் களாக என்னையும் நினைத்து வியப்புடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

என் கதையை அப்படியே கேட்டபடி ஏழடி உயர தியான நிலைக்கு தான் போன மாதிரி நுரை ஈரல் வீங்க அவர் சுவாசிக்கத் தொடங்கினார்.

நான் கதையை எல்லாம் சொல்லிவிட்டு சாப்பாடுமில்லாமல் தூக்கமுமில்லாமல் இருக்கிற வன் போன்ற ஒரு பசித்தவத்தில் - மெலிந்த ஒரு கணக்கிலே அவரைப் பார்த்தேன்.

“நூல்களில் சில பிரதிகளை கொள்முதல் செய்து எனக்கு நீங்கள் உதவவேண்டும்....” என்று கேட்டேன்.

அவர் உடனே புன்முறுவலுடன் மிதந்து கொண்டு, “அதுக்கென்ன, மாணவர்க்குத் தேவையான புத்தகத்தைப் பார்த்து வாங்கு கிறோம்” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதற்கு

“என்ன இவர் இப்படிச் சொல்கிறார்?” - என்றதாய் நினைத்து என் முகத்தில் சுளிப்பு ஏற்பட்டது.

“நான் எழுதிய நூல்கள் அனைத்தும் நாவல், சிறுகதை, கவிதை நூல்கள்தான்...... இவற்றுள்ளே மாணவர் தம் கல்விக்கு உதவும் படியான ஏதும் நூல்கள் அப்படியாய் ஒன்றும் இல்லையே” என்றதாய் ஒரு ‘திக்திக்’ - அடிகள் என் நெஞ்சுக்குள் விழுந்தன.

“நூல்களை வாங்காமல் இவர்கள் விட்டு விடுவார்களோ?” என்ற ஒரு ஏக்கம், என் மனத்துக்குள்ளே குவிந்து நெஞ்சை இறுக்கியது.

“எனது புத்தகத்தை எப்படியும் வாங்குங்கோ வாங்குங்கோ” - என்று அவரின் நெற்றியைப் பார்த்தபடி வார்த்தைகளை நான் மனதுக்குள் ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

நான் மெளனத்துக்குள் விழுந்த அளவில் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த நேரம் போல் அங்கு கல்வி கற்பிக்கிற ஆசிரி யர் ஒருவர் அதிபரின் அலுவலக வாசலிலே வந்து நின்றார். அவரை அதிபர் கண்டுவிட்டு.

அவங்களுக்கு நல்ல பேச்சுக் குடுத்தாச்சோ - என்று கேட்டார்.

“ஓம்......” என்று தன் கையிலுள்ள பிரம்பை பணிவாக கீழே பிடித்தபடி அசைத்துக் கொண்டு அவர் சொன்னார்.

“அவங்களைக் கூட்டி கொண்டு இங்கேயா வந்திருக்கிaர்களோ”

“வெளியே நிக்கிறாங்கள்......”

“அப்ப உள்ள வரச் சொல்லுங்கோ”

“ஓம்......” என்று விட்டு அவர் அங்காலே திரும்பினார்.

“அவங்கள் மொத்தம் நாலு பேர் என்ன”

நாடியை கையால் துடைத்துக் கொண்டு அதிபர் கேட்டார்.

“ஓம்...... சேர்!” என்று விட்டு வெளியே சென்று பெடியன்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே வந்தார் அவர்.

மாணவர்கள் நால்வரும் வரிசையாக உள்ளே வந்து நின்றார்கள். ஆசிரியர் அவர்கள் நிற்கும் இடத்தை விட்டு சற்று தூரமாய்த் தள்ளிப் போய் நின்றார்.

நான் மாணவர்களைப் பார்த்தேன். வெள்ளைக் கால்சட்டை சேட்டுடன், கழுத்துப் பட்டி சகிதமாய் - உறுதியாகத்தான் பார்க்க அவர்கள் எனக்குத் தெரிந்தார்கள். உண்மையில் உருக்கு முஷ்டிகளுடைய அந்த ஆசிரியரிடம் பிரம்படி வாங்கியது போல தாறுமாறான பேச் செல்லாம் வாங்கியது போல அவர்களிடம் தெரியவில்லை. ஆனால் உறங்கின துக்கமொன்று அவர்களின் முகங்களில் தெரிந்தது.

அதிபர் உச்சி முதல் உள்ளங்கால் வரை மாணவர்களைப் பார்த்தார்.

முன்னால் நிரையில் நின்ற மாணவனை தைத்துப் போடுகிற மாதிரியாய்ப் பிறகு ஒரு பார்வை பார்த்தார்.

உன்ரை லோஞ்சென்னடா இப்பிடி! நீ எப்படியாய் அதப் போட்டிருக்கிறாய்! மேல தூக்கி விர்றா லோஞ்சை. கோபம் கொப்பளித்த படி அவர் சொல்ல குரலைக் கேட்டுத் திடுக்கி ட்டுக் கொண்டு - கால் சட்டையைக் கையால், இடுப்புக்கு மேல் இழுத்துவிட்டான் அவன்.

அதிலே இருந்து கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன முறையிலே என்னையும் கட்டா யப்படுத்தியது போல ஒரு உணர்வாயிருந்தது.

பள்ளிக்கூடத்துக்கு வரமுதல், நான் பிரயாணம் செய்து வந்த ஆட் டோவை ஒரு வெளியிடத்திலே நிறுத்தும்படி சொல்லிவிட்டு, அந்த இடத்தில் கான் வழியாய் இறங்கி நான் நின்ற படி, ஒன்றுக்கிருந்து விட்டு வந்திருந்தேன்.

“அவசரத்தில் கால்சட்டைச் சிப்பை மேலே இழுத்து மூடி விடாமல் நான் வந்திருப் பேனோ.....?” என்றதாய் எனக்கு ஒரு ஐயம்.

என்கை உடனே மேசைக்குக் கீழே போய் கால்சட்டை சிப்ரரை சரிபார்த்துக் கொண்டது. இப்படி பாடசாலைக்கு நாங்கள் வந்தால், பழையபடி ஒரு மாணவன் போல வும் நல்ல பழக்க வழக்கமாகவும் நாங்கள் நடந்து கெள்ள வேண்டும் என்று நினைத்து, ஒரு பயமாகவும் எனக்குள் அப்போது இருந்தது.

என்னுடைய நெற்றியிலே ஒரு ‘ஈ’பறந்து வந்து இருந்து கொண்டு நடனமாடத் தொடங்கி யிருந்தது. நான் அந்த ஈயைக் கலைத்துவிட்டு விரல்களைத் தலை முடிக்குள் விட்டு எதையோ தேடிக் கொண்டி ருப்பது போல் சொறிந்தேன்.

“பள்ளிக் கூடம் முடிஞ்சு ஏன்ரா நீங்கள் எல்லாம் ரியூசன் கிளாசுக் குப் போறேல்ல....?” அதிபரின் வாயிலிருந்து இந்தக் கேள்வி வந்தது. அந்த மாணவர்கள் நெற்றி க்குள் உள்ள பயத்துடிப்போடு அதிப ரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னடா நான் கேக்கிறன் ஒண்டும் பதில் சொல்லாம நிக்கி றியள். நீங்களெல்லாம் பள்ளிக் கூடம் விட்டு ரியூசன் கிளாசுக்குப் போகாம எங்கயெல்லாம் போறியள் என்னெ ன்னவெல்லாம் வெளியிடங்களில் போய் செய்யி றியள் எண்டு நானும் அறிஞ்சு வைச்சுக் கொண்டுதான் இருக்கிறன்..... எனக்கு நீங்க செய்யிற பிரளியள் எல்லாம் நல்லாத் தெரியுமடா.....?”

அதிபரின் இத்தகைய கேள்விகளின் எச்சில் - மாணவர்களின் முகத்தில் வீசியடிக்கிற மாத்திரியாய் இருந்தது.

அந்த மாணவர்கள் நால்வரும் ஒரே படகில் பயணிக்கிறவர்கள் போல ஒற்றுமையாய் அவர் முகத்தைப் பார்த்தபடி மெளனமாய் இருந்தார் கள்.

‘நான் வந்த இந்த இடத்தில் இப்படிப் பிரச்சினை அதிகமாக இருக்கிறதே? என்று அப்போது எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

“எனக்கு ஒரு பிரச்சினை என்றால், மாணவர் களுக்கு இப்போது இரண்டு பிரச்சினை! அதிபருக்கு மூன்று பிரச்சினையாயிருக்குமோ?” நேரம் என்னைக் கிண்டித் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தது. “வெளியே நிற்கும் ஆட்டோ வுக்கும் மீற்றர் ஏறிக்கொண்டிருக்குமே.....? இங்கே சிலவேளை புத்தகத்தை நான் விற்றா லும் அந்தக் காசு ஆட்டோ கணக்குக்குத்தான் பிறகு குடுத்ததாகப் போகுமோ.....?”

