ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
சின்னமணியின் வில்லிசை ஓய்ந்தது

சின்னமணியின் வில்லிசை ஓய்ந்தது

வடமராட்சி மண்ணில் பிறந்து உலகெங்கும் புகழ் பரப்பிய கலாவிநோதன் கணபதிப்பிள்ளையின் இடத்தை நிரப்ப இனிமேல் எவருமிலர்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம் கலை பயின்றவர் சின்னமணி

வில்லிசை என்றால் உடனே எம் நினைவுக்கு வருபவர் கலாவிநோதன் கணபதிப்பிள்ளைதான். ‘சின்னமணி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் கடந்த 4ஆம் திகதியன்று தனது 79வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவரது மறைவு கலையுலகுக்கு ஓர் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். வில்லிசை நிகழ்ச்சியை வெகு சிறப்பாகச் செய்யும் ஆற்றல் மிகுந்திருந்ததால் ‘வில்லிசை வேந்தன்’ என்ற பெயரையும் பெற்றிருந்தார்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற ஒரேயொரு கலையான இந்த வில்லிசை தொன்மை மிக்க பாரம்பரியமான சிறப்பைக் கொண்டது. இயல், இசை, நாடகம் என்ற மூன்றிலும் இணைந்து விளங்குகின்ற ஊர் இனிய கலையாகவும் வில்லிசை அமைந்துள்ளது.

இந்த வில்லிசைக் கலையின் மூலம் பெரும்புகழ்பெற்று சீரோடும் சிறப்போடும் பார்போற்றும்படி வாழ்ந்தவர்தான் ‘சின்னமணி’ என்று அன்பாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகின்ற க.நா. கணபதிப்பிள்ளை.

“வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்” என்பார்கள். அந்த வகையில் சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டுக் கேட்டால் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்.

இவர் இலங்கையில் மட்டுமல்ல சிங்கப்பூர், மலேசியா, லண்டன் முதலான இடங்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்த்தி நடத்தி புகbட்டியிருக்கின்றார். நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளுக்கு மகனாக 30.03.1936இல் பிறந்த இவர் சிறுவயதிலேயே கலைகள் கைவரப்பெற்று வடமராட்சி பருத்தித்துறை மண்ணுக்கு பேரும்புகழும் பெற்றுக் கொடுத்தார். தமது எட்டாவது வயதிலேயே குழ ந்தைக் காத்தானாக நடித்துப் புகbட் டியதன் மூலம் நாடகத்துறையிலும் ஈடுபட்டு இளம் பராயத்திலேயே கலைஞனாக ஆகிவிட்டார். பெரு முயற்சியும் கலை ஆர்வமும் கொண் டதால் இவர் தமது மாமனாரான கீதாஞ்சலி வி.கே.நல்லையாவிடம் இசைப்பயிற்சியுடன் நடனப்பயிற்சியும் பெற்று முன்னேறினார்.

பின்னர் 1957 ஆம் ஆண்டு இவர் கற்ற கல்விச் சிறப்பினால் ஆசிரியராக நியமனம் பெற்றார். முதன் முதலாக இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப் பாடசாலையில் தமிழும் ஆங் கிலமும் கற்பிக்கின்ற பெரும்பேறு கிடைத்தது. அந்த நேரத்தில் தனது கலையார்வத்தையும் வளர்த்துக் கொண்டார்.

இந்தியாவிலிருக்கும் புகழ்மிக்க நாடகக் கலைஞர்களான டி.கே.எஸ். சகோதரர்களுடன் இணைந்து நாடக நடிகனாகவும் மிளிர்ந்தார். அப்பொழுது இலங்கை வானொலியிலும் சேர்ந்து பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

இவர் தமிழகத்தில் தங்கியிருந்தபோது நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகரு மான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனி டம் கலை பயிலத் துவங்கினார். கலை வாணர் இந்தியாவில் வில்லிசைக்குப் பேர் போன கலைஞர். ஆதலால் அவர் மூலம் பலவித கலைகளைக் கற்றுக் கொண்டதுடன் வில்லிசையையும் ஆர்வத்துடன் பயின்று கொண்டார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்து தம்மிடமிருந்த நாடக உத்திகளையும் வில்லுப்பாட்டின் பக்குவத்தையும் இசை நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். இவரும் ஆர்வத்துடன் பயின்று ஒரு நல்ல கலைஞனாக இலங்கையில் கால்பதித்தார்.

அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் வசித்த திருப்பூங்குடி வி.கே. ஆறுமுகம் என்பவர் வில்லிசைக் குழு ஒன்றை அமைத்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைச் செய்து வந்தார். வில்லிசையில் தேர்ச்சிபெற்று இலங்கை வந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகத்துடன் சேர்ந்து வில்லிசையில் சிறப்புடன் விளங்கினார்.

இவருடைய திறமையைக் கண்ட திருப்பூங்குடி ஆறுமுகம் வில்லுப்பாட் டின் மேன்மையையும் இசை நுணு க்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். அவரையே குருவாகக் கொண்டு அவ ருடைய ஆசீர்வாதத்துடன் தனித்துவமான ஒரு வில்லுப்பாட்டுக் கலைஞராக 02.02.1968 இல் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்ற லில் பெரும் எண்ணிக்கையான அடியார்கள், ஆர்வளர்கள், கலைஞர்கள் முன்னிலையில் வில்லுப்பாட்டு செய்து அரங்கேற்றம் கண்டார்.

நாடகக் கலைஞனாக மிளிர்ந்த இவர் ‘சின்னமணி’ என்ற பெருடன் ஒரு வில்லிசைக் கலைஞராக யாழ்ப்பாணத் திலுள்ள பல்வேறு ஆலயங்களிலும் வில்லிசைக்கத் தொடங்கிப் பேரும் புகழும் பெற்றார்.

இவர் கதைசொல்லும் பாங்கும் அழகும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. வில்லிப்பாட்டுச் செய்யும் போது கதையில் வரும் பாத்திரமாகவே அவர் மாறிவிடுவார். இவருடைய வாயிலிருந்து வரும் தமிழிசை தேனாக இனித்தது. சுருதி பிசகாமல் தாளம் தவறாமல் பாடும் இவரது தன்மை வில்லிப்பாட்டுக்கே ஒரு தனிப்பெருமையைத் தேடித் தந்தது என்றால் மிகையாகாது. வில்லிசைக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்ட சின்னமணி இலங்கையில் தமக்கெனத் தனியிடம் பிடித்துக் கொண்டார்.

இவருடைய புலமையைக் கண்ட இலங்கை அரசு இவருக்கு ‘கலாபூஷணம்’ விருது வழங்கிக் கெளரவித்தது. இவருக்கு கலாவிநோதன், கலைமாமணி, வில்லிசை வேந்தர் என்று பல பட்டங்களும் கிடைத்துள்ளன.

கலைஞர்களினதும் ரசிகர்களினதும் உள்ளங்கள் நன்கு நிறைந்து நீங்கா இடம்பெற்றுவிட்ட இவருடைய புகழ் என்றும் மறையாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி