புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

அருகி வரும் அரிய வளம்

நாளை (22) உலக நீர் தினம்

அருகி வரும் அரிய வளம்

இலவசமாகவும் எளிதாகவும் கிடைப்பவை எவையும் உலகில் பெறுமதியானவையாய் பார்க்கப்படுவதில்லை. இயற்கையாகவே பரந்த நீர் வளத்தைக் கொண்ட நமது நாட்டில் குடிநீரின் நிலையும் இவ்வாறாகத்தான் இருக்கிறதெனலாம். இரத்தினம், காரீயம், இல்மனைற், வெண்களி போன்ற வளங்களைப் போல் அவற்றிலும் மிகைத்த முக்கியத்துவம் கொண்ட இயற்கை நீர்வளம் பற்றி நாம் எத்தகைய அக்கறையைக் கொண்டிருக்கிறோம் என்பது கேள்விக்குறியாகும்.

நம் நாட்டில் சுத்தமான குடிநீர் இயற்கையாகக் கிடைத்து வருகிறது- உலகில் பெரும்பாலான நாடுகள் உவர் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரையே குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றன. நீருக்காகப் பணம் செலவழிக்கப்படுகிறது. வறள் பிரதேசங்களில் வாழும் வறிய மக்கள் நீருக்காக நெடுந்தூரம் பாத்திரங்களுடன் தினசரி பயணிப்பது இன்னமும் உலகில் காணப்படுகிறது.

நம் நாட்டிலும் சில பிரதேசங்களில் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகிக்கும் நீரை சேமித்து வைத்தே பல பிரதேசங்களில் அன்றாடத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இன்று நாமும் போத்தல்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரின் பாவனையாளர்களாக மாறும் நிலைக்கு மெதுவாக ஆட்பட்டு வருகிறோம்.

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டுள்ள எம் நாட்டில் நீர் எதிர்காலத்தில் ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுக்கும் வாய்ப்புள்ளது. நகரமயமாக்கல், சனத்தொகைப் பெருக்கம் என்பன இவ் அபாயத்தை விரைவுபடுத்தலாம் எனக் கருத இடமுண்டு. வீட்டுக்கொரு குடிநீர்க் கிணறு காணப்பட்ட ஊர்களில் அருகருகாக வந்துவிட்ட நிலக்கீழ் மலக்குழிகளால் இன்று கிணறுகள் பருக முடியாதவையாக சேதமடைந்து வருகின்றன.

 இதனால் குழாய்க் கிணறுகளும் விற்கப்படும் நீருமே பெரும்பாலும் எமது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. குழாய் நீரின் எதிர்காலம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது. அதை நாம் எத்தனை பொறுப்போடு பயன்படுத்தி வருகிறோம்? என்பன இன்று முக்கியமான கேள்விகளாகும்.

பூமிக்குக் கீழுள்ள சுத்தமான நீர்ப்படுக்கையானது நாம் பயன்படுத்துகின்ற வேகத்தில் மிக வேகமாகத் தீர்ந்து கொண்டு வருகிறது. துணி துவைக்க, பாத்திரங்கள், வாகனங்கள் கழுவ என இவை பாவிக்கப்படுவது முற்றிலும் பொறுப்பற்ற நிலைமையாகும். தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள குழாய் நீர் கட்டடப் பணிகளுக்காகப் பெறப்படுமளவிற்கு நீர் தொடர்பான சமூக விழிப்புணர்வு மந்தமாகவுள்ளது. வீடுகளில் சேமிக்கப்படும் நீர் பணத்திற்குப் பெறப்பட்டது என்ற அடிப்படையில் விரயம் செய்யப்படும் தன்மைகளையும் நிறையவே காணலாம்.

 பாடசாலைகளில் மாணவர் நீர் பருகுமிடங்களில் விரயமாகும் நீர் சிற்றாறு போல நிறைவதைக் காணலாம். பொது நீர் பருகுமிடங்கள், பொதுக் குளியலறைகள், பொதுக் கழிப்பறைகள், அலுவலகங்களில் திறக்கப்படும் குழாய்கள் சிரத்தையாக மூடப்படுவதில்லை. குழாயைத் திறந்து வைத்தபடி பல்துலக்குவது, நீண்ட உரையாடல்களில் ஈடுபடுவது, செல்லிடத் தொலைபேசிகளில் மூழ்குவது நீண்ட நேரக் குளிப்பு என்பன இன்று வெகு சாதாரணமாகிவிட்டன. நீர் இலவசமான பொருள் என்ற மனோபாவத்தின் வெளிப்பாடுகளே இவையாகும்.

