புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மலையக வேலையில்லாத் திண்டாட்டம்

கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மலையக வேலையில்லாத் திண்டாட்டம்

இன்றைய பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளில் பெரும்பாலானோர் வேலை யற்றவர்களாக இருக்கின்றனர். ஏறாத் தாழ 40 சதவீதத்தினர் இவ்வாறு இருப்பதாக தெரியவருகிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளின் கல்வித் தரம் குறைவு, சுயதொழிலுக்கான முயற்சி யின்மை தானாக முன்வந்து எந்த தொழிலையும் செய்யாமை, தொழில் பயிற்சி இன்மை, எந்தத் தொழிலையும் தொடர்ச்சியாக செய்யாமை, வேலை செய்கின்ற இடங்களில் சிலர் விசுவாச மாகவும் நம்பிக்கையாகவும் தொடர்ந்து வேலை செய்யாமை.

பெற்றோர்களின் உழைப்பையே நம்பி வாழ்கின்றமை, தீமையான பழக்கவழக்கங்களை சிறு வயது முதலே பழகிக் கொள்ளுதல், சுயமாக ஒரு வேலையை பழகிக் கொள்ளவோ தேடிக் கொள்ளவோ முயற்சிக்காமை போன்ற பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறு வேலையற்று இருப்பவர் களில் பெரும்பாலானோர் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டு விலகியவர்களும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்களும் உயர் தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங் களில் சித்தியடைத் தவறியவர்களும் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு அரசாங்கத் தொழில் முயற்சிகளில் வேலைவாய்ப்பு கிடைப்பது கடினமாக உள்ளது.

அத்துடன் கல்வியறிவு குறைவாக இருப்பதும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தடையாகவுள்ளது.

இச்சமூகத்திற்கு வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வந்து சில கோரிக்கைகளையும் நிபந்தனை களையும் முன்வைத்து அரசாங்கத்தை எமது அமைச்சர்களும், தொழிற்சங் கங்களும் ஆதரிக்கும் போது அதற்கு ஏற்ப வாக்குகளை பயன்படுத்தும் திறமையும் தூரநோக்கும் இருக்க வேண்டும்.

இன்றைய அரசாங்கத்தின் நிலைப் பாட்டில் அரசுடன் இணைந்தே காரியங்களைச் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் கடந்த காலங்களில் வாக்களித்து வாக்குகளை சின்னாபின்னமாக்கிய நிலையை மாற்ற வேண்டும்.

நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். எமக்கென்று ஒரு சந்ததியை மலையகத்தில் உருவாக்க வேண்டும். கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை என்று வெறுமனே கோஷமிட்டால் ஆகப் போவது ஒன்றும் இல்லை செயற்றிட்டங்களை செய்ய வைக்க வேண்டியது மலையக மக்களின் பொறுப்பாகும். அதைத்தவறும் பட்சத்தில் சுட்டிக்காட்டி உடனே தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

ஒரு கட்சியில் இருந்து சில வேலைகள் செய்யாவிட்டதால்தான் நாங்கள் வேறு கட்சிக்கு மாறினோம் என்று கூறும் அதிருப்தியாளர்களும் இருக்கின்றார்கள். ஆனால் கட்சி மாறியதால் கிடைத்த நன்மைகள் என்ன என்பதை நாம் அனைவரும் ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பலர் மாறினாலும் மாறாவிட்டாலும் நன்மையடைவது யார் என்பதை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சில உயர்தர மாணவர்கள் தேசிய கல்விக் கல்லூரிக்குச் சென்றால் போதும் என்ற எண்ணத்தில் உயர்தரத்தில் கல்வி கற்பதால் இறுதியில் அத்துறைக்குப் பொருத்தமான பெறுபேறுகளும் தகுதியும் இல்லாத போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக மாறிவிடுகின்றனர். இறுதி நேரத்தில் தொழிலா கல்வியறிவா என தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

கூடுமானளவு இளைஞர் யுவதிகள் சுயமாக தொழில் ஒன்றை செய்வதற்கு முன் வர வேண்டும். தோட்டப் பகுதிகளில் தாங்களாகவே பல வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும். இருப்பினும் அதனைத் தொடர்ந்து செய்வதற்கு இவர்கள் விரும்புவது இல்லை.

உதாரணமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, பூச்செய்கை, வெல்டிங், மேசன், தச்சு வேலை, அலங்காரப் பொருட்கள் செய்தல், அழகுக் கலை, வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி திருத்தம், புகைப்படக் கலை, வீடியோ, தையல், கைவேலைகள் போன்றவற்றைச் செய்ய முடியும்.

இருப்பினும் இதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் அமைச்சு மட்டத்திலும் அமைச்சர்கள் அல்லது னி. மி. லி. க்களும் செய்யும் போது அவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும்.

எமது அமைச்சர்கள் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு முயற்சிக்கும் போது இவர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

யாருக்கு அரசாங்கத்துடன் பேரம் பேசி வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத் தர முடியும் என தூரநோக்கத்தோடு சிந்திக்க வேண்டும்.

இரா. சிவமணம்...-

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.