வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010


நாட்டுப்புற மக்களின் வானியல் அறிவு

நாட்டுப்புற மக்களின் வானியல் அறிவு

காலநிலையினையறிந்து வறட்சி, புயல் ஆகிய இயற்கை அழிவிலிருந்து இயற்கையையும் பயிரையும் காத்துக்கொள்வதும் தொன்றுதொட்டு வழங்கிவரும் பழக்கங்களாகும். மனிதன் என்று சமவெளியில் தங்கி பயிர்த் தொழிலில் ஈடுபடத் தொங்கினானோ அன்றே பருவங்களை உணரத் தலைப்பட்டுவிட்டான்.

இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் ஐ.ஆர்.எஸ். வகை விண்கலங்களை விண்வெளியில் செலுத்தித் தட்ப வெப்பநிலையையும், வானியல் மாற்றங்களையும் அறியத் தலைப்பட்டுவிட்டான். இருப்பினும் நமது முன்னோர்கள் பண்டைக்காலந்தொட்டு வானினை இரவும், பகலும் உற்றுநோக்கி கோள்கள், சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள், மேகம், இவற்றின் இயக்கங்களைக் கணக்கிட்டு காலத்தைப் பாகுபாடு செய்தனர்.

மழையின் வருகையைக் கண்டறிந்தனர் என்பதை தொல்காப்பியம் சங்க இலக்கியம், தொடங்கி தமிழ் இலக்கியம் நெடுகிலும் காண்கின்றோம். இதே வானியல் அறிவு நாட்டுப்புற வழக்காறுகளிலும் காணப்படுவதை இக்கட்டுரை இங்கே பதிவு செய்ய முயல்கின்றது.

பண்டைத் தமிழரின் வானியல் அறிவு:

வேளாண்மைத் தொழிலுக்கு அடிப்படையாக இருப்பது சூரியனது ஆற்றலும் அதனால் பெறப்படும் மழையுமாகும். இதனால்தான் தமிழிலக்கியங்கள் சூரியனை பலவாறு வாழ்த்துகின்றன. போற்றுகின்றன. இளங்கோ சிலம்பில் திங்களையும், ஞாயிறையும் போற்றுவார். சூரியனுக்கு வேளாண் மக்கள் நன்றி சொல்ல எழுந்ததே தமிழரின் பொங்கல் திருநாள். இதனை நாட்டுப்பாடலும்

சந்திரனே சூரியனே சாமி பகவானே இந்திரரே இப்ப மழை பெய்ய வேணும்....

என்று வேண்டுவதைப் பார்க்கின்றோம். இந்த உலகமானது அனுச்செறிந்த நிலம், நிலத்தில் ஓங்கிய ஆகாஸம், அதனை தம் தடவி வரும் காற்று, காற்றின் கண் தலைப்பட்ட தீ, தீயினின்று மாறுபட்ட நீர் என்ற ஐவகைப் பூதங்களால் ஆனது என்பது பண்டைத் தமிழரின் முடிந்த முடிவு (புறம்-2)ந்த வான்கோள்களை (நவகோள்கள்) ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்று பெயர்சூட்டி அவற்றின் இயக்க திசைகளைக் கொண்டு வானியல் மாற்றங்களை அறிந்தனர்.

விண்ணிலிருந்து விரிநீர்ப் பெருமழையை இம்மண்ணிற்குக் கொண்டுவர உதவுவது வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.

இலங்கு கதிர் வெள்ளி

தென்புலம் படரினும். (புறம்-35)

தென்திசை மருங்கில்

வெள்ளியோடினும்.... (புறம்-117)

வெள்ளி தென்புலத்துறைய

விளைவயல்

பள்ளம் வாடிய பயனில்

காலை... (புறம்-388)

என்று நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன என்பதை

மிகவானு னெரி தோன்றினும்

குளமீனொருந்தாட்

புகையினும்.... (புறம்-395)

எனும் சான்று பகரும், வெண்மை நிறமுடைய கோள் வெள்ளியாகும். இது மாலை அல்லது காலையில் தான் காணப்படும். இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர். (புறம். 24) பொதுவாகவே விண்மீன்கள் தத்தம் நிலையில் இருக்குமாயின் காலந்தப்பாது மழை பொழியும் என்பதை, மீன் வயினிற்ப வானம் வாய்ப்ப... (பதிற்-90.1) எனும் சான்று காட்டும்.

இவ்வாறே மேகத்தின் இயக்கம், நிலவின் இயக்கம் இவையெல்லாம் வானியலை அறிய உதவியதைச் சங்கப் பாடல்களில் காண்கிறோம். தொல்காப்பியர் கூறும்.... மறுவில் செய்தி மூவகைக்காலமும், நெறியின் ஆற்றிய அறிவன் (தேயம்... புறத்தினை- பாபாண்) என்பது மழை, வெயில், பனி எனும் மூவகைக் காலத்தையும் அறிந்து பெறும் கணியன் என்று பொட்படும்.

இந்த வானியல் சிந்தனைதான் இன்று வேளாண் வானியல் எனப்படுகின்றது. இந்த வானியல் அறிவு பண்டைத் தமிழரிடமும், அறிவியல் அறிஞர்களிடமும், நாட்டுப்புற மக்களிடமும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை பின்வரும் அட்டவணை விளக்கும்.

தமிழர் - மழை மற்றும் பருவகாலம் குறித்த வானிலைப் பாகுபாடு:

தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய மரபு:-

1. இளவேனில்: சித்திரை, வைகாசி - ஏப்ரல், மே

2. முதவேனில்: ஆனி, ஆடி - ஜுன், ஜுலை

3. கார்காலம்: ஆவணி, புரட்டாசி - ஆகஸ்ட், செப்டம்பர்

4. கூதிர்: ஐப்பசி, கார்த்திகை - அக்டோபர், நவம்பர்

5. முன்பனி: மார்கழி, தை - டிசம்பர், சனவரி

6. பின்பனி: மாசி, பங்குனி - ஜனவரி, பெப்ரவரி

அறிவியல் மரபு:

கோடைக்காலம்:- மார்ச்சு, ஏப்ரல், மே

தென்மேற்குப் பருவகாலம்:- ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்

வடகிழக்குப் பருவகாலம்:- ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்.

பனிக்காலம்:- ஜனவரி, பெப்ரவரி

நாட்டுப்புற மரபு:- சித்திரை மழை சின்னப்படுத்தும்

சித்திரை பேய்ஞ்சு கெடுக்கும் பேயாமலும் கெடுக்கும்.

ஆடி அரை மழை ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆனி குறுகினால் அறுபது நாளுக்கு மழை இல்லை.

புரட்டாசி பெருமழை, ஆவணி மாதம் அழுகை தூரல்

ஐப்பசி அடை மழை,

கார்த்திகை கனமழை,

காய்ந்தால் காயும்

கார்த்திகை.

மார்கழி மழை மண்ணுக்கு

உதவாது.

தை தரையும் குளிரும்,

தை மழை நெய்மழை,

தை பிறந்தால் தலைக்கோடை.

மாசிப்பனி மச்சைத் துளைக்கும்,

பங்குனி மழை முழுதுக்கும் நட்டம்.

பங்குனி மழை பெய்தால் பலனெல்லாம் சேதம்.

பனியிருந்தால் மழையில்லை.

இந்த அட்டவணையில் இடம்பெறும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பழந்தமிழர் பருவகாலத்தைக் குறித்துப் பாகுபாடு செய்துள்ள விதம் இன்றைய அறிவியலுடனும், நாட்டுப்புற மரபுடனும் பொருந்தி வருவதைப் பார்க்க முடியும். இந்த ஒற்றுமைக்கான காரணம் இயக்கையைப் பலகாலமும் உற்றுநோக்கி அதன்படி வானியலை கணித்ததே ஆகும் என்பதை உணரலாம். இந்த வேளாண் வானியல் என்பது ஒரு தனிப்பட்ட துறையினுள் அடங்கியதன்று.

இதனுள் வளிமண்டலம் சார்ந்த அறிவியல்கள், மண்ணியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பல்வேறு துறைகளும் அடங்கும். இந்த வேளாண் வானியல் கோளாறுகள், வானிலை மாற்றங்களால் ஏற்படும் பூச்சியினங்கள், நோய்கள், வளிமண்டலம் மாசுபடுதல், மண்ணியல் மாற்றம், பயிர் விளைவால் வீழ்ச்சி மற்றும் திடும்வெள்ளம், காலந்தவறிய மழை, கல்மாரி, புயல் இவற்றை அறிவிப்பது என்று இத்துறை தனது செயல்பாட்டை விரித்துச் செய்து வருகின்றது.

இந்த வானியல் அறிவு காலங்காலமாய் நமது முன்னேர்களிடம் அதாவது மரபு வழியால் நாட்டுப்புற வழக்கில் எவ்வாறு வழக்கிலிருக்கின்றன என்பதை பின்வரும் சான்றுகள் எடுத்துக்காட்டும்.

நாட்டுப்புற வழக்காறுகளில் வானியல் அறிவு:

நாட்டுப்புற வழக்காறுகளில் குறிப்பாக நம்பிக்கை, பழமொழிகளில், வானியல் குறித்த சிந்தனைகள் நிறையக் காணப்படுகின்றன. இந்தச் சிந்தனைகள் நமது முன்னோர்களிடமிருந்து மரபு வழியாகத் தொடர்ந்து வந்தாலும் அதில் காலம், இடம் சூழலுக்கேற்ற வட்டாரத் தன்மையும் காணப்படுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சூரியன், சந்திரன், நட்சத்திரம், மேகம், காற்று, மின்னல், பனி இவற்றின் போக்குகளைக் கொண்டும், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகளின் செயற்பாடுகளைக் கொண்டும் தாவரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டும் மழையின் இயக்கத்தை நாட்டுப்புற மக்கள் கணிக்க முயன்றுள்ளனர். இவற்றை பின்வருமாறு விளக்கமாகக் காணலாம்.

கோள்கள், மேகம், நட்சத்திரம் போன்றவற்றின் இயக்கம்:

கார்காலத்தில் மின்னல் வெட்டினால் மழை வரும்

நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மின்னினால் மழைவரும் என்பது நம்பிக்கை. இதனை,

மாரி மின்னிக்காட்டும் கோடை

குமுறிக்காட்டும்...

என்ற பழமொழி உணர்த்தும் கோடைக்காலத்தில் இடி இடித்தால் மழை வருமென்பது இன்னொரு நம்பிக்கை. வானத்தில் வானவில் தோன்றினால் மழை வரும். அதுவும் மாலை நேரத்தில் கிழக்குத் திசையி லும் காலை நேரத்தில் மேற்குத் திசையிலும் வானவில் தோன்றினால் மழை வரும் என்று நம்புகின்றனர்.

இதனை அந்தி கிழக்கே அதிகாலை மேற்கே.... எனும் பழமொழி உறுதி செய்யும் வானவில்லை இந்திரவில் என்று சங்க இலக்கியம் குறிப்பிடும். இந்திரன் மழையின் கடவுள், நட்சத்திரங்களின் தலைவன், விசும்பின் முதல்வன் என்பதை நாம் இங்கே நினைக்க முடியும்.

இது இல்லாமல் சுண்ட வெயிலடித்தால் மழை வரும். சூரியன், சந்திரனைச் சுற்றி கோட்டை கட்டினால் (ஒளி வட்டம்) மழைவரும். அதிலும்

கிட்டக்கட்டின் எட்ட மழை

எட்டக்கட்டின் கிட்ட மழை

என்பது வழக்கு. இதனை அகல் வட்டம், பகல் மழை.. என்று ஒரு பழமொழி குறிப்பிடும். அந்திச் செவ் வானம் அடைமழைக்குச் சமம், மழை க்காலத்தில் பனி அதிகம் பெய்தால் மழை பெய்யாது என்பதெல்லாம் மழை தொடர்பான வழக்குகளே.

மழையால் ஈழத்து மின்னல் மின்னினால், மேல் திசை, தென் திசை மின்னினால் மழை பெய்யுமென்பது நாட்டுப்புற நம்பிக்கை. தென்மேற்குப் பருவ மழைக்காலம் தான் இங்கே நம்பிக்கை வடிவில் இடம்பெற்றுள்ளது. மலையாளம் மேற்குத் திசையையும் ஈழம் தெற்குத் திசைகளையும் குறிக்கும்.

இதிலிருந்து தென்மேற்கு பருவக்காற்றின் இயக்கத்தை மக்கள் துல்லியமாகக் கணித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழையை இந்த இரு திசைகளின் காற்றின் இயக்கத்தை வைத்தே இன்றைய வானியல் அறிஞர்கள் கணிப்பதை இங்கே நினைக்க முடியும்.

போதிய மழையில் (தென்மேற்கில்) காற்று வீசினால் கோடையிலும் மழையுண்டு. புரட்டாசி 15 க்கு மேல் கீழ்க்காத்து அடித்தால் மழைவரும். இங்கே குறிக்கப்படும் கீழ்க்காற்று என்பது நீர் சுமந்த தாழ்வான மழைமேகம் ஆகும். தவமும் மேகம் தண்ணியுடனும், உயரும் மேகம் நீர் குறைந்தும் காணப்படுவது வானியல் உண்மை. இதனை நெடுநல்வாடை “பெசல் உலந்து எழுந்த” எனும் அடிகளால் குறிப்பிடுவது இங்கு நினையத்தக்கது.