இந்நிலை நீடித்தால் மிக விரைவில் நாமும் நாடும் நீரின் பெயரால் பெருந்தொகைப் பணத்தை செலவிட வேண்டிய ஒரு சூழல் தோன்றலாம். அத்தோடு நீர்த்தட்டுப்பாட்டையும் நாம் எதிர்நோக்க வேண்டி வரலாம். இதனால் முழுநாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். நீரை வீணாக்கும் ஒவ்வொருவரும் முழு உலகிற்கும் சேதமிழைப்பவர்களாவர்.

நீரை வீணாக்குவது போலவே நீர் மாசடைதலைத் தடுப்பதும் நீர்பற்றிய அக்கறையாகும். அழுக்கடைந்த நீர் மூலமே வாந்திபேதி, வயிற்றுளையு உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. டெங்கு போன்ற இன்று நம்நாட்டில் மோசமான அனுபவங்களைத் தந்துள்ள நோய்கள் தேங்கி நிற்கும் நீரிலிருந்து ஆரம்பமாகின்றன. அசுத்தமடைந்த நீரில் காணப்படும் நுண்ணங்கிகள் உணவுவழி பல நோய்களைப் பரப்புகின்றன. எனவே, நீர்த் தேவையில் பெரிதும் தங்கியிருக்கும் நாம் நீர்ப்பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாவோம்.

சுகதேகிகளான மக்களே ஒரு தேசத்தின் உண்மையான வளமும் செல்வமுமாகும். சுத்தமான நீர் தொடர்பிலான அக்கறை புறக்கணிக்க முடியாததாகும். தொழிற்சாலைகளும் இரசாயனக் கழிவுகளும் மீள் சக்கரத்திற்குட்படுத்த முடியாத பகுதிகளும் அதிகரித்து வரும் இன்றைய விஞ்ஞான தொழிநுட்ப சூழலில் சுத்தமான நீர் பலத்த சவாலை எதிர்நோக்கியுள்ளது. சொற்பமாக உள்ள நன்னீர் நிலைகளும் மாசடைந்து இயற்கை நீர்வளம் தேய்வடைந்து செல்லும் ஒருசூழல் இன்று முன்னகர்ந்து வருகிறது-

பசுமையான காடுகள் வறண்டு பறவைகள், விலங்குகள் ஒழிந்து மனிதர்கள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் முடங்கி, மக்கள் நீருக்கலையும் வறண்டதொரு பாலைவனமாக இவ்வுலகம் மாறுவதை அறிவுள்ள எந்த ஒருவராலும் அனுமதிக்க முடியாது. நமது அன்றாட செயற்பாடுகளில் ஒரு கணம் நாம் இதனை நினைத்துப் பார்த்தாலேயே நடந்து கொண்டாலேயே சுத்தமான குடிநீரின் எதிர்காலம் தொடர்பான சவாலின் பாதியைக் கடந்துவிட முடியும். பெருகி வரும் சனத்தொகை, அதிகரித்து வரும் தேவை போன்றவற்றைக் கவனத்திற் கொள்வதும் அடுத்த சந்ததியிடம் வளமான உலகைக் கையளிப்பதும் வாழும் தலைமுறையின் கடமையென உணர்வதும் இன்றைய காலத்தின் அவசியத் தேவையாக உள்ளது.

நீரைக் காப்பது உலகைக் காப்பதாகும்.

ஜே. ஃபாத்திமா மிஃப்றஹா

தரம் – 7 ஏ

மீரா மகளிர் மகாவித்தியாலயம்

காத்தான்குடி – 06


ஆர். நிரன்ஷன்
தரம் - 07 பி, கே/ தெ/ ஸ்ரீகதிரேசன் தமிழ் மகா வித்தியாலயம், தெரணியகலை.
ஆர். ரீமா,
தரம் - 02 ஏ ப/ வெளிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம், வெளிமடை.
எஸ். துசியந்தன்
சின்னமலர் பாலர் பாடசாலை
லுணுகலை.
முஸ்லிஹா ஜவாஹிர்,
தரம் - 10 பைதுல் ஹிக்மா அரபுக் கல்லூரி, காலி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.