வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

மீட்பின் மாட்சிமையில் நாமும் முதன்மையாவோம்!

“இடுக்கமான வாயில்” உவமை கூறும் வாழ்க்கைப் படிப்பினைகள்

மீட்பின் மாட்சிமையில் நாமும் முதன்மையாவோம்!

இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:-

இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற் போகும்.

வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது எனப் பதில் கூறவார். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்: முதன்மையானோர் கடைசியாவர்.

விண்ணரசைப் பற்றி ஒரு சொல் உண்டு. நாம் எதிர்பாராதவர்கள் பலர் அங்கே இருப்பர். நாம் அங்கு வருவோம் என்று எதிர்பாராதவர்களும் அங்கே இருப்பர். ஆண்டவர் சொன்ன இடுக்கமான வாயில் என்ற உவமை இதற்கு சிறந்த உதாரணம்.

ஒரு தாய் ஒருமுறை தமது பங்குத் தந்தையிடம் தம் மகனைக் குறித்து கண்ணீர் சிந்தினார். அவன் கெட்டவனாக வாழ்கிறான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லை. குருவானவர் அவரிடம் அவருடைய பிள்ளைக்காகத் தினமும் செபிக்கலாம் என்றார்.

தினமும் அத்தாய் திருப்பலிப்பூசையில் கலந்து கொள்வார். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் அந்த மகனுக்காக வேண்டுவது வழக்கம். ஆண்டுகள் பல கடந்து சென்றன. ஆனால் அவருடைய மகன் மனம் திரும்பவேயில்லை.

ஒரு நாள் அப்பெண் கோவிலுக்கு வரவில்லை. அவருக்கு என்ன ஆயிற்றோ என்று தந்தை கவலைப்பட்டார். மூன்றாம் நாள் அப்பெண் வந்து அழுதார். தந்தையே, என் மகன் மனந்திரும்பாமலே செத்துப் போனான்.

குடித்து விட்டு கார் ஓட்டும் போது பாலத்திலிருந்து வண்டி கீழே ஆற்றில் விழுந்து அவன் இறந்து போனான். அவனுடைய ஆன்மா நரகத்துக்குத்தான் போயிருக்கும்.

தந்தை கண்களை மூடி செபித்தார். அப்போது அவர் ஒரு காட்சி கண்டார். சிலுவையில் மூன்று ஆணிகளில் தொங்கும் இயேசு, இன்றே நீர் என்னோடு விண்ணகத்தில் இருப்பீர், என்று சொல்கிறார். தந்தை கண் திறந்து அம்மா, ஆறு எவ்வளவு ஆழத்தில் இருந்தது? என்று கேட்டார்.

அத்தாய் 6 அடி இருக்கும் என்றார். இவர் அந்த 6 அடியே போதும் இயேசுவுக்கு அவனை மனந்திரும்பச் செய்ய. தைரியமாகச் செல்லுங்கள். உங்கள் மகன் சொர்க்கத்தில் இருக்கிறான் என்றார்.

இந்த கதையை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. முதன்மையானோர் அனைவரும் கடைசியாவர் என்றோ, கடைசியானோர் அனைவரும் முதன்மையாவர் என்றோ ஆண்டவர் சொல்ல வில்லை. கடைசியானோர் முதன்மையாக முயற்சி செய்ய வேண்டும்.

மீட்பைக் குறித்து தெரிந்து கொண்ட பிறகும் கடைசியாகவே இருந்துவிட்டால் நல்ல கள்வனுக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

முதன்மையானோர் தங்களுடைய இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

நான் முதன்மையானவனா, அல்லது கடைசியானவனா? எனது நிலையில் முன்னேற்றம் ஏற்பட நான் அயராது உழைக்கிறேனா? நான் என்ன நிலையில் இருந்தாலும் எனக்கு முன் ஒரேயொரு வழிதான் உள்ளது. இடுக்கமான வாயில். அதனால்தான் ஆண்டவர் பின்வருமாறு கற்பித்தார்:

“இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே” (மத் 7:13-14:லூக் 13:24) இந்தச் சிலருள் நான் ஒருவனா? விசுவாசத்தில் நான் போராடினேனா? (1 திமொ 6:12) இயேசுவின் நல்ல படைவீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொண்டேனா? (2 திமொ 2:3)

அகன்ற வாயில் வழியாக நுழைய என்னைப் பலர் அழைக்க நான் அதைப் புறக்கணித்து குறுகயான இடுக்கமான வாயில் வழியாக நுழைந்தேனா? முன்னைய வாயில் கடைசியானோரின் வாயில்; பின்னைய வாயில் முதன்மையானோரின் வாயில்.

“நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கெண்டேன்” (2 திமொ 4:7) என்று நம்மால் சொல்ல இயல வேண்டும் என்றால் இடுக்கமான வாயிலில் நுழைந்து இயேசுவுக்காகத் துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். வழியை நாம்தான் தேர்ந்து கொள்ள வேண்டும்!

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •