புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
பாகுபாடின்றி பணியாற்றுவேன்

பாகுபாடின்றி பணியாற்றுவேன்

வரவு செலவுத்திட்ட உரையில் மேயர் நிசாம் காரியப்பர் உறுதி

கல்முனை மாநகர சபையின் 2014அம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டத்தை சபை அமர்வில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:

“எனக்குக் கிடைத்துள்ள மேயர் பதவி அமானிதமாகவே தரப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே மாநகர சபையின் சகல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒரு மேயராக - பொறுப்பேற்றுள்ள எனக்கு எந்தவொரு பாகுபாடுமின்றி செயற்பட வேண்டிய கடமையும் தார்மீகப் பொறுப்பும் உள்ளது.

எக்காரணம் கொண்டும் எந்த உறுப்பினருக்கோ எப்பிரதேச மக்களுக்கோ விசேட சலுகைகளோ பாகுபாடுகளோ காட்டப்பட மாட்டாதென்ற உத்தரவாதத்தையும் உறுதி மொழியையும் இச்சந்தர்ப்பத்தில் தர விரும்புகின்றேன். ஏனெனில் குர்ஆன் ஹதீஸில் உருவாக்கப்பட்ட கட்சியின் கொள்கைகளின் படி ஏனைய சகல தரப்பினருக்கும் நிதிகளை சமமாக பங்கிடும் ஒரு நீதியான ஆட்சி கல்முனை மாநகர சபையில் நடக்கிறது எனப் பேசுமளவுக்கு எமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதன் மூலமே நாம் முன்னுதாரணமாக நடக்கின்றோமென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தலைவர் மர்ஹும் அஷ்ரப், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கும் பொழுது கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சி வரவேண்டும். அந்த ஆட்சி நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும் ஓர் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்.

அந்த வகையில் சகலரதும் ஒத்துழைப்புடன் இந்த வரவு - செலவுத் திட்டம் நிறைவேற வழிவகுத்து தந்துள்ள எமது கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் மக்கள் சார்பிலும் என் சார்பிலும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி பகர்கின்றேன். ஏனெனில் இன்று நாட்டில் மட்டுமல்ல சர்வதேச நாடுகளிலும் கல்முனை மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் எப்படி அமையப் போகின்றது என்பது பற்றி கவனம் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பாராளுமன்ற வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் கூட இது போன்ற ஆர்வம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அந்த வகையில் உண்மையிலேயே நான் பெருமைப்படுகின்றேன். கல்முனை மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் பின்னணியில் தான் நான் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.

எமது கல்முனை மாநகர சபையின் கொள்கை, குறிக்கோள் நோக்கங்கள் மற்றும் 2014 ஆம் ஆண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான திட்டங்களை உள்ளடக்கி இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 171 தொடக்கம் 179 வரையான பிரிவுகள் மூலம் மாநகர சபை முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையிலேயே இந்த வரவு - செலவுத்திட்டத்தை சபையின் அங்கீகாரத்திற்கமையச் சமர்ப்பித்துள்ளேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.