எனக்குள் எழுந்து கொண்டிருந்த இந்தக் கேள்விகளை வைத்து நான் மூளையை உடைத்துக் கொண்டிருந்தேன்.

அதிபர் மாணவர்கள் மேல் இன்னமும் தன் கல்லெறியும் பார்வையோடுதான் இருந்தார்.

“இந்த முறை இதுதான் கடைசியா உங்க ளுக்கு வோணிங்....... இனிமேல் பட்டு ரியூசன் கிளாசுக்கு போகாமலா இருந்தியளோ - பிறகு உங்களுக்கு நடக்கிறதே வேற..... போவிங்க ளோடா இனிமேப்பட்டு ரியூசனுக்கு நீங்க?” அதிபர் கண்டிப்பும் கடுமையாயும் இப்படிக் கேட்க உயிர்ப்புடன் சுவாசத்தை நிகழ்த்திக் காட் டிக் கொண்டதான ஒரு நிலையில் அந்த மாணவர்கள் “ஓம் சேர் போவம்....” என்று ஒருமைப்படக் கூறினார்கள்.

“போங்கடா கிளாசுக்கு....” என்று ஒரு உறுதி யான தூணாக நிற்பதைப் போலக் கதிரை யிலிருந்து எழுந்து நின்று கொண்டு கல்லெ றியிற மாதிரி அவர்களைக் கலைத்தார் அதிபர்.

மாணவர்கள் சாட்டை சுற்றுகிற சர்வாதி காரியாய் அதிபரை தங்களுக்குள் நினைத்து, அது தங்களது பார்வையில் வெளிப்படாத வண்ணமாயும் அவரைப் பார்த்துத் தலையைக் குணிந்து கொண்டு, அந்த அறையை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் அந்த அறை யால் வெளிக்கிட ஆசிரியரும் அவர்களைப் பின்தொடர்ந்து வெளியேறினார்.

“நிலவிக் கொண்டிருந்த தடைகளையெல்லாம் இப்போ தாண்டியாகி விட்டது. இனிமேல் புத்தக த்தைப் பற்றி அதிபரோடு கதைத்துக் கொள் ளலாம்....” என்று ஒருவித அவசரத்தன்மை யோடு நான் இருந்தேன்.

ஆனால் அதிபரோ மாணவர்கள் தம் கோளாறை ஆராய்வதான கதையை எனக்குச் சொல்லத் தொடங்கினார்.

“இப்படித்தான் சேர்!” என்று என்னைப் பார்த்தபடி அவரது வாயிலிருந்து முதல் சொல் தோன்றியது. அவர் “சேர்!” என்று என்னைச் சொல்லவும் எனக்குள்ளே அதையிட்டு பெரு மையில் மரியாதைச் சுவர் எழும்பிக் கொண்டி ருந்தது.

“சேர்! இவங்கள் ரியூசன் கிளாசுக்குப் போகாமல் அந்த நேரம் வெளியால போய் என்ன எல்லாம் செய்யிறங்களெண்டு உங்களு க்குத் தெரியுமோ....?

இவங்கள் சேர் ரியூசன் கட்போட்டுட்டுப் போய் பியர் அடிக்கிறாங்கள் சேர்..... சிகரெட் பத்திறாங்கள் சேர்...... பாத்தீங்களா இந்த வயசில இந்தப் பெடியன் செய்யிற வேலயள... நாங்களெல்லாம் மாணவனாயிருக் கேக்க படிக்கிறதுகள விட்டுட்டு இந்த வேலயளே அப்ப செய்து கொண்டு திரிஞ்சனாங்கள்.....?

அதிபர் அப்படிச் சொல்லச் சொல்ல, நான் உதடுகளில் புன்சிரிப்புக் காட்டியபடி அவருக்கு நடித்துக் கொண்டிருந்தேன். என் உள்ளத்திற்குள் குளுமையை அடக்கி விடக் கூடிய சூட்டு வெக்கை அப்போது எழும்பிக் செருக்காயிருந்த மரியாதைச் சுவர் இப்போது உடைந்து விழுகிறது போல எனக்கிருந்தது. அன்றைய காலம் மாணவனாயிருந்த காலத்தில் நான் பியர் குடித்தது - சிகரெட் பத்தியது தியேட்டரில் அடல்ஸ் ஒன்லி ஆங்கிலப் படம் - லைட் அணைய விட்டு ரிக்கற் எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் ஒழித்துக் கொண்டு போய் உள்ளே இருந்து பார்த்தது.

எல்லாம் எனக்கு அப்போது ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தன.

ஆனாலும் இப்போதுள்ள என் வயதின் அனுபவத்தில் அவை என் முகத்தில் வெளி ப்படும் நிலையில்லாமல் அதிபரை பார்த்து நானும் அவரோடு சேர்ந்ததான ஒரு பக்குவத்தில் பிற்பாடும் சிரித்துக் கொண்டிருந்தேன். எல்லா வற்றையும் தார் பூசி அழித்த ஒரு நிலையில் வேறுபட்ட ஒரு பார்வையுடன் நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிபர் மதிப்பும் மரியாதையுமாக பிறகும் என்னிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு, தங்கள் பள்ளிக் கூடத்து நூலக பொறுப்பாளரை அவ்விடத்துக்கு அழை த்து அவரிடமும் ஆலோசனையைக் கேட்டதன் பிறகு என்னிடமுள்ள நூல்களில் இரு பிரதிகளை மட்டும் வாங்கினார். வாங்கிய நூல்களுக்குரிய பணத்துக்கு காசோலை அவ்விடத்தே பின்பு எழுதப்பட்டது.

தன் கையெழுத்திட்ட அந்தக் காசோலையை அவர் என்னிடத்தில் நீட்டினார். “ஏதோ இவ் விடத்தில் கொடிகட்டிப் பறக்கப்போகிறது. என் புத்தக வியாபாரம்......” என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு மனதுக்குக் கொஞ்சம் கவலைதான்!

என்றாலும் ‘இதையாவது வாங்கினார்களே’ என்ற அரை வாசித் திருப்தியில் உள்ளம் அமைதிப்பட, அதிபருக்கு நன்றி சொல்லிவிட்டு மிச்ச சொச்சமான என் புத்தகங்களை கையில் தூக்கியடி காவிக் கொண்டு பள்ளிக்கூட கேற் றைத் திறந்து கொண்டு நான் வெளி வீதிப் பக்கம் வந்தேன். வீதிப் பக்கமாக நான் காலை வைத்தபோது துளிர்த்து ஆடும் கொழுந்து போல என் மாணவப்பருவத்து நினைவுகளெல்லாம் எனக்கு நினைவில் வந்து கொண்டிருந்தன.

‘அந்தக் காலம் படிக்கைக்க நான் பண்ணின கூத்து..... இந்தப் பெடியளை விட இன்னும் பெரிய மோசமே....’

அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்க, எனக்குச் சிரிப்பு வந்தது. உடனே எனக் குள்ளாகவே நான் சிரித்துக் கொண்டேன்.

என் பக்கமாக அப்போது ஆட்டோ வந்து நின்றது. “ஒன்டரை மணித்தியாலம் டிலோயப் போச்சு...... ஏன் இவ்வளவு நேரம்.....?” என்று கேள்வி எழுப்பினார் ஆட்டோக்காரர்.

“மினக்கெடுத்திப் போட்டார் பிறின்சிப்பல்........” என்றேன் நான். “இப்படி டிலே டிலே எண்டா..... பேந்து எவ்வளவோ டிலே காசும் சேர்த்து நீங்க பிறகு தர வேண்டியதாகப் போகப்போவுது....”

அவர் சொல்ல எனக்கு இருந்த மகிழ்ச்சியும் சிரிப்பும் போன இடம் எங்கே என்று தெரியாத அளவுக்குப் போய் விட்டது. ஆட்டோவுக்குள் ஏறி நான் ஒரு குகை மிருகம் போல இருந்து கொண்டேன். “புத்தகம் விக்கிற காசெல்லாம் ஆட்டோ ஓட்டத்துக்குக் குடுக்கத்தான் கணக்காயி ருக்கும் போல” என்று ஆட்டோ ஓடுகிற வேகத்துக்குச் சமமாக நானும் காசுக் கணக்கை அப்போது பார்த்துக் கொண்டேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.