மேகம் கருத்து காற்று வலம் சுழன்றடித்தால் மழைவரும், கொம்பு சுற்றி காற்றடித்தால் மழைவரும் என்பதெல்லாம் நாட்டுப்புற வழக்கு. மழையும் காற்றும் வலம் சூழுமாயின் அவை மிகுதல் இயல்பு இதனை நெடுநல்வாடை “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ” என்று குறிப்பிடும். இந்த வானியல் ஆய்வும் ஏற்றுக்கொள்கிறது.

பறவை, பூச்சி விலங்கினங்களின் செயல்பாடுகள்:

சேற்று நண்டு வளையை அடைதல்”

“தவளை கத்துதல்”

“தோகை மியில்கள் மோகமுடன் ஆடுதல்”

“சிற்றெறும்பு வாயில் இரை கொண்டுபோதல்”

“சூகை எறும்பு குழிவாயில் கரை கட்டுதல்”

“சில் வண்டு கத்துதல்”

“மான் தன்குட்டியைத் தழுவி அழைத்தல்”

“வெள்ளிப்பூச்சியும் கும்மிடு பூச்சியும் பறத்தல்”

“செம்மறி ஆடுகள் கூட்டமாக வலம் வருதல்”

“பருந்து கூட்டமாக வட்டமிட்டுப் பறந்தால்”

“கழுதை தரையில் மல்லாக்கப்படுத்துகத்தினால்”

“கோழிகள் மல்லாக்கப்படுத்துப் புரண்டால்”

“ஈசல் பறந்தால்”

“வெள்ளைக்கொக்கு கூட்டாகப் பறந்தால்”

மழை வருமென்பது நாட்டுப்புற நம்பிக்கை இங்கே சொல்லப்பட்ட பறவை முதலான உயிரினங்களை ஆதாரமாகக் கொண்ட அனைத்துக் கருத்துக்களும் அவ்வுயிரினங்களை வானிலையை முன்னுணரும் ஆற்றல் வாய்ந்தவை என்னும் கருதுகோளை ஆதாரமாகக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

எறும்புகள் கால உணர்வு உள்ளவை என்பன போன்ற கருத்துக்கள் அறிவியல் நூல்களில் காணப்படுகின்றன. அவை மக்கள் கூறியுள்ள கருத்துக்களோடு ஓரளவு தொடர்புள்ளவை. ஆயினும் மக்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் சரியானவையா என்பது ஆய்வுக்குரியது என்பார் ஆறு. இராமநாதன் இருப்பினும் மேற்சொன்ன மக்கள் வானியல் அறிவு மழை வருவதனை முன் அறிவிக்கும் அறிகுறிகளே என்பதை மழைக்காலங்களில் நாம் காண முடியும்.

தாவரம் போன்ற பிறவற்றின் அறிகுறிகள்:

“மாங்காய் காய்த்தால் மழை மங்கும்

புளியங்காய் காய்த்தால் மழை பொங்கும்

கோழிக்காளான் பூத்தால் மழையில்லை”

என்பன வழக்காறுகள் தமிழகம் முழுவதும் வழங்கி வருகின்றன. இவையெல்லாம் இயற்கையை மேலும், மேலும் உற்றுநோக்கிக்கண்ட உண்மைகளே எனில் மிகையாகாது. ஏனெனில் வானியல் அறிஞர்கள் கணித்துச் சொல்லும் வானியல் அறிவிப்புக்கள் கூட பல நேரங்களில் பொய்த்துப் போவதைப் பார்த்திருக்கின்றோம். இதனால் “மகப்பேறும் மழைப்பேறும் மகராசனே அறியான் என்ற வழக்காற்றில் உண்மையிருப்பது போல் தோன்றும்.”

பழந்தமிழர், அறிவியலார், நாட்டார் ஆகிய மூவரும் காலப்பாகுபாடும், மழை வருகையையும் குறித்துச் சொல்லியுள்ள கருத்துக்கள் ஏறத்தாழ ஒற்றுமையுடயதாகவே இருப்பதை இக்கட்டுரை பதிவு செய்கின்றது. மேலும் மழைப் பொழிவு குறித்து நாட்டுப்புற வழக்காறுகளில் காணப்படும் வானியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனையுடன் நெருங்கிய உறவுடையதாகவே காணப்படுவதையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »