ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
ஒன்பது வருடங்களாக அகதிமுகாமில் வாழும் எங்களுக்கு விடிவைப் பெற்றுத்தாருங்கள்!

ஒன்பது வருடங்களாக அகதிமுகாமில் வாழும் எங்களுக்கு விடிவைப் பெற்றுத்தாருங்கள்!

சம்பூர் மக்கள் 800 பேர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு மகஜர்

கடந்த ஒன்பது வருடங்களாக அகதி முகாம்களில் சொல் லொணா துயரங்களுடன் வாழ்ந்து வரும் சம்பூர் மக்கள், புதிய அரசாங்கத்திலாவது தமது பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற எதிர் பார்ப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 800 பேருக்கு மேல் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் சார்பில் இக்கடிதத்தில் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளன.

இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

கடந்த ஒன்பது வருடங்களாக கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் சார்பாக எமது மீள்குடியேற்றம் தொடர்பான கோரிக்கையை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

கடந்த 2006 சித்திரை மாதம் தொடக்கம் இன்றுவரை நாம் இத்துயரத்தை அனுபவிக்கின்றோம். இடம்பெயர்ந்த காலம் தொடக்கம் எமக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு பங்கீடு 2011 மார்கழி முதல் நிறுத்தப்பட்ட நிலையில் எமது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்வு உட்பட அனைத்து தேவைகளுக்கும் போராடுபவர்களாக நாம் வாழ வேண்டியுள்ளது. அத்துடன் பொருளாதாரம், சமூக முன்னேற்றம் அனைத்தும் இழந்த மக்களாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வாழ்வாதாரத்தை முற்றாக இழந்தவர்களாக நாம் நலன்புரி நிலையங்களில் வாழ்கின்ற அதேவேளை, எமது விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிக்கொண்டு இருக்கின்றன. சிறந்த வளமான விவசாய நிலங்களுடன் 218 குடும்பங்கள் வாழ்ந்து வந்த எங்களுக்குச் சொந்தமான குடியிருப்பு காணிகளை அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது சம்பூர் கிராமத்தில் பிரபல்யமான சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் பல்வேறு வளங்களையும் உள்ளடக்கிய 217 ஏக்கர் பரப்பளவுடைய 637 குடும்பங்கள் வாழ்ந்த பிரதான பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

இக்காரணங்களை முன்னிறுத்தியே இன்றுவரை எமது மீள்குடியேற்றம் மறுக்கப்படுகின்றது. இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிக்கு நாம் பலமுறை முறையிட்டும் எமது மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நல்லாட்சிக்கான அறைகூவலை விடுத்து ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட போது நலன் புரி நிலையங்களில் வாழும் நாம் தங்களை முழுமையாக ஆதரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டோம். தங்கள் வெற்றியில் நாங்களும் பங்காளர்களானோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில் தங்களுக்கு இலங்கையிலேயே இரண்டாவது அதிகப்படியான ஆதரவைத் தந்த தொகுதியாக மூதூர் தொகுதி பதிவாகியது. தாங்கள் ஜனாதிபதியால் பதவியேற்ற நிமிடம் முதல் எமது சொந்த மண்ணில் குடியேறும் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் நாம் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றோம். எனவே நூறு நாட்களுள் நல்லாட்சியை நோக்காக கொண்டு தாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளில் எமது மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கையும் அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம் எமது அவல வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எமது சொந்த மண்ணில் வாழ முடியும் என்றும் நம்புகின்றோம். எனவே இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக தங்களின் நேரடிக் கவனத்தை செலுத்தி எமது சொந்த மண்ணில் குடியேறி எமது விவசாய நிலங்களில் விவசாயம் செய்து கொண்டு கடற்றொழிலில் ஈடுபட வழியேற்படுத்துங்கள். எமது வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி சுதந்திரமான அமைதியான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் நிம்மதியான வாழ்வுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி